கோவை பஸ் நிலையத்தில் கைக்குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தலைமறைவான இளம்பெண்கள்

 Wednesday, March 14, 2018  09:32 AM

கோவை காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு பஸ்நிலையத்துக்கு நேற்று காலை 7 மணியளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க 2 இளம்பெண்கள் இருந்தனர். அந்த பெண்களில் ஒருவர் ஒரு பச்சிளம் குழந்தையை கையில் வைத்திருந்தார்.

அந்த பஸ் மேட்டுப்பாளையம் ரோடு பஸ்நிலையத்துக்கு வந்தது. அவர்கள் அங்கு இறங்கி பஸ் நிலையத்தில் நின்ற ஆண் பயணி ஒருவரிடம் கைக்குழந்தையை கொடுத்து சிறிதுநேரம் பார்த்துக் கொள்ளுங்கள். கழிவறைக்கு சென்று விட்டு வந்து குழந்தையை வாங்கிக் கொள்வதாக கூறி உள்ளனர்.

அதை நம்பி அந்த பயணி கைக்குழந்தையை வாங்கி வைத்திருந்தார். அவர் சிறிதுநேரம் காத்திருந்தும், அந்த பெண்கள் வர வில்லை. இந்த நிலையில், அங்கிருந்து காந்திபுரம் நோக்கி ஒரு டவுன் பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில், கைக்குழந்தையை கொடுத்த இளம்பெண்கள் 2 பேரும் ஏறி உள்ளனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பயணி, இளம்பெண்களை அழைத்தபடி பஸ்சின் பின்னால் ஓடி உள்ளார். அதற்குள் டவுன் பஸ் வேகமாக சென்று விட்டது.

இதையடுத்து அந்த பயணி, அங்கிருந்தவர்களின் உதவியுடன் சாய்பாபா காலனி போலீஸ் மற்றும் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர் கள், கைக்குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேலிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த கைக்குழந்தை, குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட கைக்குழந்தை பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஆகும். அந்த குழந்தை 2 கிலோ எடை உள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து இந்த ஆண்டு 3 குழந்தைகள் மீட்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டன என்றனர்.

இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைக்குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தலைமறைவான 2 இளம்பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர். கைக்குழந்தையை பஸ் நிலையத்தில் பயணியிடம் கொடுத்து விட்டு சென்ற இளம்பெண்கள் யார்?. அது அவர்களின் குழந்தை தானா? அல்லது கடத்தி வந்த குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தப்பி சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup