டிரெக்கிங் பயணத்தில் மலர்ந்த காதல்: குரங்கணி காட்டுத் தீயில் கருகியது

 Wednesday, March 14, 2018  09:21 AM

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய மற்றொரு காதல் தம்பதி டி. விபின் - திவ்யாவின் காதல் மலர்ந்ததே இதுபோன்றதொரு மலையேற்றப் பயிற்சியின் போதுதான்.

குரங்கணி மலையேற்றப் பயிற்சிக்குச் சென்று காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் டி. விபினும் அவரது காதல் மனைவி திவ்யாவும் அடங்குவர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவுப் பகுதியைச் சேர்ந்த எம்.இ. பட்டதாரியான திவ்யாவுக்கு மலையேற்றப் பயிற்சி செல்வது மிகவும் பிடித்தமானது. அதுபோன்றதொரு மலையேற்றப் பயிற்சியின் போதுதான் விபினை சந்தித்தார். காதல் மலர்ந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திவ்யாவும், அவரது பெண் தோழிகளும் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகளுக்கும் மலையேற்றப் பயிற்சி செல்வது வழக்கம். திருமணத்துக்கு முன்பு வரை சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் திவ்யா பணியாற்றி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக கிணத்துக்கடவுக்கு இடம்பெயர்ந்த விபின் - திவ்யா, சொந்தத் தொழில் செய்து வந்தனர்.மலையேற்றம் சென்றது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், இது முதல் முறையல்ல. பல முறை மலையேற்றம் சென்றுள்ளனர். மலைகளுக்குச் செல்வதை தம்பதியர் மிகவும் விரும்பினர் என்கிறார்கள்.

மகளிர் தினத்தை முன்னிட்டு, திவ்யாவும், தீக்காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த நிஷாவும் இந்த மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மலையேற்றப் பயிற்சியின் போது மலர்ந்த காதல், குரங்கணி மலையேற்றத்தின் போது கருகியதாகக் கூறி உறவினர்கள் கலங்குகின்றனர்.Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup