கோவையில் பழங்குடியின மக்களுக்கு தாகம் தீர்த்த Whatsapp GRoup

 Tuesday, March 13, 2018  08:30 PM

தகவல் தொழில் நுட்பத்தின் உச்சபட்ச எல்லை வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ் புக் போன்றவை. அதை வைத்து தூக்கம் தொலைத்து இளைய சமுதாயம் எதையெதையோ செய்து கொண்டிருக்க சிறுவாணி விழுதுகள் என்றொரு வாட்ஸ் அப் குழு தண்ணீரில்லாமல் தவித்துக் கொண்டிருந்த பழங்குடியின கிராமத்திற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து அடுத்த கட்டத்தை நோக்கி நுழைந்து கொண்டிருக்கிறது.

அந்த வாட்ஸ் அப் நண்பர்கள் குழு இரவு நேரத்தில்தான் இயங்குகிறது. ‘கல்கொத்தி பழங்குடி கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வருவதில்லை. அவர்களுக்கு உதவ எல்லோரும் வாருங்கள்!’ என அழைப்பு விடுக்கிறார் அட்மின். ‘இதோ வந்துவிட்டேன். வந்து கொண்டிருக்கிறோம்!, ‘இன்னமும் 10 நிமிடத்தில் ரீச் ஆகிவிடுவோம்!’ என்றெல்லாம் வாட்ஸ் அப்பிலேயே பதில்கள் புறப்படுகிறது.

இரவில் அத்தனை பேரும் குழுமியிருப்பது, போர்வெல் பணிகள் செய்வது, மோட்டார் பழுது, பிளம்பருக்கு அழைப்பு, எலக்ட்ரீசியன் வரவழைப்பு எல்லாமே வாட்ஸ் அப்பிலேயே பகிரப்படுகிறது. இறுதியில் ‘மோட்டார் வேலைக்கு ஆகாது; வெளியில் யாரிடமாவது ஸ்பான்சர் பெற வேண்டும்!’, ‘மும்முனை மின் இணைப்பு வேண்டும்!’ என்றெல்லாம் தகவல்கள் வாட்ஸ் அப்பில் புறப்படுகிறது. ஊராட்சி அலுவலக தனிஅலுவலர் வாலண்டியராக வாட்ஸ் அப்பிலேயே வருகிறார். புதிதாக மோட்டார் பம்ப்செட், குழாய்கள் நான் வாங்கித் தருகிறேன் என்கிறார். அதேபோல் மோட்டார், பம்ப் செட் குழாய்கள் வருகிறது. அந்த தகவல் வாட்ஸ் அப்பிலேயே தகவல்கள் பறக்கிறது.

அடுத்தநாள் இரவு அதை பொருத்தும் பணி பழங்குடியின கிராமத்தில் ஆரம்பிக்கிறது. இந்த தகவல்களும், அதில் உள்ள சிரமங்களும் அங்குல, அங்குலமாக வாட்ஸ் அப்பிலேயே நகர்கிறது விஷயங்கள். இறுதியில் விடியற்காலை ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் பீறிடுகிறது. மகிழ்ச்சி கொண்டாடுகிறது வாட்ஸ் அப் நண்பர்கள் குழு.

பிறகு 2 நாட்கள் கூட ஆகவில்லை. மீண்டும் மோட்டார் பழுது. தண்ணீர் வரவில்லை. மீண்டும் களமிறங்குகிறது குழு. 2 ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை. மற்றொரு கிணற்றில் முயற்சித்து பார்ப்போம். அதுவும் நடக்கிறது. இதற்கான உதவிகளும் வாட்ஸ் அப் மூலமே செல்கிறது. இந்த வாட்ஸ் அப் குரூப்பில் வேறு சங்கதிகள் ஃபார்வேர்டு வரும்போது டென்ஷன் ஆகிறது இக்குழு. உடனே அந்த பெயரை நீக்கு என அட்மினுக்கு உத்தரவு பறக்கிறது. அட்மின் தயவு தாட்சண்யமின்றி அந்த நபரை குழுவிலிருந்து நீக்குகிறார். இந்த வாட்ஸ் அப் குழு முழுக்க இங்குள்ள இயற்கை சூழல், மக்கள் நலனுக்காக மட்டுமே பகிரப்படுகிறது. அவையல்லாத விஷயங்கள் கண்டிப்பாக இதில் பகிரக்கூடாது என வாட்ஸ் அப்பிலேயே கட்டளை பிறக்கிறது.

இந்த விஷயங்கள் ஒரு உதாரணத்திற்குத்தான். பழங்குடியின கிராமத்திற்கு உதவுவது போலவே ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுத்தல், நீரோடையை ஆக்கிரமித்த நிலச் சுவான்தார்கள் மீது போலீஸில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பது, சாலையோரம் மரம் நடுதல், அதற்கு நாள்தோறும் தண்ணீர் விடுதல் என சகல விஷயங்களையும் வாட்ஸ் அப் உதவியுடனே செய்து கொண்டிருக்கிறது சிறுவாணி விழுதுகள் என்ற வாட்ஸ் அப் நண்பர்கள் குழு.

கோவையில் நொய்யல் ஆறு உருவாகி ஓடிவரும் முதல் கிராமமான சாடிவயலில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் பலரும் ஒன்றிணைந்து இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இது குறித்து இந்த குழுவின் தலைவர் நல்லூர் வயலைச் சேர்ந்த வி.சக்திவேல் கூறியதாவது.

Vanavil New1

”நாட்டு மரங்கள் அதிகமாக வளர்க்கவும், அதை காப்பாற்றுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மரம் நட்டால் போதாது, அதை காப்பாற்றி தண்ணீர் ஊற்றவும் முழுமையான இயற்கை பணிகள் ஆற்றவே டிசம்பர் 2016ல் ஏற்படுத்தப்பட்டது இந்த அமைப்பு.

இதன் மூலம் சாடிவயல் தொடங்கி இருட்டுப்பள்ளம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலை ஓரமாய் இதுவரை 1500 மரங்கள் நட்டுள்ளோம். அதில் இதுவரை 5 மரங்கள் கூட பட்டுப்போகவில்லை. அந்த அளவுக்கு அதை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோம். இதற்கிடையேதான் இந்த கல்கொத்திப்பதி பழங்குடியின கிராமத்தில் 3 ஆழ்குழாய் கிணறுகள் இருந்தும், அதற்கு 60 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிகள் இருந்தும் மக்கள் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனியார் தோட்டத்திற்கு போய் குடிக்கத் தண்ணீர் கொண்டு வருவது தெரிந்தது.

இந்த கல்கொத்திப்பதி கிராமம் முற்றிலும் வித்தியாசமானது. இங்கு வசிக்கும் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் 7 கிலோமீட்டர் தொலைவில் மலைமீது 20 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருந்தார்கள். அங்கே வசிப்பது ஆபத்தானது; படிப்பும், தொழிலும் இல்லாமல் இருப்பது இச் சமூகத்தை முன்னேற வைக்காது என்பதையெல்லாம் எடுத்துரைத்து மலையிலிருந்து கீழே அழைத்து வந்து இங்கே குடி வைத்தார்கள் அரசு அதிகாரிகள். அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தந்தார்கள். ஆனால் அவை சரியானதாக இல்லை. வீடுகள் ஒழுகல். மழை வந்தால் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து விடுவது. காட்டு விலங்குகளால் தொல்லை என்பது தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் தலையாய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை.

இங்கு ஏற்கெனவே ஊராட்சியால் அமைக்கப்பட்ட ஒரு 3 ஆழ்குழாய் கிணறுகளில் ஒன்றில் தண்ணீர் இல்லை. இன்னொன்றில் 600 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்தாலும் அதற்கேற்ற மோட்டார் வைக்க மும்முனை மின்சார வசதி இல்லை. மற்றொன்றோ பயன்பாடே இல்லாமல் கிடக்கிறது. இந்த மூன்று ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் தண்ணீர் எடுக்க பல வகைகளில் முயற்சித்து பார்த்தோம்.

வாட்ஸ் அப் மூலமாகவே தகவல்கள் செல்ல பலர் உதவ முன்வந்தார்கள். அப்படித்தான் ஊராட்சி மன்ற தனி அலுவலரும் வந்து உதவினார். இறுதியில் மும்முனை மின்சாரம் இல்லாமல் பெரிய தொட்டியை மோட்டார் மூலம் நிரப்ப முடியாது என்பதை உணர்ந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்கை வைத்து தண்ணீர் நிரப்புகிறோம். சிறுவாணிக்கு இணையான சுவையான நீர் இப்போது பற்றாக்குறையில்லாமல் கிடைக்கிறது. தவிர இங்கிருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு எப்போதும் வந்து கொண்டிருந்த சிறுவாணி குடிநீர் குழாய் வழியே தற்போது வறட்சியின் காரணமாக 15 நாட்களுக்கு ஒரு முறைதான் வருகிறது. அதனால் அங்குள்ள மக்களும் இங்கேயே தண்ணீர் எடுத்து செல்கிறார்கள்!” எனத் தெரிவித்தார்.

இந்த பழங்குடியின கிராமத்தில் பலரும் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்கள். அவர்களை மதுவிலிருந்து மீட்க சிகிச்சையளிக்கவும், ஒழுகும் வீடுகளை பழுதுபார்த்து தரவும், இங்குள்ள மற்ற ஆழ்குழாய் கிணறுகளை சீரமைத்து பிரதான சாலைக்கு கொண்டு சென்று மற்ற மக்களும் குடிதண்ணீர் பயன்பெறவும் இந்த வாட்ஸ் அப் நண்பர்களே திட்டமிட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி மன்ற அலுவலர்கள், முன்னாள் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் பலரும் முன்வந்துள்ளார்களாம்.

இக்குழுவில் அங்கம் வகிக்கும் ராம்குமார் கூறுகையில், ”பள்ளி, கல்லூரிக்கும், பணிக்கும் செல்கிறவர்கள், பிஸினஸ் செய்கிறவர்களே இதில் உறுப்பினராக இருக்கிறோம். பகலில் எல்லாம் வேலை என அலைகிறோம். பொதுக்காரியங்கள் என்றால் மாலையில் கூடி இரவில்தான் பணியில் இறங்குகிறோம். அதனால் எங்கள் வாட்ஸ் அப் இரவு நேரங்களில் மட்டும் ஓயாமல் தகவல்களை பரப்பிக் கொண்டே இருக்கும். எலக்ட்ரீசியன், பிளம்பர், கட்டிட பணியாளர்கள், பொறியாளர்கள் என பல தரப்பட்டவர்களும் அமைப்பில் உள்ளதால் எந்தெந்த இடங்களில் யார், யார் தேவையோ அழைப்பு விடுவோம். அவர்கள் எந்த நேரமானாலும் குறிப்பிட்ட இடத்திற்கு ஓடி வந்து விடுவார்கள். அதை வாட்ஸ் அப் மூலமே தகவல் தெரிவித்து விடுவார்கள்!” என்கிறார்.

இவர்களின் வாட்ஸ் அப் சேவை கல்கொத்திப்பதியில் மட்டும் 2 மாதங்களுக்கு மேல் நடந்துள்ளது. ஆனால் அங்கு வசிக்கும் 30 பழங்குடியின குடும்பத்தினரில் சிலரிடம் மட்டும் செல்போன் உள்ளது. அதிலும் வாட்ஸ் அப் வசதியில்லை. இது குறித்து கல்கொத்திப்பதியில் வசிக்கும் ரங்கசாமி என்ற இளைஞர் கூறுகையில், ”3 மாசம் முன்பு இவங்க அறிமுகம் ஆனாங்க. தண்ணியில்லைன்னு அதிகாரிகள்கிட்ட முறையிடும்போது எங்க மக்களை பார்த்து இங்கே வந்து நேர்ல விசாரிச்சாங்க. அப்புறம் அவங்களே ஆளுகளை கூட்டிட்டு வந்து வேலை பார்க்க ஆரம்பிச்சாங்க. இவங்க வந்த பிறகு தண்ணிக்கே பஞ்சம் இல்லை!” என்று குறிப்பிட்டார்.


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2