பொள்ளாச்சியில் ஜீரோ பட்ஜெட் விவசாயி - சேகர்

 Sunday, March 11, 2018  06:30 PM

பொள்ளாச்சி பகுதியில், இன்றைய தேதியில் ரசாயனமே விழாத விளைநிலமொன்று உள்ளது என்றால், நம்புவது சற்று கடினம் தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக, எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்தாமல், இயற்கையும், நவீனமும் கைகோர்க்கும் விவசாயம் நடந்து வருகிறது. பொள்ளாச்சி வால்பாறை ரோடு வஞ்சியாபுரம் பிரிவிலிருந்து, கிழக்குத்திசையில் நாட்டுக்கல்பாளையம் ரோடு செல்கிறது. அதனருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டு, ‘இன்ஜினியர் தோட்டம்’ உள்ளது.இங்கு மொத்தம் உள்ள, 12 ஏக்கரில், குடியிருப்பு, கட்டடங்கள் போக, 10 ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. அதில், 650 தென்னை மரங்களும், அதனிடையே ஊடுபயிராக ‘ஜி9′ ரக வாழையும் பயிரிடப்பட்டுள்ளது. அந்த தோப்பின் உரிமையாளர் சேகர். இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் உள்ளவர்.

இவர், தன் தோப்பிற்கு எவ்வித ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதில்லை. இவர் மட்டுமல்ல; இவரது தந்தை முருகேசன், பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அவரது தந்தை சுப்பேகவுண்டர், தீவிர விவசாயி. இவர்கள் யாருமே ரசாயன உரங்களை பயன்படுத்தியதில்லை என்பது வியப்பான விஷயம். அரசு ‘பசுமைப்புரட்சி’ திட்டத்தின் கீழ், விளைச்சலை பெருக்கும் முனைப்பில், நாடு முழுக்க ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தீவிரமாக விவசாயிகளிடம் கொண்டு சேர்த்த போதும், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாற்றாக காலம் காலமாக நடந்த பாரம்பரிய முறைகளை பின்பற்றியே விவசாயம் செய்தனர். தற்போது சேகர் காலத்தில், இயற்கை முறைகளோடு, நவீன உத்திகளை புகுத்தி, செழுமைப்படுத்தியுள்ளார்.

‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம் :

விளைநிலத்திற்கு வெளியே இருந்து, எந்த ஒரு பொருளையும் பணம் கொடுத்து வாங்கி வந்து பயன்படுத்தாமல் விவசாயம் செய்வதே ‘ஜீரோ பட்ஜெட்‘ விவசாயம் எனப்படுகிறது. சேகர் அந்த முறையை தான் பின்பற்றி வருகிறார். இதனால், அவருக்கு இடுபொருட்களுக்கான செலவு என்பது அறவே தவிர்க்கப்படுகிறது. ஆள் கூலி போக, விளையும் அனைத்தும் லாபம் தான்.

நிலம் முழுக்க உரத்தொழிற்சாலை :

தோப்பில், ஒவ்வொரு நான்கு தென்னைகளுக்கும் மத்தியில், அம்மரங்களில் இருந்து விழும் காய்ந்த மட்டை, பாளை, ஓலை உள்ளிட்ட கழிவுகள் தொடர்ந்து கொட்டி வரப்படுகின்றன. அதன் மேல், ‘ஸ்பிரிங்க்ளர்’ முறையில் தெளிப்பு பாசனம் அமைத்துள்ளார். அதில் கழிவுகள் தொடர்ந்து நனைந்து, மக்கி, சத்தான உரமாக மாறிவிடுகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வருவதால், தோப்பு முழுக்க ஆங்காங்கே உரம் தயாரிக்கப்பட்டு விடுகிறது.

பண்ணைக்குட்டை :

நிலத்தின் கிழக்கு பகுதியில் ஏறத்தாழ, 30 சென்ட் பரப்பளவில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் பெற, தென்னைகளை வெட்டிவிட்டு, குறிப்பிட்ட அமைப்பில் குட்டை அமைக்க வேண்டும் என்பதால், தென்னைகளுக்கு பாதிப்பின்றி, முழுக்க தன் செலவிலேயே வித்தியாசமான முறையில் அமைத்துள்ளார். சரிவான இக்குட்டையில், ஓடிவரும் மழைநீர் சேகரமாகி, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரித்து வருகிறது.

பாத்தி இல்லை :

பொதுவாக தென்னை மரங்களுக்கு பாத்தி அமைத்து பாசனம் செய்வது தான் வழக்கம். ஆனால் இவரது தோப்பில், எங்குமே பாத்திகளை காண முடிவதில்லை. முழுக்க முழுக்க ‘ஸ்பிரிங்க்ளர்’ பாசனம் தான். இதனால் தோப்பு முழுக்க ‘சில்’ என குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதுடன், தண்ணீரும் வீணாவது இல்லை.


Custom3
உழவே கிடையாது :

சேகரின் நிலத்தில் பல ஆண்டுகளாக உழவு செய்யப்படவேயில்லை. இயற்கை வேளாண்மை என்பதால், மண்ணை சற்றே தோண்டியதும், கை நிறைய மண் புழு கிடைக்கிறது. இது போல நிலம் முழுக்க நிறைந்து கிடைக்கும் மண் புழுக்கள், மண்ணை குடைந்து உழவுப்பணியை செய்துவிடுவதுடன், அவற்றின் கழிவுகள் சத்தான உரமாகவும் மாறி மண்ணை வளப்படுத்தி விடுகிறது.

விவசாயி சேகர் கூறியதாவது :

* நிறைய விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று, கண்ட ரசாயனங்களையும் விளைநிலத்தில் கொட்டுவது, போதை மருந்தை உட்கொண்டு, விளையாட்டு போட்டியில் பங்கேற்பதை போலத்தான். அதில் வெற்றி கிடைக்காது; கிடைத்தாலும் நிலைக்காது.

* மனிதர்களின் பேராசை தான் அதையெல்லாம் செய்யத்தூண்டுகிறது. இதனால் இயற்கை சீர்கெட்டு, மனிதன் அழிவை சந்திக்கிறான். என் தாத்தாவும், தந்தையும் எனக்கு உயிரோட்டமுள்ள மண்ணை கொடுத்துள்ளனர். என் வாரிசுகளுக்கும் அதை அப்படி அளிக்கவே விரும்புகிறேன்.

* மேலும், ரசாயன விவசாயத்தில் நடக்கும் உற்பத்திக்கு கொஞ்சமும் குறையாமல் இயற்கை முறையிலும் கிடைக்கிறது. ஆனால் இயற்கை முறையில் செலவு இல்லை என்பதால், இதில் தான் லாபம் அதிகம் கிடைக்கிறது. மரத்தின் கழிவுகளை உரமாக்குவதுடன், ஜீவாமிர்தம் மற்றும் மூலிகை பூச்சி விரட்டி ஆகியவற்றை நானே தயாரித்து பயன்படுத்துகிறேன். அதுவும் நன்கு பலனளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ரசாயனத்தை கொட்டி, தன் மண்ணையும் கெடுக்காமல், அதில் விளையும் பொருட்களை உண்ணும் மக்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்காமல், நல்ல லாபமும் ஈட்ட முடியும் என மூன்றாம் தலைமைமுறையாக நிரூபித்து வரும் பொள்ளாச்சி விவசாயி சேகர் நிச்சயம் சாதனை விவசாயி தான். அவரது வெற்றி, இன்னும் பல இயற்கை விவசாயிகளை உருவாக்கும் என்பது நிச்சயம்.

சேகரின் ஜீவாமிர்தம் தயாரிக்கும் டிப்ஸ் :

20 கிலோ மாட்டுச்சாணம், 20 லிட்டர் மாட்டு சிறுநீர், 2 கிலோ கொள்ளு மாவு, 2 கிலோ கரும்பு சர்க்கரை மற்றும் ஒரு கைப்பிடி விளைநிலத்தின் மண்ணை, பீப்பாயில் கொட்டி, நன்கு கலந்து, இரண்டு நாட்கள் ஊறல் போட வேண்டும். அதில் உருவாகம் கலவை தான் ஜீவாமிர்தம். அதை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிர்களின் வேரில் ஊற்றலாம்; இலைவழித்தெளிப்பாகவும் பயன் படுத்தலாம்.

சேகரின் மூலிகை பூச்சி விரட்டி டிப்ஸ் :

வேப்பிலை 5 கிலோ, ஆடுதொடா இலை 5 கிலோ, நொச்சி இலை 5 கிலோ, ஊமத்தை இலை 5 கிலோ, எருக்கன் இலை 5 கிலோ ஆகியவற்றை உரலில் இட்டு நன்கு இடித்து, மாட்டு சிறுநீரில் 15 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.அதில் உருவாகும் கரைசல் தான் சக்தி வாய்ந்த மூலிகை பூச்சி விரட்டி. அதை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 1 லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால், பயிர்களை தாக்கும் பூச்சிகள் நன்கு கட்டுப்படும்.


Custom1

Cusomt2


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2
Website Square Vanavil 1
Website Square Ad spp2
Website Square Ad spp3
Website Square Ad spp1