டாக்குமென்டரி' எடுக்கும் பனியன் ஆலைத் தொழிலாளி

 Monday, March 5, 2018  04:30 PM

புலி நம் தேசிய விலங்கு. சுதந்திரம் வாங்குவதற்கு முன் 40,000 எண்ணிக்கையில் இருந்த புலிகளின் எண்ணிக்கை இன்று வெறும் 1,400. மயில் நம் தேசியப் பறவை. தமிழர்களின் வாழ்வோடு ஒன்றறக் கலந்த பறவை. வானவில் நிறங்களை தோகையில் பெற்ற மயில்களின் இன்றைய நிலை என்ன? புலிக்கு என்ன நேர்ந்ததோ, அதுவேதான் மயில்களுக்கும் நேர்ந்துள்ளது. விஷம் வைத்துக் கொல்லப்படும் அளவு மயிலின் நிலைமை இன்று மோசமாகிவிட்டது. மழை, மகிழ்ச்சி, கவர்ச்சி என்ற பல்வேறு விஷயங்களுக்கு குறியீடாகத் திகழும் இந்த அழகுப் பறவையின் அழிவை பதிவு செய்திருக்கிறது.

'மாயமாகும் மயிலு' என்ற விவரணப் படம் (டாக்குமென்டரி). மயிலின் 4000 ஆண்டு வரலாறை முன்வைக்கிறது இப்படம். இந்தப் படத்தை எடுத்தவர் ஒரு பனியன் ஆலைத் தொழிலாளி, கோவை சதாசிவம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர். நம் மண் மீதும், சுற்றுச்சூழல் மீதும் காதல் கொண்ட கவிஞராக அறியப்பட்டவர்.

சாயக் கழிவுக்கு பெயர்போன திருப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்த நகரம் எதிர்கொண்ட சுற்றுச்சூழல் நெருக்கடிகளால் உந்தப்பட்டு 'பின்னல் நகரம்' என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெரும் கவனத்தை ஈர்க்காத நிலையில், அந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. கவிதைப் பயணத்தை தொடர்ந்த சதாசிவத்துக்கு , படைப்பாற்றலை காட்சிக்கலையாக மாற்றும் விருப்பம் ஏற்பட்டது.

2006ம் ஆண்டு 'மண்' என்ற விவரணப் படத்தை எடுத்தார். சாயக்கழிவால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிவது, அதன் காரணமாக வேளாண்மை பாதிக்கப்படுவது தொடர்பாக அந்தப் படம் கவனம் செலுத்தியது. மயில்களை விஷம் வைத்துக் கொல்லும் நிகழ்வு பற்றிய செய்தியை படித்த பிறகு, அவற்றின் வாழ்க்கை பற்றி விரிவாகப் பதிவு செய்யும் எண்ணம் தோன்றிது. சுற்றுச்சூழல் சிந்தனை கொண்ட நண்பர்கள் உதவியுடன் மயில் பற்றி விவரணப் படத்தை எடுத்தார்.
மயில்களின் இன்றைய நிலைமை

நம்மைச் சுற்றியிருந்த கருஞ்சிட்டு, பொரிச்சிட்டு, தேன்சிட்டு போன்ற எத்தனையோ சிறிய பறவைகள் அழிந்துவிட்டன. கோவையில் உள்ள 72 வார்டுகளில் 52 வார்டுகளில் சிட்டுக்குருவிகள் இல்லை. பறவைகளின் அழிவுக்கு மயில் ஒரு குறியீடு. மயில் நமது பண்பாட்டுடன் நெருக்கமான உறவு கொண்ட ஒரு பறவை . காவடியாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்கள், மயிலாடுதுறை, மயிலாப்பூர் போன்ற ஊர்ப் பெயர்கள், மயில்சாமி, மயிலாத்தாள், அன்னமயில் போன்ற நபர்களின் பெயர்கள் இதற்கு சில உதாரணங்கள். நம் வாழ்வுடன் கலந்திருந்த இப்பறவைகள் இன்று எதிரியாகப் பார்க்கப்படுகின்றன.

பயிர்களை சேதம் செய்வதாகக் கூறி, விவசாயிகள் மயில்களை விஷம் வைத்து கொல்கிறார்கள். மயில்கள் முட்புதர்களில் முட்டையிட்டு 28 நாட்கள் அடைகாக்கும். அதன் பிறகு குஞ்சுகளை 9 நாட்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும். இந்த கவனிப்பு இருந்தால்தான் மயில்குஞ்சு பிழைக்கும். முட்புதர்களை உறைவிடமாகக் கொண்ட மயில்கள் இன்று வாழ இடம் தேடி அலைகின்றன. மயில்களுக்கு உகந்த காடுகள் உறைவிடம் அழிக்கப்பட்டுவிட்டது. இயற்கையாகக் கிடைத்து வந்த உணவு அழிந்ததால், உயிர்பிழைக்க அவை வயல்களை நாடுகின்றன. இது மட்டுமின்றி விவசாயிகள் அடிக்கும் பூச்சிக்கொல்லி கலந்த தானியங்களாலும் பாதிக்கப்படுகின்றன.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள். மற்றொருபுறம் நமது பாரம்பரியச் செல்வங்களுக்கு வெளிநாட்டினர் காப்புரிமை பெறுகின்றனர். நமது வளத்தைப் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்காவிட்டால், எஞ்சிய நமது பாரம்பரியச் செல்வங்களும் பறிபோகும். இதை கவனப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் 'மாயமாகும் மயிலு' படத்தை எடுத்தோம். கோவை அருகேயுள்ள காக்காச்சாவடியில் 9 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது தொடர்பாக வந்த பத்திரிகை செய்திதான், அது பற்றி விவரணப் படம் எடுக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. திருச்சி, பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளில் மயில்கள்-விவசாயிகள் இடையே மோதல் அதிகமாக உள்ளது.

பல்வேறு முனைகளில் இருந்து நெருக்கடிகளைச் சந்திக்கும் விவசாயிகள், உணவு தேடி வரும் மயில்களை கொன்றுவிடுகிறார்கள். மயிற்பீலியை தீயில் கருக்கி தேனில் குழைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி குணமாகும் . புரதம் மிக்க மயிலை வாட்டி எடுக்கப்படும் எண்ணெயால் மூட்டு வலி குணமாகும் என்றெல்லாம் மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இதற்காக நரிக்குறவர்கள் மயிலைச் சுட்டுப் பிடிக்கின்றனர். ஆனால் மயிலுக்கு எந்த மருத்துவ குணமும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாகத்தான் மயில்கள் அதிகம் அழிக்கப்படுகின்றன. மயில்கள் சரணாலயமான விராலிமலையில் 8000 மயில்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள். இன்று எண்ணிவிடக் கூடிய அளவு அவை சுருங்கிவிட்டன.

கோவை கன்யா குருகுலப் பகுதியில் உருவான தொழிற்பூங்கா காரணமாக முட்புதர்கள் அழிக்கப்பட்டன. இதனால் 250 மயில்கள் அழிந்துவிட்டன. மயில்கள் பாதிக்கப்பட்டால் , அது உணவாகக் கொள்ளும் பாம்பு, பூரான், தேள் போன்றவை அதிகரிக்கும். இதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. பாம்புகள் அதிகரித்தால், அவற்றைக் கொல்வோம். அதைக் கொன்றால் எலியும், தவளையும் பெருகும். பல நோய்கள் அதிகரிக்கும். பறவைகளின் முக்கியத்துவத்தை சூழலியல் ஆராய்ச்சிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன .

தாவரங்கள் இனப்பெருக்கத்துக்குத் தேவையான மகரந்தச் சேர்க்கை, விதை பரப்புதலில் பல்வேறு பறவைகள் மறைமுகமாக நமக்கு உதவி புரிந்து வருகின்றன. பறவைகள் அழிந்தால் தாவரங்கள் அழிந்துவிடும். இந்த படத்தை வெளியிட்ட பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம், மயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம் என்றார்.

'சமீபத்தில் கோவை வந்த அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், மருதமலை அடிவாரத்தில் நாலரை ஏக்கர் பரப்பில் உள்ள 300 மயில்களை பாதுகாக்க ரூ. 10 லட்சம் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் படம் திரையிடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் இப்படத்தை திரையிட்டு வருகிறோம். அங்கு சூழலியல் பற்றி பேசவும் முடிகிறது. விவரணப் படங்களைத் திரையிட டிவி அலைவரிசைகள் நேரம் ஒதுக்கி ஆதரிக்க வேண்டும். திரு.காளிதாசன்-நண்பர்கள் ஏற்படுத்திய 'ஓசை' அமைப்பு மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். 'கொஞ்சும் மொழி கேட்போம்' என்ற தாய்த் தமிழ் பள்ளிகளுக்கான சூழலியல் பாடல் புத்தகத்தை எழுதியுள்ளேன்.' என்கிறார் கவிஞர் சதாசிவம். தமிழில் காட்டுயிர் விவரணப் படமெடுக்கும் முயற்சியில் தடம் பதித்திருக்கிறீர்கள். அடுத்து?

'யானை-மனிதர்கள்' மோதல் பெருகிவிட்டது. சமீபத்தில் மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. உணவு, உறைவிடம் இன்றி அவை ஊருக்குள் வருவதும், கிணறுகளில் விழுந்து இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. யானைகளின் அழிவு , காடுகள் பெருமளவு அழிவதன் எச்சரிக்கை மணி. யானைகள்-விவசாயிகள் மோதல் அதிகரிப்பது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அழிவை சொல்கிறது. யானைகளின் வீட்டை அபகரித்துக் கொண்டு, அவை வெளியே வராமல் மின்வேலியிடுவது இதற்குத் தீர்வல்ல. காடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற வேண்டும். மலைத் தொடர் வரைமுறையன்றி அழிக்கப்படுவதால் ஆறுகள் வறண்டுபோகும். ஆறுகள் வறண்டுவிட்டால் நமது விவசாயம் பொய்க்கும். அடுத்ததாக யானைகள் -மக்கள் மோதலை மையப்படுத்தி விவரணப் படம் எடுக்கும் திட்டம் உள்ளது. இயற்கையை காப்பாற்றுவதால்தான், மனித இனத்தை காப்பற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.' என்கிறார் சதாசிவம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup