பொன்னான வாழ்வருளும் பொன்னூத்து அம்மன் : கோவை, வரப்பாளையம்

 Saturday, March 3, 2018  08:30 PM

கோவையை அடுத்த நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில், வரப்பாளையம் கிராமத்தை அடுத்து அமைந்துள்ள குருடிமலையிலுள்ள சஞ்சீவி மூலிகை வனத்திற்குள் அருள்மிகு பொன்னூத்து அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பெரிய நாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குருடி மலைப் பகுதிக்கு வரப்பாளையத்திலிருந்து 1 கி.மீ சென்றால் கோயிலை அடைந்து விடலாம். மலையின் மடியில் ரகசியமான இடத்தில் அமைந்திருப்பதுபோல் ஓர் பள்ளத்திற்குள் அமைந்துள்ளது. புதையலை அதற்கு உரியவர்களே காண முடியும் என்பது போல, மலையின் மறைவில், சின்னஞ்சிறு குகைக்குள் கோயில் கொண்டிருக்கும் பொன்னூத்து அம்மனைத் தரிசிப்பது என்பது பூர்வஜென்ம புண்ணிய பலனேயாகும். பொன்னூத்து அம்மன் கோயிலுக்குப் போக மலை ஏறும் முன் அருள்மிகு விநாயகரை தரிசித்த பின் யானைத் தடமாக உள்ள நடைபாதையில் நடந்து 1/2 கி.மீ. கடந்தால் 108 படிகள் அமைந்த படிக்கட்டுகள் தொடங்கும்.

மலைமகள், மரம், செடி, கொடிகள் நிறைந்த பச்சை ஆடையைச் சுற்றிப் போர்த்திக் கொண்டிருக்க, ஆங்காங்கே மலையருவிகள் வெள்ளியாலான ஆபரணங்களாக அவளை அங்கும் இங்குமாகப் பாய்ந்து அலங்கரிக்க, சீவி சிங்காரித்து வழவழவென கொண்டையிட்டது போல் உருண்டிருக்கும் பாறை குகைக்குள் பொன்னூத்து சுரக்கும் ஊற்றுக் கண்ணுக்கு முன்னால் சின்னஞ்சிறு கோயில் கொண்டு திருக்காட்சி தருகிறாள். பேரூர் புராண வரலாற்றுப்படி சிவபெருமான் வெள்ளியங்கிரி மலையிலும், நான்முகன் அய்யாசாமி மலையிலும், திருமால் பெருமாள் முடி மலையிலும், முருகன் மருதமலையிலும், அம்பாள் பொன்னூற்று மலையிலும் கோயில் கொண்டருளி இருப்பதைக் குறிப்பிடுகின்றது. குருடி மலைக்கும், வெள்ளியங்கிரி மலைக்கும் நடுவில் மருதமலை அமைந்து சோமாஸ்கந்த ரூபத்தை இந்த மலைகள் தாங்கியிருக்கின்றன.

துடிசை எனப்படும் துடியலூர் புராணத்திலும் இம்மலை இடம் பெற்றுள்ளது. கலியுகத்தில் குருவர் என்ற தவஞானி இம்மலை மீது சிவபெருமானை வேண்டி பல காலம் தவமியிற்றியுள்ளார். இவரது தவத்தை மெச்சி சிவபிரான் துடிசையம்பதியில் துடி (உலக்கை) முழக்கி நடனமாடி தரிசனம் தந்துள்ளார். எனவே, துடியலூர் திருக்கோயில் இருக்குமிடம் குருவவிருடிபாளையம் என்றழைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி தற்பொழுது குருடி மலையாக மாறியுள்ளதை அப்புராணம் வாயிலாக அறிய வருகின்றோம். சஞ்சீவி மலையை வான்வழியே சுமந்துச் சென்ற ஆஞ்சநேயர், கை நழுவி விழுந்த சிறு துண்டே இம்மலை என்பதற்கு சாட்சியாக இங்கே மூலிகை வனமும், தேனைவிட தித்திப்பான கந்த தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சந்திர நதி, விநாயகர் நதி, சிவ தீர்த்தம் முதலிய தீர்த்தங்களும், இளநீரையே ஓரங்கட்டும் இனிமையான பொன்னூற்றும் அமைந்துள்ளது.ரிஷி மூலம், நதி மூலம் ரகசியமானதாகவே இருக்க வேண்டும் என்பார்கள். பொன்னூத்து அம்மன் கோயில் மட்டுமின்றி இங்கே அருள்மிகு பாலகணபதி, பாலமுருகர், சப்த மாதர்கள் சந்நதிகள் எழுப்பப்பட்டுள்ளன. கீழே கோயிலுக்குச் செல்ல அமைந்துள்ள படிக்கட்டின் வலப்புறம், சின்னஞ்சிறு குகைக் கோயிலுக்குள், யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் மற்றும் ஜலகண்டேஸ்வரர் சுயம்பாக எழுந்தருளியுள்ளனர். பொன்னூத்து அம்மன் குகைக் கோயிலுக்குள் சுயம்பு அம்மன், அம்மனின் கல் திருமேனி, அம்மனைவிட பெரிய திருமேனியில் குறுகுறுவெனப் பார்த்தபடி திருவமர்ந்திருக்கும் நந்திதேவன் ஆகியோரில், அம்மன் கல் விக்ரகம் தவிர அனைத்துமே சுயம்பாக அவதரித்தாகும். இது போன்ற சுயம்புத் திருமேனிகளில் இறைவனே அருள்வதாக ஐதீகம் உண்டு.

ஆழி சூழ் உலகம் என்பது போல் அருவி சூழ இந்த கானமர் செல்வியின் திருக்கோயில், மழைக்காலங்களில் அருவியால் மறைக்கப்பட்டு, பொன்னூற்று பொங்கி வழிந்து குகையையே நிறைத்து விட நீராலேயே கோயில் அமைந்த ஒரே தெய்வமாகி இந்த வனத்தையும், நம் மனத்தையும் கொள்ளை கொண்டு விடுகின்றாள். இந்த வித்தியாசமான கோயிலில் வழிபாடும் வினோதமாகவே உள்ளது. அம்மனை தரிசிக்கச் செல்பவர்களும் நீரில் நனைந்தபடி நகர்ந்து, என்றுமே மூடாத திருக்கதவுகளுக்குத் திரைபோடும் அருவி நீருக்குள் புகுந்து தண்ணீருக்குள் நின்றபடி வழிபட வேண்டும். வெற்றிலை மீது ஏற்றி வைக்கப்பட்ட கற்பூரம் மட்டும் நனையாமல் நகர்த்தி எடுத்துச் செல்லப்படுகின்றது. எந்த ஒரு கோயிலும் பூசாரியின் கனிவான உபசரிப்பால் மிக மிகப் பிடித்துப் போய் மீண்டும் மீண்டும் தரிசிக்கத் தூண்டும். இத்திருக்கோயில் பெண்களுக்கான பிரத்யேகக் கோயில் என்றே கூறலாம். மணமாலை வேண்டியும், மழலைச் செல்வம் வேண்டியும் அம்மனை 48 நாட்கள் விடாமல் வழிபட்டால் கை மேல் பலன் கிட்டுவது கண்கூடாக நடக்கின்றது.

தாய் அழைத்து, தாய் வீட்டிற்குச் சென்ற பெண்கள் வெறும் கைகளுடனா திரும்புவார்கள்? தாய் வீட்டுச் சீதனத்தோடு அல்லவா வருவார்கள். அதேபோல், சிற்றுருவில் திருக்காட்சி நல்கினாலும், தாய்மை பொங்க தேவி திருக்காட்சி அளிக்கின்றாள். நம்பிக்கை நல்கும் நாயகியாய் திகழ்கின்றாள். சிறந்த பிரார்த்தனை தலமாகவும், பரிகாரத் தலமாகவும் திகழும் இத்திருக்கோயிலில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழிபாடு செய்யலாம். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகின்றன. வருடாந்திர விழாவாக தைப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது. 2005ல் திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் பெற்றுள்ளது. இத்திருக்கோயில் அம்மன் கிழக்கு நோக்கியும், விநாயகர் சந்நதி வடக்கு நோக்கியும் கோயில் கொண்டுள்ளார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி மிகப் பெரிய பொன்னூத்து அம்மன்.

கோவையிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயிலை அடைய காந்திபுரம், உக்கடத்திலிருந்து பேருந்து மற்றும் மினி பேருந்துகள் உள்ளன.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup