நாடகக் கலையும் கோவையும்

 Thursday, February 20, 2020  03:39 PM

நாடகக் கலை என்பது அற்புதமான ஒரு கலை. அது, கோவையில் சிறப்புற்றிருந்தது. எம்.ஆர்.இராதாவின் நாடகங்கள் அரசியல் பரப்புரைக்காகப் பெயர்பெற்றவை. நாளும் நாடகத்தில், அரசியல் தொடர்பான சாடல்களுடன் உரையாடல்கள் அமைந்திருக்கும். முதல் நாள், குறிப்பிட்ட சாடலுக்காகக் காவல்துறையினர் நெருக்கடி அளித்தால், அடுத்த நாள் வேறொரு உரையாடல் மூலம் சாடல் தொடரும். நாடகம் ஒன்றே. கதை ’தூக்குத் தூக்கி’ யாக இருக்கும். ஆனால் அரசியல் உரையாடல்கள் இடை புகும்.

மக்களின் பேச்சு இலக்கியப்பேச்சல்ல. நாடகப்பேச்சாகவே இருக்கும். டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவின் பணி குறிப்பிடத்தக்கது. டி.கே. சண்முகம் அவர்கள் கோவையில் “சண்முகா” நாடக அரங்குக் கட்டிடத்தைக் கட்டுவித்தார். அரங்கின் மேடை பெரியதொரு மேடை. நாடகக் காட்சிகளில் மெய்யாகவே வண்டிகள் மேடையில் வரும். இரவோடிரவாக நாடகக் கதையை உருவாக்கிய நாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். அறிஞர் அண்ணாவும் அவ்வாறு எழுதிய “ஓர் இரவு” நாடகம் இங்கு அரங்கேறியுள்ளது. சொற்பொழிவாளர் கவிஞர் புவியரசு அண்ணாவுடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார்.

முன்னர்க் குறிப்பிட்டவாறு, கவிஞர் புவியரசு அவர்களும் ஒரு நாடக ஆசிரியரே. ஆண்டு முழுதும் இருபத்தைந்து நாடகங்களுக்குக் குறையாமல் நாடகங்கள் அரங்கேறும். நாடகங்களின் போட்டியும் பரிசுகளும் உண்டு. புவியரசு அவர்களின் ஒரு நாடகம் பதினாறு முதற்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. “சலங்கை” என்னும் பெயரில் புவியரசு அவர்கள் எழுதிய நாடகம் (தேவதாசிகள் பற்றியது) வாதங்களுக்கு இடமளித்ததும், பெரும் கண்டனங்களுக்கு உள்ளானதும் நிகழ்ந்தன.

yt_middle

புவியரசு அவர்கள், பின்னர் நாடகப்போட்டியின் நடுவராக இயங்கியதும் உண்டு. “செம்மீன்” திரைப்படப் புகழ் நடிகை ஷீலா, கோவையில் போத்தனூரில் வாழ்ந்தது, அவரைப் புவியரசு அவர்கள் நாடகத்துக்கு அழைத்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். நாடகச் சம்பளமாக எழுபது ரூபாய்ப் பணமும், போக்குவரத்துக்கான குதிரைவண்டிக் கூலியாகப் பணம் ரூபாய் பதினைந்தும், முன்பணமாக முப்பது ரூபாய்ப் பணமும் ஷீலாவுக்குக் கொடுக்கப்பட்டது.

(கட்டுரை ஆசிரியர் குறிப்பு : நடிகை ஷீலா, கோவையில் தங்கி நாடகங்களில் நடித்து வந்தார் என்று புவியரசு அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டபோது, கட்டுரை ஆசிரியரும் தம் பள்ளி நாள்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளின் காலம். கட்டுரை ஆசிரியரின் சொந்த ஊரான அவிநாசியில் அவரது சிற்றப்பாவான “அன்புவாணன்” என்பவர் - இடைநிலை ஆசிரியர் (SECONDARY GRADE TEACHER) பயிற்சிப்பணி - அவிநாசியில் இருந்த நாடக ஆர்வலர்களைக் கொண்டு “பொன்விலங்கு” என்னும் புதுமைத் தலைப்பில் நாடகம் ஒன்றை ஆக்கி, அதில் நடிகை ஷீலாவைக் கோவையிலிருந்து வரவழைத்து நாடகம் நிகழ்த்தினார்.

அந் நாடகத்தை நேரில் பார்த்த நினைவும், நாடகத்தின் இடை நேரத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், டி.ஆர். இராமச்சந்திரனும் நாடகத்தைச் சிறிது நேரம் பார்த்துப் பாராட்டிவிட்டுக் கோவை நோக்கிப் பயணப்பட்டதைக் கண்ட நினைவும் கட்டுரை ஆசிரியருக்குப் பசுமைப் பதிவு. பொன்விலங்கு என்னும் புதுமைத் தலைப்பை முதலில் அறிமுகப்படுத்தியவர் அன்புவாணன் அவர்களே. பின்னாளில், இந்தத் தலைப்பில் நா.பார்த்தசாரதி அவர்கள் நாவல் ஒன்றை எழுதினார் என்பது நாம் அறிந்ததே.)


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
fb_right
Insta_right
Telegram_Side
Twitter_Right