சந்தோஷமா இருக்க ஆசையா? இதோ மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்!

 Saturday, December 21, 2019  10:59 AM

சந்தோஷம் என்ற வார்த்தையில் இருக்கும் சந்தோஷ நொடி கூட பலரது வாழ்க்கையில் இல்லாமல் போவது சோகம். அதெப்படி தொடர்ந்து துயரில் இருக்கும் வாழ்க்கை உண்டா என்று இந்தப் பக்கம் இருப்பவர்கள், அதாவது சந்தோஷத் தருணங்களை அதிகப்படியாக உணர்ந்தவர்கள் நினைக்கலாம். சந்தோஷம் துக்கம் ரெண்டும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை என்று சிலர் தத்துவார்த்தமாகச் சொல்லலாம். ஆனால் வெகு சிலர் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவே சந்தோஷம் வரும் போது பெரிய பூட்டாகப் போட்டுத் தன்னை மறைத்துக் கொண்டு அதன் இருப்பை மறந்து விடுகின்றனர். அவர்களுக்கான பதிவு இது.

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள், அடுத்தவர் வாழ்க்கையை அல்ல!

'நான் மட்டும் அன்னிக்கு எனக்கு பிடிச்ச படிப்பை படிச்சிருந்தா... இந்நேரத்துக்கு என்ன ஆயிருப்பேன் தெரியுமா?', 'அப்பவே சொன்னேன் எனக்கு அந்த வேலை தான் செட் ஆகும்னு ஆனா இவர் சொன்னதாலே அதை தட்டிக் கழிச்சிட்டு இப்ப சிரமப்படறேன்’, 'எத்தனை வருஷம் காதலிச்சோம், எல்லாத்தையும் எதிர்த்து போராடி அன்னிக்கே ஒரு முடிவு எடுத்திருந்தா இப்படி பொருந்தாத மனசோடு ஒரு திருமண வாழ்க்கையில் சிக்கியிருக்க மாட்டேன்’, இதில் ஒன்றினை வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கணத்தில் உணர்ந்திருப்பீர்கள். தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வேறு வழியே இல்லாத இக்கட்டான நிலையை கடந்து வந்திருக்காதவர்கள் யாருமில்லை.

2. வேலை வாழ்க்கை இரண்டையும் சமமாகப் பாருங்கள்!

சிலர் எப்போதும் வேலை வேலை என்று வாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலக வேலைக்காக தங்களை அப்படியே ஒப்புக் கொடுத்துவிடுவார்கள். வாரக்கணக்காக, வருடக்கணக்காக ஓய்வு ஒழிச்சலின்றி ஒரு இயந்திரம் போல வேலை செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் வேறு வழி? ஆறு நபர்கள் சாப்பிட வேண்டும்? படிக்க வேண்டும், மானத்துடன் வாழ வேண்டும் என்ற பதில் சுடும் நிஜம் தான். ஆனால் அதற்கென்று இப்படி ஒரேடியாக சந்தோஷங்களைப் புதைத்து தியாகியாக உங்களை உருவகப்படுத்திக் கொண்டு சின்ன சின்ன சந்தோஷங்களையும் தூற எறிந்துவிடாதீர்கள். அப்படி செய்தால் ஒரு நாள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் உட்காரும் போதுதான் உங்களுக்குத் தெரிய வரும்.

3. உண்மையாக இருங்கள்!

உங்கள் உடல் சொல்வதையும் மனம் சொல்வதையும் கேட்கப் பழகுங்கள். உடலுக்கு ஓய்வு தேவை என்றால் நிச்சயம் அது சோர்வின் மூலம் எடுத்துரைக்கும். அப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்வது தான் அதற்கு மகிழ்ச்சி அளிக்கும். மன அழுத்தம், பிரச்னையில் சிக்கிக் கொள்வது போன்ற தருணங்களில் அதிலிருந்து விடுபட மனதே வழிவகுக்கும். நீங்கள் சும்மா ஒப்புக் கொடுக்க வேண்டும். எதிர் முயற்சிகள் செய்யாமல் என்ன நடக்கிறது என்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய உணர்வுகளை உண்மையாக இருங்கள். அதுவே மகிழ்ச்சியை விதைத்து அறுவடையும் கொடுக்கும்.

yt_middle

4. நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்!

ஆங்கிலத்தில் அழகான ஒரு பழமொழி உள்ளது. உங்கள் தோட்டத்தின் அழகு அதில் எத்தனை பூக்கள் இருக்கின்றன என்பதில் தான் உள்ளது. உங்கள் தினங்கள் அருமையாக அமைய, அதில் எத்தனை பொன்னான தருணங்கள் இருந்தன என்பது முக்கியம். உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க அதில் எத்தனை சந்தோஷமான புன்னகையுடன் இருந்தீர்கள் என்பது தான் சிறப்பு. மேலும் உங்கள் வயது ஏறாமல் அப்படியே இருக்க, எத்தனை நண்பர்கள் உங்களை சுற்றி இருக்கின்றனர் என்பது தான் விஷயம்.

ஆத்மார்த்தமாக உங்களுடன் இணைந்திருக்கும் நல்ல நட்புகள் கிடைப்பது அபூர்வம். அதை பொத்தி வைத்திருக்கப் பழகுங்கள். நண்பர்கள் என்பது நம்பர்களிலும் இல்லை. ஆழமான நட்பில் தான் உள்ளது. அதன் பின் மகிழ்ச்சி எப்படி தொலைந்து ஆகும்? எப்போதும் மகிழ்ச்சி வெள்ளம் தான்!

5. எப்போதும் சந்தோஷமாக இருப்பேன் என்று உறுதியாக முடிவு எடுங்கள்!

சந்தோஷம் என்பது உங்கள் தேர்வு. ஆம். அதைத் தேர்ந்தெடுத்து நமதாக்கிக் கொள்ள வேண்டும். இனிமேல் நான் சந்தோஷமாகவே இருப்பேன் என்று ஒரு தீர்மானம் உறுதியாக எடுத்து, அதைக் கடைபிடித்துப் பாருங்கள். அது உங்களுடனே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். அதற்கு எதிராக எதாவது நடந்தால், உடனடியாக சந்தோஷத்தை உதறிவிட்டு கோபத்துக்கோ வெறுப்புக்கோ தாவி விடுவது யார்? சாட்சாத் நீங்களே தான்.

நம்மால் மாற்ற முடிந்த விஷயங்களை துணிவுடன் போராடி மாற்றும் திறனும், மாற்ற முடியாத விஷயங்களை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமும், எதை மாற்ற முடியும், எதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஞானமும் இருந்தால் வாழ்தல் இனிது.

-- By உமா பார்வதி, Courtesy : Dinamani






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
fb_right
mobile_App_right
Telegram_Side
Insta_right