அசுலூரு வேலை... உறவுகளை மறந்து... உணர்ச்சிகளற்று மரத்துவிட்டோமா!

 Friday, December 6, 2019  02:22 PM

அசுலூரு வாழ்க்கையால் உறவு, நட்பு, மகிழ்ச்சியை பறிகொடுத்துவிட்டு, பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பலர் உணர்வுகள் இல்லாமல் மரத்து போய் எந்திரமாக ஓடுகிறார்கள்.

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நமக்கு நல்ல ஊதியத்துடன் வேலை கிடைத்திருப்பதாக நினைக்கலாம். ஆனால் நாம் பெற்றதை விட இழந்திருப்பது ஏராளம். 15 வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமத்தில் உள்ளவர்களும் சாதியாலும், மதத்தாலும் வேறாக இருந்தாலும், அண்ணா, அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா, மதினி, என உறவு முறையுடன் பாசமாக அழைந்து கொண்டிருந்தோம். இப்போது வெளியூர் வாழ்க்கையால் அப்படி யாரும் யாரையும் அழைப்பது இல்லை. ஏன் யார், யாருக்கு என்ன முறை என்பதை இன்றைய தலைமுறையினர் மொத்தமாக மறந்துவிட்டனர்.

பேஸ்புக் , வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் பிறப்பதற்கு முன்பு வரை ஊர் பொது விஷேசங்கள், திருமண விழாக்களில் ஒன்று கூடுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் யாராவது ஒருவரது வீட்டில் கல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, குலதெய்வ வழிபாடு, என இனிய நிகழ்வுகள் நடக்கும். அதில் எல்லா தரப்பு மக்களும் ஒன்று கூடி பங்கேற்று மகிழ்ச்சியோடு பேசித்திரிந்த காலம் இருந்தது. அப்போது யாரும் நேரத்தை பற்றி யோசித்தது இல்லை. எல்லோரும் ஒரே ஊர். ஒரு சிலர் மட்டும் வெளியூர்களில் இருந்து வருவார்கள்.

இதேபோல் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் திருமணம் உள்ளிட்ட வீட்டு சுபநிகழ்வுகள், தீபாவளி, பொங்கல், ஊர் கோயில் திருவிழா உள்ளிட்ட பண்டிகைக்கு கட்டாயம் வருவார்கள். நண்பகளுடன் ஊர்களில் உள்ள கிணற்றில், ஆற்றில் குளித்து மகிழ்வார்கள். விரும்பிய நடிகர்களின் படங்களை விசிலடித்து பார்த்துவிட்டு, போகாத உறவுகளின் வீடுகளுக்கு தேடி சென்று நலம் விசாரிப்பார்கள்.ஆனால் இப்போது அப்படி அல்ல... ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே உள்ளூரில் விவசாயத்தை பார்த்துக்கொண்டு, கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.


வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு விடுமுறை எடுப்பது ஒரு பிரச்னை என்றால், ஊருக்கு வருவதை விரும்பாமல் இருப்பது தான் உண்மையான பிரச்னையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பணம். விடுமுறை எடுத்தால் ஊதியத்தை இழப்பது ஒருபுறம், மறுபுறம் ஊருக்கு வருவதால் வரும் செலவு மறுபுறம்.

இதனால் சொந்த ஊருக்கு வருவதையே பலர் மறந்துவிட்டனர். இப்படி மறந்துபோனதால், சொந்த ஊரில் உள்ளவர்களுடன் பேச்சுகள் குறைந்தது. உறவுகளை தேடிச் சென்று பார்த்து மகிழ்ந்த தருணங்ளும் இல்லாமல் போய்விட்டது.

சரி உள்ளூரில இருந்து வெளியூர் சென்றவர்கள் ஏராளமான ஊதியம் வாங்குகிறார்களே.... அங்காவது மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பக்கத்து வீட்டில் உள்ளர்களின் பெயர்கள் கூட தெரியாமல், ஒரு எந்திரனைபோல், தினசரி வாழ்க்கை வாழ்கிறார்கள். யாரோ ஒருவருடைய இலக்கை அடைய கடினமாக உழைக்கிறார்கள். அருவி படத்தில் வரும் டயலாக்கை போல், ஆடம்பர பொருட்களை வீட்டில் அடுக்கி வைத்து, தவணைக்கு பணம் கட்ட முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

உறவுகளுடன் தினசரி பேசுவதுக்கு கூட யாருக்கும் நேரமில்லை(நேரம் ஒதுக்குவதில்லை). ஏன் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பேசுவதுக்கு கூட நேரம் ஒதுக்குவதில்லை. எந்தநேரமும் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் மூழ்கி விடுகிறார்கள். இதனால் அவர்கள் பெற்றது, இரத்தக்கொதிப்பு, டென்சன், மனஅழுத்தம், இதைக்குறைக்க மாத்திரை, மருந்து, கடைசியில் ஆப்ரேசன்...... இதனால் லட்சக்கணக்கில் செலவு... மீண்டும் கடன்... இது தான் இன்றைய எதார்த்த வாழ்க்கை என்பது கசப்பான உண்மை!

-- நன்றி மாலைமலர்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1