சுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்க?

 Friday, November 8, 2019  06:30 PM

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, முதுமலை என நீலகிரி மாவட்டம் முழுக்க சுற்றுலாவுக்கான ஏரியாக்கள்தான். உங்களை மகிழ்விக்க வேண்டிய இந்தச் சுற்றுலா தலங்கள், சில நேரங்களில் தவறான நபர்களால் உங்களை எரிச்சலடையவும் வைத்து விடும். கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் நீங்கள் ஏமாற்றப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு மிக அதிகம். வழக்கமான சுற்றுலா தலங்களில் உள்ள பிரச்னைதான் என்றாலும், குறைந்தபட்சம் இரு நாட்கள் தங்கி பார்க்க வேண்டிய நீலகிரி மாவட்ட சுற்றுலா பயணத்தில், நீங்கள் கவனமாய் இருக்க வேண்டிய விஷயங்கள் நிரம்ப இருக்கின்றன.

முதலில் நீங்கள் கவனமாய் இருக்க வேண்டியது தங்கும் ஓட்டல் விஷயத்தில்தான். உங்களுக்கோ, உங்கள் நண்பருக்கோ தெரிந்த ஓட்டலில் தங்குவதுதான் உங்களுக்கு நல்லது. ஊட்டியை பொறுத்தவரை மதியம் 12 மணியில் இருந்து மறுநாள் மதியம் 12 மணி வரைதான் அறை வாடகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது நீங்கள் காலையில் 9 மணிக்கு அறைக்கு சென்றீர்கள் என்றால், முதல் 3 மணி நேரத்துக்கு ஒரு நாள் வாடகை தர வேண்டியிருக்கும். இதை பெரும்பாலும் விடுதியினர் சொல்ல மாட்டார்கள். அறையை விட்டு நீங்கள் காலி செய்யும் போதுதான் உங்களுக்கு இது தெரியவரும். எனவே, எந்த நேரத்தில் செக் அவுட் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெளிவாக கேட்டுக்கொள்வது நல்லது.

ரூம் விஷயத்தை அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது வாடகை. ஊட்டி, குன்னூர், முதுமலை, கோத்தகிரியில் பெரும்பாலான ஓட்டல்களில் ரேட் கார்டு இருக்காது. அவர்கள் சொல்வதுதான் வாடகை. வழக்கமாக ரூ.500 முதல் 800 ரூபாய் வரை வாடகைக்கு விடும் அறையை, 2 ஆயிரம் ருபாய் எனக்கூட சொல்வார்கள். எனவே, ஒன்றுக்கு இருமுறை வாடகை விஷயத்தில் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.
தெரிந்தவர்கள் மூலம் சென்றால், அவர்கள் கேட்கும் தொகையில் பாதி தொகையை மட்டுமே செலுத்த வேண்டி வரும். எனவே, ரூம் வாடகையில் உங்கள் தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் ஜாக்கிரதையாய் இருங்கள்.

அறை எல்லாம் போட்டாச்சு. அடுத்து சாப்பாடு. சாப்பிட ஓட்டலுக்கு போன உடன் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவு என்ன விலை, அதற்கான சைட் டிஷ் என்ன விலை என்பதையெல்லாம் தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் எந்த கேள்வியும் கேட்காமல் போய் அமர்ந்து 2 பரோட்டா ஆர்டர் செய்து சாப்பிட்டால், பரோட்டாவுக்கு 40 ரூபாயும், அதற்கான குருமாவுக்கு 100 ரூபாயும் பில் வரும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும்.


yt_custom
அடுத்து கைடு விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஊட்டிக்கு நீங்கள் செல்வது முதல் முறை என்றால், ஓரளவு பெரிய ஓட்டல்களில் தங்கினால் அங்கே கைடுகள் இருப்பார்கள். இல்லையெனில் தெரிந்த நபர்கள் மூலமாக எங்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தை அறிந்து செல்வது நல்லது. இதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் உங்களை பர்ஸை பதம் பார்த்து விடுவார்கள். எனவே, கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்து வாகன விஷயத்தில் கவனம் தேவை. ஊட்டியில் சீசனின் போது நீங்கள் ஒரு காரை வாடகைக்கு அமர்த்துகிறீர்கள் என்றால் கடுமையான வாடகையைதான் சொல்வார்கள். வழக்கமாக தின வாடகை ஆயிரம் ரூபாய் என்றால், சீசனில் இது இரு மடங்காக இருக்கும்.

தெரிந்தவர்கள் மூலம் புக் செய்வதன் மூலம் நியாயமான வாடகையில் செல்லலாம். அதேபோன்று முதுமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது தெரிந்த நபர்கள் மூலம் கார்களை புக் செய்து கொள்வது தான் வசதி.

ஊட்டி குளிருக்கு ஸ்வெட்டர், குல்லா போன்றவை தேவைப்படும். ஸ்வெட்டர் விலையை கேட்டால் சில நூறுகளில்தான் ஆரம்பிப்பார்கள். ஒரு ஸ்வெட்டர் 700 ரூபாய் என்றால் 70 ரூபாய்க்கு கொடுப்பியா என நீங்கள் பேரத்தை துவக்கலாம். அந்த அளவு பல மடங்கு லாபம் வைத்துதான் விற்பார்கள். 700 ரூபாய் சொல்லும் ஸ்வெட்டரை 100 ரூபாய்க்கு கொடுத்து விடுவார்கள். எனவே, இது போன்ற பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். நீலகிரி தைலம், ஹோம் மேட் சாக்லேட், ஊட்டி வர்க்கி என நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கும் பொருட்களை வாங்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு படத்தில் வடிவேலுவிடம் மல்லிகை வாசனை காட்டி விட்டு, 'மல்லிகை பூவை முகர்ந்துட்டே... எனவே வாங்கித்தான் ஆக வேண்டும்' என கட்டாயப்படுத்துபவரிடம் சிக்கிக்கொள்வாரே அதுமாதிரியும் இங்கு நடக்கும். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் தரமில்லாத டூப்ளிகேட் பொருட்களை உங்கள் தலையில் ஈசியாக கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை.

டென்ஷனை குறைக்க ஜாலியா டூர் போறீங்க. டென்ஷனை குறைச்சு, ஜாலியா இருக்கணும்னா நீங்க இதுலயெல்லாம் ஜாக்கரதையா இருக்கணும் பாஸ். இல்லைனா கஷ்டம்தான்.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Twitter_Right
Insta_right
Telegram_Side
fb_right