சூலூரின் தொன்மை வரலாற்றை கூறும் - கல்வெட்டுகள்

 Friday, November 8, 2019  03:30 PM

சூலூர் கல்வெட்டுகள், சூலூரின் தொன்மை வரலாற்றை கூறும் உறுதியான சான்றுகள் ஆகும். கி. பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை சூலூரின் வரலாற்றைக் கூறும் சான்றுகள் இல்லை. சூலூர் வரலாறு தொடர்பாக 8 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

சூலூர் பெருமாள் கோவில் நுழைவாயிலருகே ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மிகப்பழைய வட்டெழுத்தால் எழுதப்பட்டு சில இடங்களில் சிதைந்துள்ளது.

கல்வெட்டுச் செய்தி :

கோக்கண்டன் வீரநாராயணன் தன் இரண்டாம் ஆட்சியாண்டில்
சூலூர் கோவிலுக்கு பெண்மணி ஒருவர் சாத்தனார்
சிலையை செய்தளித்துள்ளார்.

சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு(கி. பி. 13) :

சர்க்கார் பெரியபாளையத்தில் நான்கு கல்வெட்டுக்கள் கிடைத்தன. இதில் சூலூரைப் பற்றி விரிவான செய்திகள் கிடைத்துள்ளன. திருப்பூருக்கு அருகில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள குரக்குத் தளி கோவில் சுவற்றில் உள்ள கல்வெட்டு 'முகுந்தனூர் குரக்குத் தளியாருக்கு ' ('முகுந்தனூர்' என்பது சர்க்கார் பெரியபாளையத்தின் பழங்காலப் பெயர்) சூலூரைத் தானமாக தந்துள்ளது பற்றி தெரிவிக்கிறது.

முதல் கல்வெட்டு :

பாண்டிய மன்னன் சூலூர் வந்தபோது சூலூரையும், குளத்தையும் சீர்ப்படுத்த எடுத்த நடவடிக்கையை மிகவும் பழைய வட்டெழுத்துக்களால் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு சில இடங்களில் சிதைந்துள்ளது. சூலூரை சீர்ப்படுத்த விரும்பிய சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டுக் குடிமக்களை சூலூரில் குடியமர்த்தினான்.

இக்கல்வெட்டுச் செய்தி:

சூலூர் அனையையும், ஊரையும், குளத்தையும் அன்றாடம் கவனிக்க வேண்டும்.
அதற்கு கூலியாக இருதூணி நானாழி நெல் அளக்க வேண்டும்,


இப்பணிக்காக சூலூர் மேலைப்பற்றில் நிலமும், சூலூர் குளத்தில் மீன் பிடிக்கும் உரிமையும்,
அரசப்பிரதிநிதி எவராவது சூலூர் வந்தால் அவர்களுக்குக் கூலி (பயணப்படி) தரும் கடமையும்,
வெள்ளலூரைச் சேர்ந்த பிள்ளையான் என்ற பெயருடைய செம்படவருக்கு தரப்பட்டது.

இரண்டாம் கல்வெட்டு

'முகுந்தனூர் குரக்குத் தளியாருக்கு ' (சர்க்கார் பெரியபாளையம்) சூலூரில் உள்ள நால்வகை நிலங்களின் வருவாய் விலங்குகளை உரிமை ஆகுவதை உறுதிபடுத்திய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

மூன்றாம் கல்வெட்டு :

சூலூரில் சுந்தர பாண்டியன் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகளான செக்குஇறை, தறிஇறை, தட்டொலி பாட்டம், வாய்க்கால் பாட்டம், பாசிப்பாட்டம், அந்தராயம், சித்தாயம் ஆகிய வரிகளை மக்களிடம் வசூலிக்கும் உரிமையை 'முகுந்தனூர் குரக்குத் தளியார் ' கோவிலார் சிதக்குறிச்சி ஊராருக்கு வழங்கியதை கூறுகிறது.
கோவில்பாளையம் கல்வெட்டு

கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சர்க்கார் சாமக்குளம், (தற்போதைய பெயர் கோவில்பாளையம்) இதற்கு கலையன்புத்தூர் என்ற பெயரும் உண்டு. இவ்வூர் கல்வெட்டில், வசூலிக்கும் முழு வருமானத்தை பெற்றுக் கொள்ளும் உரிமை காணியாட்சி உரிமையாகும் இதை 30 அச்சுகாசுக்கு அப்பன் வீரராசேந்திர சக்கரவர்த்தி என்ற சிவபிராமணனுக்கு சுந்தர பாண்டியன் வழங்கியதைக் கூறுகிறது. ஒரு ஆச்சுக்காசு என்பது ஒன்னேகால் பவுன் தங்கத்திற்கு சமமானது, 30 அச்சுக்காசுக்கு முப்பத்தேழரை பவுன் தங்கத்திற்கு சமம்.[1]

சூலூர், இடிகரை, துடியலூர், கூடலூர், கலையன்புத்தூர் முதலிய ஊர்களின் முழு வருமானத்தையும் பெற்றுக்கொண்டு, தமக்கு வேண்டியவர்களை குடியமர்த்தியும், கோவிலில் பூசை காரியங்களைத் தடைபடாமல் நடத்தி வரவேண்டும் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

செலக்கரிச்சல் கல்வெட்டு

செலக்கரிச்சலிலிருந்து அப்பநாயக்கன்பட்டி செல்லும் வண்டிப்பாதையில் இக்கல்வெட்டு உள்ளது. வட்டெழுத்துக்களாலான இக்கல்வெட்டில் ஆங்காங்கே சிதைந்து முழுவிடயமும் அறிய இயலாதுள்ளது.

இடிகரை கல்வெட்டு

சூரலூர், இடிகரை, துடியலூர், கலையன்புத்தூர் ஆகியவற்றில் அப்பன் வீரராசேந்திர சக்கரவர்த்தி என்ற சிவபிராமணனுக்கு காணியாட்சி உரிமை வழங்கியதை தெரிவிக்கிறது. இப்பகுதி வருமானத்தை விலாடசிங்கத்தேவர் வசூலிக்கவேண்டியதை கூறும் கல்வெட்டு. இக்கல்வெட்டில் விக்கிரமச்சோழன் ஒப்பமிட்டதை பதிவுசெய்துள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2