கையால் எழுதும் பழக்கத்தை மறக்கடித்த கணினி தட்டச்சு...


Source: www.bbc.com
 Wednesday, November 6, 2019  12:12 PM

சித்திரம் மட்டுமல்ல; சிந்திக்கும் ஆற்றலும் கைப்பழக்கம் என்கிறது ஆய்வு. கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் மேலதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்புணர்த்தியுள்ளது.

உலக அளவில் குழந்தைகள் பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் போக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக, தற்கால குழந்தைகள் கணினிகளின் விசைப்பலகைகளை பயன்படுத்தியும் டேப்ளட்டுகளின் தொடுதிரை கணினிகளில் விரல்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யும் போக்கு அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக அவர்களின் (மூளை) வளர்ச்சியும் படைப்புத்திறனும் பாதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு பாதிக்கப்படும் என்று பதில் கூறியிருக்கிறது இந்த புதிய ஆய்வின் முடிவு.

குழந்தைகள் கைகளால் எழுதிக் கற்கும் நடைமுறை அவர்களின் மூளை வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை விளக்கும்படி பிபிசியின் சார்பில் மூளை வளர்ச்சி தொடர்பான நரம்பியல் நிபுணர் கரின் ஜேம்ஸிடம் கேட்கப்பட்டது.

கையெழுத்தும், கணினிவிசைப்பலகையும்

இந்த கேள்விக்குப் பதில் சொல்வதற்காக அமெரிக்காவில் இருக்கும் ப்ளூமிங்க்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜேம்ஸ் இதுவரை படிக்கத்துவங்காத குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டார். இந்த குழந்தைகளால் எழுத்துக்களை அடையாளம் காண முடியும் என்றாலும், அந்த எழுத்துக்களைக் கூட்டி வார்த்தையாக உருவாக்க அவர்கள் பழகியிருக்கவில்லை.

இந்த குழந்தைகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவு குழந்தைகளுக்கு இந்த எழுத்துக்களை கைகளால் எழுத பயிற்சியளிக்கப்பட்டது. மற்ற பிரிவு குழந்தைகளுக்கு கணினியின் விசைப்பலகைகள் மூலம் எழுத்துக்களை தட்டச்சு செய்யப் பழக்கப்பட்டது.

Real_Custom1

அடுத்த கட்டமாக இந்த குழந்தைகள் எந்த அளவுக்கு எழுத்துக்களை கற்றிருக்கிறார்கள் என்று பரிசோதிக்கப்பட்டது. இந்த குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டை கண்காணித்து பதிவு செய்யக்கூடிய மின்காந்த எதிர்வினை படப்பிடிப்பு தொழில்நுட்பமும் இந்த பரிசோதனைகளின்போது பயன்படுத்தப்பட்டது.

இதன்மூலம் குறிப்பிட்ட எழுத்துக்களை குழந்தைகள் கற்றுத் தேரும்போது அவர்களின் மூளையில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த பரிசோதனைப் பயிற்சிக்கு முன்பும், பயிற்சி முடிந்த பின்புமாக இந்த குழந்தைகளின் மூளைகள் ஸ்கேன் மூலம் படம்பிடிக்கப்பட்டன. இந்த இரண்டு குழு குழந்தைகளின் மூளைகளும் தமது செயற்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனின் அளவும் இதன் மூலம் கணிக்கப்பட்டது.

பள்ளிகளில் கணிணிகளா?

உலகின் சில பகுதிகளில் மழலையர் பள்ளிகள் மட்டத்திலேயே கூடுதலாக கணினிகளை அறிமுகம் செய்யவேண்டும் என்கிற அவசரம் காட்டப்படுவதாகவும், இந்த ஆய்வின் முடிவுகள் அதை தாமதப்படுத்தக்கூடும் என்றும் பேராசிரியர் ஜேம்ஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

பல பள்ளிகளில் கூட்டெழுத்து பழகும் நடைமுறையை விருப்பப்பாடமாக மாற்றிவிட்டதால், பல ஆசிரியர்கள் அதை பள்ளிகளில் கற்பிப்பதையே நிறுத்திவிட்டார்கள்.

கணினிகளின் விசைப்பலகைகளே பள்ளிகளின் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளத்துவங்கியிருக்கின்றன. பள்ளிக்கூட கால அட்டவணையில் கையெழுத்தின் முக்கியத்துவம் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வாக, டேப்ளெட்களின் தொடுதிரையில் எழுதும் ஸ்டைலஸ் எனப்படும் மின்னணு பேனாவைக் கொண்டு எழுதும் பழக்கத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தலாம் என்கிற யோசனை சிலரால் முன் வைக்கப்படுகிறது. இதன் மூலம் கைகளால் எழுதும் பழக்கத்தின் பலன்கள் கிடைக்கும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், கைகளால் எழுதுவதற்கு மாற்றாக வேறு எந்தவிதமான மாற்று ஏற்பாடும் உரிய பலன் தருமா என்பது கேள்வி.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Right3
Website Square Vanavil2
Real_Right2