கண் தான விழிப்புணர்வு மூலம் 6440 கண்கள் ஒளிரிடக் காரணமாக இருந்த கோவை மனிதர்...

 Saturday, October 5, 2019  08:30 PM

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரன். இதுவரை 6440 கண்களை தானமாகப் பெற்றுத் தந்துள்ளார். இதற்காகப் பொது மக்களிடம் 40 வருடமாகப் போராடி கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இறக்கும் தருவாயில் உள்ளவர்கள், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களைத் தேடிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களைக் கண் கொடை செய்ய ஊக்கப்படுத்தியுள்ளார்.

‘இருக்கும் போது ரத்த தானம் இறந்த பின் கண் தானம்’ என்று பள்ளி மாணவர்களிடம் கண் தான விழிப்புணர்வு பற்றிய தகவலை பேசிக்கொண்டு இருந்தவர், சற்று நம்மிடம் பேச துவங்கினார்.

‘‘தனியார் நிறுவனத்தில் சாதாரண ஊழியன் நான். வயசு அறுபது ஆகுகிறது. படிப்பு அந்த காலத்து ஐந்தாம் வகுப்பு. என்னோட கண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும். அது தான் என்னை இப்படி இயங்க வைக்குதுனு நினைக்கிறேன்,” என்றார்.

40 வருசத்துக்கு முன்னாடி பழைய பேப்பர் கடையில் ஒரு புத்தகம் எடுத்து பார்த்துட்டு இருந்தேன். அதுல தான் முதல் முறையா கண்களை தானம் செய்யலாமென்று கட்டுரையை படித்தேன். பெரிய அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. மனதில் அந்தச் செய்தி ஓட்டிட்டு இருந்தது, ‘கண்ணு இல்லாம இருக்குறது எவ்வளவு கொடுமைனு’ அது பற்றிய சிந்தனையாகவே இருந்தேன்.

தொடர்ந்து பார்வையற்றோர்கள் பள்ளிக்குச் சென்று அவங்களைப் பார்த்து ஆறுதலாகப் பேசிக்கொண்டு இருப்பேன்,” என்கிறார்.

எண்பதுகளில் தமிழ் நாட்டில் கண்தானம் என்பது மக்கள் கேள்விப்படாத ஒன்று. எப்படி அணுகுவது. யாரைப் பார்ப்பது என்று எதுவும் தெரியாமல் இருந்த ஜெகதீசனுக்கு, கோவையின் அப்போதைய பிரபல மருத்துவர் ‘சங்கர நேத்ராலயா’ டாக்டர் ரமணி பல முக்கிய தகவலை சொல்லி உதவியுள்ளார்.

‘‘1980களில் கண்தானம் பற்றி புரிதல் இல்லை. ஆறு வருடம் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு செய்தேன். யார்கிட்டயும் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண முடியலை. கிண்டல், கேலி தான் மிஞ்சும். அப்படியும் ஒரு சிலர் முன் வந்தாலும் சமயம், சடங்குனு தட்டி கழிச்சுடுவாங்க.”

‘சவுரி பாளையம்’ என்ற ஊரில் ஒருத்தர் இறந்துட்டார்னு கேள்விப்பட்டு வேக வேகமா போனேன். கண் தானம் பற்றி எடுத்துச் சொன்னேன். எல்லாரும் சேர்ந்து அடி பின்னிட்டாங்க ‘ஏன்டா என்னோட அம்மா கண்ணை எடுத்து வியாபாரம் பண்ண பாக்குறியான்னு, போதையில் இருந்த ஒருத்தர் ஓங்கி அடித்தார். மூணு பல்லு உடைஞ்சு விழுந்துடிச்சி.

இளம் வயசு பெருசா வலிக்கல. எந்த ஊருக்கு போனாலும் யாராச்சம் கை நீட்டுவாங்க, என்று சிரித்து கெண்டே பேசினார் ஜெகதீசன். கேட்கும் நமக்குக் கண்கலங்கியது. தொடர்ந்து பேசியவர்,

‘‘வேலையை பார்த்துக்கொண்டே ஓய்வு நேரத்தில் கண் தான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஒவ்வொரு ஊரா போவேன். பெரும்பாலும் அடி வாங்கிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அட்லீஸ்ட் சட்டை கிழிந்து இருக்கும்.”

ஊர் இளவட்டங்கள் சைக்கிளைப் பஞ்சர் செய்து ‘உன் ஊர் வரைக்கும் தள்ளிகிட்டே போனு’ அனுப்பி விடுவாங்க. அப்படி ஒரு நாள் வீட்டுக்கு வரப்ப தான் என்னோட பாட்டி அலமேலு அம்மாள் இறந்துட்டாங்க. சாகப்போறப்ப ‘என் பேரனுக்காக என்னோட கண்ணை தானமா செய்றேன்னு சொல்லிட்டு செத்து இருக்காங்க.

அடுத்த ஆறு மணி நேரத்துக்குள்ள கண்ணை தானம் செய்யனும், இல்லைனா பயன் படாமலே போய்டும். அப்போ தகவல் தொடர்பும் குறைவு தான். சைக்கிளை எடுத்தேன் 15 கிலோ மீட்டர் 20 நிமிசத்துல கோவை ‘சங்கர நேத்ராலயாவுக்கு போய் தகவல் தந்தேன். விரைந்து வந்து கண்ணை எடுத்துட்டு போனாங்க அந்த கண்ணை பொறுத்துன மனிதர் இன்னமும் உயிரோட இருக்கிறார், என்றார் மன திருப்தியுடன்.

அவரும் கண்தானம் பண்ணுவார். ஆறு வருட உழைப்புக்கு பிறகு சாதித்த உணர்வு ஏற்பட்டது. பாட்டியின் மேல் பெரும் மதிப்பே வந்தது. கண்களை ஒருவர் நான்கு தலைமுறை வரை பயன்படுத்தலாம். சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி எவர் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம்.

இதுவரை 80 ஆயிரம் பேரை கண்தான பதிவு செய்ய வைத்துள்ளார். 6 ஆயிரத்து 440 கண்களைத் தானமாக பெற்று தந்துள்ளார் ஜெகதீஷன்.

yt_custom

‘‘விபத்தில் மரணம், நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் இருப்பவர்கள் பள்ளி, கல்லூரி என சகல இடத்திலும் தானம் கேட்டு பேசுவேன். பார்வை குறை பாடு உள்ளவர்களும் கண் தானம் செய்யலாம்,’’ என்கிறார். தொடர்ந்து தனக்கு நடந்த நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘15 வருசத்துக்கு முன்னாடி கோவையில் பார்சல் சர்விஸ் செய்யும் விக்னேஷ் என்பவருக்கு விபத்தில் பார்வை பறிபோனது ‘இனிமே எப்படி வாழ்றதுனு’அடிக்கடி தற்கொலை முயற்சில ஈடுபட்டு இருந்தார். என்கிட்ட கதறி அழுவார். ஆறுதல் சொல்லுவேன். அப்போ தான் என் அக்காவின் கணவர் இறந்துட்டார். சிறு வயசு அவருக்கு. வீடு முழுக்க சோகம். ஆனா நான் கண் தானம் செய்யுறதுல மும்முரமா இருந்தேன்.”

ஒருபக்கம் கன்ணீரோட எங்கள் குடும்பம். கண் தானத்துக்கு முக்கியமே நேரம் தான். விபத்து நடந்த உடனே கண் தானத்துக்குக்கான எல்லா வேலையையும் மின்னல் வேகத்தில் செய்ய ஆரம்பித்தேன். ஆன அவரை விட சீரியசா இருந்த வேரு ஒருத்தருக்கு அந்த கண் பொருத்தப்பட்டது. பொதுவாக கண் தானம் செய்பவரிடம் யாருக்கு பொருத்தப்பட்டுள்ளது என்ற தகவலை கூறமாட்டார்கள். கடந்த 20 வருடமாக இதை அரசு கடைப்பிடிக்கிறது.

உலகிலேயே இலங்கை தான் கண் தானம் செய்வதில் முதலிடம். இலங்கை அரசே சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்துள்ளது. ‘கண்தானம் செய்து இருந்தால் தான் மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதியே உண்டு என்று.

குஜராத்தில் கூட ஒரு கிராம மக்கள் கட்டாய கண் தானம் செய்யும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். நம்ம ஊர்லயும் அது மாதிரி நடக்கவேண்டும். எங்க வீட்டில் உள்ள எல்லோரும் உடல் தானம் செய்து உள்ளோம். உடலில் என்ன உறுப்புகளை எடுக்க முடியுமே எல்லாத்தையும் தானம் செய்துள்ளோம். உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிக்க பயன் படுத்திக்கணும்னு எழுதி தந்து விட்டோம்.

தமிழ் நாட்டில் மட்டும் 8 லட்சம் பேர் கண் தேவைனு பதிவு செய்து இருக்காங்க, பதிவு முறையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. கண்தானம் பற்றிய சில தகவல்களை ஜெகதீஷ்வரன் கூறினார்.

கண்தானம் செய்வதால், நாம் இறந்தாலும், மற்றொருவர் மூலம் நம் கண்கள் இந்த உலகை காணும். ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, தேசிய கண்தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் 4 கோடி மக்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். இவற்றில், நம் இந்தியாவில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். நாம் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால், இந்தியாவில் பார்வையற்றவர்களே இல்லாமல் மாற்ற முடியும்.

கண் தானம் செய்ய விரும்புவோர், நமக்கு அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொண்டு, கண்களை தானம் செய்வது பற்றி தெரிவிக்கலாம். ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் கண்தானத்தை செய்ய வேண்டும். கண்தானம் செய்யும் இறந்தவரையும், கண்களைப் பெற்றுக் கொள்பவரையும் மருத்துவர் முறையாக பரிசோதனை செய்த பிறகுதான், கண் விழிகளை பார்வையற்றவருக்குப் பொருத்த முடியும்.

கண்தானம் செய்பவர் இறந்ததும், உடனடியாக அவரது கண்களை மூடி, கண்ணின் மீது ஐஸ்கட்டி அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும். கண்ணின் முக்கிய உறுப்பான 'கார்னியா' எனப்படும் கருவிழிக்குள் வெளிச்சம் போகமல் பாதுகாக்க வேண்டும். மூக்குக் கண்ணாடி அணிந்தவர்களும், கண் புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது நிரம்பியவர் முதல் எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம்.

கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்:

போதிய வெளிச்சத்தில்தான் படிக்கவும், எழுதவும் செய்ய வேண்டும். கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்காமல், தண்ணீரைக் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும். பால், முட்டை, கீரை, மீன், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

கணினி மற்றும் டி.வி.யை பயன்படுத்துவோர், அடிக்கடி கண்களை மூடியும், சிமிட்டவும் செய்ய வேண்டும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும், அதற்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் கண்களை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

இந்த பூமி அழகானது எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்போம். கண் தானம் செய்வோம் !


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
mobile_App_right
Telegram_Side
fb_right
Twitter_Right