என்ட்ர ஊரு... கோயமுத்தூருங்கோ...! கலக்கும் அனுமோகன்

 Friday, October 4, 2019  02:30 PM

தமிழ் சினிமாவில் கோவையைச் சேர்ந்த சிவகுமார், பாக்கியராஜ், சத்யராஜ், மணிவண்ணன், கோவை சரளா ஆகியோருடன் இயக்குனர்கள் சுந்தரராஜன், அனுமோகன், 1980களில் கோலோச்சி, சாதித்து காட்டினர்.இவர்களில், கொங்கு தமிழை, 'கோவை பாஷை'யில் சினிமாவிலும் பேசி கலக்கியவர்களில் சரளாவும், அனுமோகனும் முக்கியமானவர்கள்.

வெள்ளிவிழா படங்களை வரிசையாக சினிமாவுக்கு தந்த இயக்குனரும், நடிகருமான சுந்தரராஜனின், 30 ஆண்டு கால நண்பர் அனுமோகன். ஆனாலும், இன்றளவிலும் குரு- சிஷ்யனாகவே உள்ளனர். கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அனுமோகனை சந்தித்தபோது...

சினிமா உலகுக்கு எப்படி வந்தீர்கள்?

படிக்கும் காலத்தில், சினிமா என்றால் உயிர். வீட்டு பக்கத்திலேயே தியேட்டர் உண்டு. பெரும்பாலான நாட்களில் படம் ஓடும்போது, தியேட்டர் சுவற்றில் காது கொடுத்து வசனத்தை கேட்பேன். வீட்டுக்கு வந்து அம்மாவிடம் தெரிவித்து, நடித்தும் காட்டுவேன்.

அம்மாவுக்கு என்னை விட சினிமா மீது மோகம். இருவரும் அடிக்கடி சினிமாவுக்கு செல்வோம்.எனது நடிப்பு மற்றும் சினிமா ஆசைக்கு இயக்குனர் சுந்தரராஜன் தான் தீனி போட்டார். நண்பர்கள் ஒன்று சேர்ந்து நாடகம் போடுவோம். அதுவே, சினிமாவுக்குள் நுழைய வழி வகுத்தது. அவர் இயக்கிய வெள்ளிவிழா படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். இன்றும் எங்களின் குரு - சிஷ்யன் நட்பு தொடந்து கொண்டு தான் இருக்கிறது.எத்தனை படங்களை இயக்கி உள்ளீர்கள்? நான்கு படங்கள், என்றுமே நினைவில் இருப்பது, பிரபு நடித்த, 'நினைவுச்சின்னங்கள்' தான்.இப்போதும் நடிக்கிறீர்களா? மீண்டும் டைரக்ட் செய்யும் எண்ணம் உண்டா?சின்னச்சின்ன வேடங்களில், 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். பெரும்பாலும் காமெடி வேடங்கள் தான். டைரக்ட் செய்யும் ஆசை உண்டு, பார்ப்போம்.

அப்பா என்னை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கவெச்சார். கோவை சி.ஐ.டி காலேஜ்லதான் படிச்சேன். மூணு வருஷம் படிச்சேன். நாலாவது வருஷம் சரியாப் படிக்கலை. சினிமா, நாடகம்னு சுத்திக்கிட்டு இருந்தேன். சினிமா ஆசையில சென்னைக்கு வந்து ஆர்.சுந்தர்ராஜன் சார்கிட்ட உதவி இயக்குநராகச் சேர்ந்துட்டேன். அவர்கிட்ட பல படங்கள்ல வேலை செஞ்சேன். அப்புறம் ரொம்ப நாளாக நேசித்த என் காதலி அனுராதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவங்க ஐயங்கார். நாங்க ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

எங்க வீட்டுல ஏத்துக்கிட்டாங்க. அவங்க அம்மா, அப்பா ஏத்துக்கலை. என் மனைவிகிட்ட 'வா... அவங்களைப் போய் பார்க்கலாம்'னு சொல்லுவேன். `போனா, அவங்க நம்மை அவமானப்படுத்துவாங்க’னு சொல்லுவா. எனக்கும் என் மனைவிக்கும் சாமி கும்பிடுறது தொடங்கி, நிறைய விஷயங்கள்ல எந்த கருத்து வேறுபாடும் வந்தது கிடையாது. கோவையில எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடுதான் அவங்க வீடு.என் மனைவியின் `அனுராதா’ங்கிற பேரையும், `மோகன்’கிற என் பேரையும் சேர்த்துத்தான் 'அனுமோகன்'னு வெச்சுக்கிட்டேன். நடிகர் மோகன், அமலா, ரேகா நடித்த 'இது ஒரு தொடர்கதை' தொடங்கி, பல படங்களை இயக்கியிருக்கேன். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு.

`சரபம்’ பட டைரக்டர் அருண் என் பையன்தான். என் திருமணம் முடிஞ்சு 33 வருஷம் ஆகுது. இன்னமும் என் மாமியார் எங்ககிட்ட பேச மாட்டாங்க. அவங்க வீட்டு உறவுக்காரர்களின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் போவோம்... வருவோம். அவங்க மட்டும் பேசவே மாட்டாங்க. ஒரு டி.வி பேட்டியிலகூட 'நீங்களும் எனக்கு ஒரு அம்மா மாதிரிதான். பழசையே இன்னும் ஏன் மனசுலவெச்சுக்கிட்டு இருக்கீங்க'னு சொன்னேன். அவங்க மனசு மாறலை. இது என் மனசுல ஒரு குறையாகவே இன்னிக்கும் இருக்கு'' என்றவரிடம் 'மனஅழுத்தம் போக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளுவீர்கள்?’’ என்று கேட்டோம்.

``எதையுமே கேஷுவலா எடுத்துக்குவேன். சீரியஸா எடுத்துக்க மாட்டேன். நம்மைவிடக் கஷ்டப்படுறவங்களைப் பார்த்து நான் ஆறுதல்பட்டுக்குவேன். மசூதி, கோயில், சர்ச் எல்லாத்துக்கும் போவேன். எல்லா சாமிகளையும் கும்பிடுவேன். ரொம்ப பிரஷராக இருந்தா, என்னோட ஸ்கூல், லைஃப் என் காலேஜ் லைஃப் இதையெல்லாம் அசைபோடுவேன். காதலிக்கும்போது நான் விரும்பிக் கேட்ட காதல் பாடல்களை திரும்பக் கேட்பேன். கார்லயும் என் ரூம்லயும் இளையராஜா பாடல்கள் ஒலிச்சுக்கிட்டே இருக்கும். அதைவிட வேற 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்ன இருக்கப் போகுது?

என்னைப் பொறுத்தவரை எனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது. எல்லோரும் எனக்கு நட்பாக இருக்கணும்னு நினைப்பேன். என்னை யார் பார்த்தாலும், `அய்யோ இவன் வந்துட்டானே'னு நினைக்கக் கூடாது. முடிஞ்ச அளவுக்கு வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் இருப்பேன்.

காலையில 4:30 மணிக்கெல்லாம் என்னோட நாள் தொடங்கிடும். என் வீடு இருக்கிற நுங்கம்பாக்கத்தில் இருந்து, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். ஆறரை கிலோ மீட்டர். ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்திடுவேன். கிட்டத்தட்ட நாற்பது வருஷமா இருக்குற ஒரு பழக்கம் இது.

நடைப்பயிற்சி உடல், உள்ளம் ரெண்டையும் நல்ல முறையிலவெச்சுக்க உதவுது. `நாம பெரிய டைரக்டர்... நாம பெரிய நடிகர்’ங்கிறதெல்லாம் என் மூளைக்குப் போகாம பார்த்துக்குவேன். ட்ரெயின்ல போனாலும், ஃபிளைட்ல போனாலும் யார் செல்ஃபி எடுத்துக்கணும்னு கேட்டாலும், உடனே `சரி’னு சொல்லிடுவேன். இப்போல்லாம் ஆட்டோகிராஃப் கிடையாது. போட்டோகிராஃப்தானே எடுக்கிறாங்க.

வீட்டுக்கு வந்ததும் என்னோட டூ-வீலர், கார் ரெண்டையும் நானே துடைச்சு சுத்தம் செய்து, கழுவுவேன். சிலர், 'என்ன சார்... தினமும் இதைத் துடைச்சிக்கிட்டே இருக்கீங்க?’னு கேட்பாங்க. `நாம தினமும் குளிக்கிற மாதிரிதான் இதுவும்’னு சொல்வேன். நாம தினமும் பயன்படுத்தும் பொருளை நாமதான் சுத்தமா வெச்சுக்கணும்னு நினைப்பேன். இதுவே எனக்குப்பெரிய எக்சர்சைஸாக இருக்கும்.’’ சிரித்தபடி சொல்கிறார் அனுமோகன்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1