கோவையில் கிராம மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த கல்லூரி பேராசிரியை

 Thursday, October 3, 2019  06:30 PM

ஐ.ஐ.எம்-ல எம்.பி.ஏ-வும், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்துல எம்.பி.எஸ் (Master of Professional Studies) படிப்பும் முடித்த ஒருவரை எங்க பார்க்கலாம்னு நினைக்கிறீங்க? ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துலயோ அமெரிக்காவிலேயோதானே?!

இத்தனை தகுதியுடன் இருக்கும் ஷோபனா மாதவனை, கோவை எட்டிமடை கிராமத்தில் குடிசைக் குழந்தைகளுக்கு மத்தியில் பார்த்தபோது அதிர்ச்சியும், ஆச்சர்யமுமாக இருந்தது. கிராமப்புற குழந்தை களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக, சனிக்கிழமை தோறும் எட்டிமடை கிராமத்தில் சிறுவர் சிறுமியருக்கு outreach programme நடத்துகிறார் ஷோபனா மாதவன்.

கோவை அம்ரிதா கல்லூரியில் பேராசிரியரான ஷோபனாவின் மேற்பார்வையில், அக்கல்லூரியின் எம்.பி.ஏ மாணவ, மாணவிகள் எட்டிமடை கிராமத்துக்குள் நுழைந்ததும், எங்கிருந்தோ ஓடிவரும் சிறுவர்கள் இவர்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பரித்து வரவேற்கிறார்கள். அங்குள்ள அரசமரத்தடியில் எல்லாரும் கூடுகிறார்கள். தொடர்ந்து நலம் விசாரிப்புகள், சுட்டிகளின் படிப்பு பற்றிய அக்கறையான விசாரிப்புகள் என அரை மணி நேரம் நெகிழ்ச்சியாக கடந்தபின், கடவுளுக்கு வணக்கம் சொல்லி , ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் ஒரு சுட்டியுடன் அமர்ந்து, அவர்களுடைய பாடத்தை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். சில துடுக்கான சுட்டிகள் தாங்கள் கற்றதை எம்.பி.ஏ மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது அழகியலின் உச்சம்.

சற்றே சோர்வடைந்த பின்னர், விளையாட்டு துவங்குகிறது. இப்படியாக மாலை 5 மணி வரை பூமியில் ஒரு சொர்க்கம் காண்கிறார்கள் சுட்டிகள். விடைபெறுகையில் ஒவ்வொரு சுட்டிக்கும் பிஸ்கட்டுகள், பென்சில், பேனா, கைக்குட்டை போன்ற ஏதேனும் ஒரு பரிசு வழங்கப்படுகிறது.

ஆச்சர்யம் விலகாமல் ஷோபனா மாதவனுடன் பேசினோம்...

இந்த மாதிரி ஒரு outreach programme நடத்தணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?

நான் இந்த கல்லூரில சேருவதற்கு முன்பு மடகாஸ்கர், வியட்னாம் போன்ற நாடுகளின் பாதுகாக்கப்பட்ட இடங்களில் சர்வதேச மேம்பாட்டு ஆலோசகராக இருந்திருக்கிறேன். குஜராத்தில் கிராமப்புற ஆதரவு திட்டத்தை நடத்திவரும் அகா கானுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். என் கல்லூரி காலங்களில் இருந்தே இதுபோன்ற பணிகளில் ஈடுபாடு உண்டு.

yt_custom

எத்தனை ஆண்டுகளாக இதை நடத்தி வருகிறீர்கள்? இதன் நோக்கம் என்ன?

2004-ல் எட்டிமடைக்கு வந்தேன். 2005-ல் இருந்து நடத்தி வருகிறேன். கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தைப் புரியவைப்பதும் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதுமே இதன் நோக்கம்.

இந்நிகழ்வை ஒரு க்ரெடிட் கோர்ஸாக மாற்ற கல்லூரியில் விரும்பியும், அதை நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்களாமே?

ஆம். இதை ஃபார்மலாக செய்வதால் நிச்சயம் இன்னும் பல மடங்கு மாணவர்களை திரட்ட முடியும். ஆனால் அவர்கள் மனநிறைவோடு செயல்படுவார்களா என்பதை சொல்லமுடியாது. என் நோக்கம் நிறைவேறுமா என்பது சந்தேகமே. இதில் விருப்பமுள்ள 10 பேர் கலந்துகொண்டாலே அந்த குழந்தைகளுக்கு பேருதவியாக இருக்கும்.

இந்த கிராமத்தினருடைய பொருளாதார நிலையாலும், வாழ்க்கை முறையாலும் முன்னெல்லாம் பெண்கள் ஐந்தாம் வகுப்போடு நின்றுவிடுவார்கள். இப்போது ஏழு பெண்கள் இக்கிராமத்திலிருந்து கோவையிலுள்ள கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள் என்று முடித்துக்கொண்டார் ஷோபனா மாதவன்.

கிராமத்தில் வசிக்கும் பெற்றோர்களிடம் பேசியதில், இந்த நிகழ்ச்சிக்கு வரும் கல்லூரிப் பெண்களை பார்த்து தங்கள் குழந்தைகளையும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். படிப்பில் குழந்தைகள் கேட்கும் சந்தேகங்களைக் கூட தங்களால் களைய முடியாத நிலையில், இந்த நிகழ்ச்சி தங்கள் குழந்தைகளுக்கு உதவியாக இருப்பதாகவும் சந்தோஷப்படுகிறார்கள் பெற்றோர்கள் பலர்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் இச்சுட்டிகளோடு ஒரு நாள் விழா ஒன்றையும் ஒருங்கிணைக்கிறார் ஷோபனா. இதில் ஒரு சிறப்பு, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் எம்பிஏ முடித்து பின்னர் எங்கெங்கோ வேலை கிடைத்து சென்றுவிட்டாலும், இது போன்ற சேவையை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து செய்துவருவதே.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Insta_right
Telegram_Side
fb_right
Twitter_Right