பரவசப்படுத்தும் அழகான சுற்றுலாத் தலம் – பாலக்காடு

 Saturday, September 21, 2019  12:50 PM

இதமான குளிர்ந்த காற்றின் தழுவலால் களிப்புற்று “கதகளி“ ஆடிக் கொண்டிருக்கும் நெற்கதிர்கள், முகில்களை முத்தமிடப்போவது நீயா? நானா? என முட்டி மோதிக் கொண்டிருக்கும் நெடிதுயர்ந்த பாக்கு மரங்கள் என இயற்கை அழகு பின்னிப் பிணைந்த பச்சைப்பசேல் மாவட்டம், கேரளாவின் பாலக்காடு மாவட்டம். கோயம்புத்தூரை யொட்டி தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள பாலக்காடு, கேரளாவின் தலைவாசல் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் இருப்பதால், பாலக்காட்டின் தட்பவெப்ப நிலை பெரும்பாலும் “ஜிலு… ஜிலு…”தான். பாலக்காட்டில் பார்த்து பரவசப்பட நிறைய இடங்கள் உள்ளன.

அடர்ந்த காடுகள், சலசலத்து ஓடும் ஆறுகள், மலைக்க வைக்கும் மலைக்குன்றுகள் என இயற்கை விரும்பிகளை சொக்க வைக்கும் வனப்பகுதிதான், அட்டப்பாடி வனப்பகுதி. பாலக்காடு அருகே மன்னார்காட்டில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள இந்த வனப்பகுதியில், ஏராளமான ஆதிவாசி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மல்லேஸ்வரன் மலை உச்சியை பெரிய சிவலிங்கமாக கருதி இந்த மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இயற்கையுடன் இணைந்திருக்க விரும்புவோரும், ஆதிவாசி மக்களை பார்க்கவும், கலந்துரையாடவும், அட்டப்பாடியை தேர்வு செய்யலாம்.

மன்னார்காட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் “அமைதிப் பள்ளத்தாக்கு” அமைந்துள்ளது. இங்கு நடமாடும் வனவிலங்குகளுக்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதற்காக “முக்காலி” என்ற இடம் வரை மட்டுமே வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகு காட்டுக்குள் நடைபயணம்தான். முக்காலியில் இருந்து சில கி.மீ நடந்து சென்றால் அழகான “குந்திப்புழா” அருவி வரவேற்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கில் நடைபயணம் மேற்கொண்டு இயற்கை அழகை ரசித்து வருவது வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

பாலக்காடு அருகே ஒலவக்கோடு சந்திப்புக்கு அடுத்து ஏமூர் பகவதி கோவில் உள்ளது. இந்த அம்மனைப் பற்றிய ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு துறவிக்கு காட்சி தர சம்மதித்த அம்மன், அப்போது வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறாள். ஆனால் காட்சி தருவதற்காக அம்மன் கண்விழித்த போது அங்கு ஏராளமானோர் இருக்கவே அம்மன் மறைந்து விட்டாளாம். அம்மனின் மேலெழுந்து வரும் கையை மட்டுமே அங்கு கூடியிருந்த பக்தர்கள் பார்க்க முடிந்ததாம். அதன்படி அம்மனின் கை மட்டுமே இங்கு வழிபாட்டுக்கு உரியதாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த அம்மனை காலையில் சரஸ்வதியாகவும், மதியம் லட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

பாரதப்புழா ஆற்றங்கரையில் உள்ள குமாரபுரம் கோவிலில் வெங்கடாஜலபதி தனது மனைவியர் அலமேலு, மங்கம்மாள் ஆகியோருடன் எழுந்தருளி உள்ளார். இங்குள்ள வெங்கடாஜலபதி, திருப்பதிக்கு இணையானவராக பக்தர்களால் போற்றப்படுகிறார். இதனால் திருப்பதி கோவிலில் நடத்தப்படுவதைப் போலவே இங்கும் சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Real_Ad8

இந்த பாலக்காடு அருகேயுள்ள கோட்டாயி கிராமம், புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் வாழ்ந்த அழகிய கிராமம் ஆகும். இது, பாலக்காடு- புதூர் பாதையில் உள்ளது.

பாலக்காட்டில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் சிறுவாணி அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்துதான் கோவை மக்களுக்கு சிறுவாணி நீர் வழங்கப்படுகிறது. கேரள- தமிழக எல்லையில் அமைந்துள்ள சிறுவாணி அணைக்கட்டுப் பகுதி, பார்க்கவேண்டிய இடம்.
பாலக்காட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மலம்புழா அணையும், அணையையொட்டி உள்ள தோட்டமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. பரந்து விரிந்து கிடக்கும் புல்வெளிகள், மனதைக் கொள்ளை கொள்ளும் மலர்பூங்காக்கள், செயற்கை நீரூற்றுக்கள் என இயற்கை காட்டும் ஜாலங்கள், மலம்புழா தோட்டத்தில் நம்மை மலைக்க வைக்கின்றன.

பலவகை ரோஜாக்கள் நிறைந்த ரோஜாப்பூங்கா ஒன்றும் இங்கு உள்ளது. மலம்புழா தோட்டத்தில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் ஜொலிப்பது கொள்ளை அழகு. சனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் மட்டுமே விளக்குகளின் வர்ண ஜாலத்தை கண்டு ரசிக்க முடியும். மற்ற நாட்களில் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்து குறிப்பிட்ட கட்டணம் செலுத்தும் பட்சத்தில் தோட்டத்தின் விளக்குகள் ஒளியூட்டப்படுகின்றன.

இவை தவிர ஒற்றப்பாலம், கல்பாத்தி சிவன் கோவில், கொல்லங்கோடு, திப்பு கோட்டை, மீன்கரா அணைக்கட்டு என பாலக்காடு பகுதியில் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன. உணவு வசதியைப் பொறுத்தவரை பாலக்காட்டில் அனைத்து வகை உணவுகளும் கிடைக்கின்றன. தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. பாலக்காட்டுக்கு நல்ல சாலை வசதியும் உள்ளது.

ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை, தென்னக ரயில்வேயில் பாலக்காடு தனி டிவிஷனாக இருந்து வருவதால் பிற பகுதிகளில் இருந்து பாலக்காட்டுக்கு ரயில்வசதி தாராளமாகவே உள்ளது பாலக்காட்டுக்கு அருகில் சுமார் 100 கி.மீ. தொலைவில் கேரளாவின் கொச்சின் விமான நிலையம் உள்ளது. அதைவிட தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமானநிலையம் பாலக்காட்டில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவுதான். சுமார் ஒரு மணிநேர கார் பயணத்தின் மூலம் பாலக்காட்டை தொட்டு விடலாம்.”பாலக்காடு..! பரவசப்படுத்தும் அழகான சுற்றுலாத் தலம்” நாமும் ஒரு நாள் சென்று வருவோமே…!!!—–.


Real_Ads6

Real_Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Right2
Real_Ad9
Real_Ad1
Real_Right3
Website Square Vanavil2