இந்த ‘‘இருளர்களைக்'' கவனிக்கக்கூடாதா?

 Wednesday, September 11, 2019  03:30 PM

ஆதி தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய அய்வகை நிலங்களில் தங்கள் வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பது உலகறிந்த வரலாறு. இந்த அய்வகை நிலங்களில் முல்லை நிலமான காடும், காடு சார்ந்த பகுதிகளில், வாழ்ந்த ஆதி தமிழ் குடும்பங்கள் தான் இந்த இருளர் இனம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு இயற்கை மாற்றங்களாலும், வாழ்தல் வேண்டியும் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள காடுகளில் பரவலாக வாழ்ந்து வந்தவர்கள், பின்பு காட்டை விட்டு மருத நில மக்கள் வாழும் நிலப் பகுதியில் வந்து வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தஞ்சை, செஞ்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட் டங்களிலும், இன்னும் பிற பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பட்டியல் வகுப்பினர் என அரசால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் தற்கால வாழ்வியல் சூழல் கேள்விக் கிடமாகவும், பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டும் நிற்கிறது. காடு, ஜாதி சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.

இவர்கள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மொழிகளையே அதிகம் பேசுகின்றனர். இவர்களின் மொழி வழக்கு இருளர் மொழி வழக்கு என்றும் கூறப்படுகிறது. இம்மக்களில் எவரும் தங்கள் முன்னோர்களைப் பற்றியும், தங்களின் கலாச்சாரம், பண்பாடுபற்றியும் எழுதி வைத்ததில்லை. காரணம், இவர்கள் பேசும் இருளர் மொழிக்கு எழுத்து வடிவமே இல்லை. உலகில் பழங்குடியினர் பேசும் மொழிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை. அதில் இருளர் பேசும் மொழியும் ஒன்று.

இருளர்கள் பாம்பு பிடித்தல், எலி, முயல், ஆமை, உடும்பு போன்ற விலங்கினங்களைப் பிடித்து வாழ்கின்றனர். இவற்றில் நண்டு, எலி, மீன் போன்றவைகளை அன்றாட உணவுக்குப் பயன்படுத்துவார்கள். இருளர் மொழியில் இசை ஆடல், பாடல்களில் நாகரிக மனிதர்களைக் காட்டிலும் பாலின சமத்துவம் அதிகம் உள்ளது.

மக்கள் தொகை - தமிழகம் உள்ளிட்ட தென் னிந்தியாவில் 2,30,000 பேர் வசிக்கின்றனர். இவர் களில் 11 ஆயிரம் பேர் மட்டுமே கல்வித் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 30 பேருக்குமேல் கல்லூரி படிப்பு வரை பயின்றுள்ளனர்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் உள்ள மக்களின் இன்றைய நிலை என்ன?

Arunhit

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன் றியம், வீரராகவபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூரான புளியங்குண்டாவில் 38 குடும்பங்கள், மாங்காடு ஊராட்சி புதிய வெங்கட்டாபுரத்தில் 32 குடும்பங்கள், நெமிலி ஊராட்சி காஞ்சனா நகரில் 45 குடும்பங்கள், தாழவேடு ஊராட்சியில் 76 குடும்பங்கள், காஞ்சிப்பாடி ஊராட்சியில் 111 குடும்பங்களும் உள்ளனர்.

சரி, என்ன விசேடம்? சாலைகள் கிடையாது,

பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடையாது, குடிமனை பட்டா இல்லை, ஜாதி சான்றிதழ் என்றால் என்ன வென்றே தெரியாது. இதைவிடவெல்லாம் மிகமிக முக்கிய தகவல் ஒன்றுண்டு. அதுதான் இப்பகுதிகளில் மின்சாரமே கிடையாது - மின்சாரமே கிடையாது என்பதுதான். இந்த 2017 ஆம் ஆண்டிலும் இப்படியா என்று கேட்கத் தோன்றலாம் - தோன்றி என்ன பயன்? இந்த அடிப்படை வசதிகள் ஏதும் கிட்டாத ஏது மற்றதுகளாக அப்பகுதிகளில் மக்கள் வாழ்ந்து தொலைக்கின்றனர். இந்த உதாசீனத்திற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? அங்கு வாழும் மக்கள் எல்லாம் இருளர்கள் - மலைவாழ் மக்கள் என்ற பட்டியலில் வரக்கூடியவர்கள். போராட்டம் எல்லாம் நடத்திப் பார்த்து ஓய்ந்துவிட்டார்கள். மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்திப் போராட்டமும் நடத்தியுள்ளனர். பலன் மட்டும் சுன்னம்தான்.

இந்த 2017-லும் இப்படி ஒரு நவீன தீண் டாமையா? இன்று 67 ஆம் ஆண்டு குடியரசு நாள் - உலகம் முழுவதும் உள்ள இந்தியத் தூதர்கள் அலுவலகங்களில் எல்லாம் தேசியக் கொடி ஓகோ என்று ஏற்றப்படும். சிறுவர்களுக்கு மிட்டாய் வழங்கப் படும். ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே என்று மாணவ, மாணவிகள் நடனமாடுவார்கள். ஆனால், இந்தப் பாழாய்ப் போன இருளர்கள் மட்டும் இருளில்தான் கிடக்கவேண்டுமோ?

இருளர்கள் என்பது காரணப் பெயராகிவிட்டதே!

பெரியார், அண்ணா பெயரை ஆட்சியாளர்கள் உச்சரித்துப் பயனில்லை; பரிதாபத்துக்குரிய இந்தப் பஞ்சமர்கள்மீது கவனம் செலுத்துங்கள் துரித கதியில் கைகொடுத்து மேலே உயர்த்துங்கள். முதலில் மின்சாரத்துக்கு வழி செய்யுங்கள். இல்லையெனில், கழகமே களத்தில் இறங்கும்.


Real_Ads6

Real_Ad8


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


AdSolar1
Real_Ad9
Website Square Vanavil2
Real_Right3
arunhitech_sqr1
Real_Right2