கோவைவியில் நம்ம சுற்றியிருந்த மயில்களின் இன்றைய நிலைமை..

 Wednesday, September 11, 2019  12:30 PM

கோவையை சேர்நத் குறும்பட இயக்குனர் சதாசிவம் அவர்களின் பார்வையில் கோவைவியில் நம்ம சுற்றியிருந்த மயில்களின் இன்றைய நிலைமை..

நம்மைச் சுற்றியிருந்த கருஞ்சிட்டு, பொரிச்சிட்டு, தேன்சிட்டு போன்ற எத்தனையோ சிறிய பறவைகள் அழிந்துவிட்டன. கோவையில் உள்ள 72 வார்டுகளில் 52 வார்டுகளில் சிட்டுக்குருவிகள் இல்லை. பறவைகளின் அழிவுக்கு மயில் ஒரு குறியீடு. மயில் நமது பண்பாட்டுடன் நெருக்கமான உறவு கொண்ட ஒரு பறவை . காவடியாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்கள், மயிலாடுதுறை, மயிலாப்பூர் போன்ற ஊர்ப் பெயர்கள், மயில்சாமி, மயிலாத்தாள், அன்னமயில் போன்ற நபர்களின் பெயர்கள் இதற்கு சில உதாரணங்கள். நம் வாழ்வுடன் கலந்திருந்த இப்பறவைகள் இன்று எதிரியாகப் பார்க்கப்படுகின்றன.

பயிர்களை சேதம் செய்வதாகக் கூறி, விவசாயிகள் மயில்களை விஷம் வைத்து கொல்கிறார்கள். மயில்கள் முட்புதர்களில் முட்டையிட்டு 28 நாட்கள் அடைகாக்கும். அதன் பிறகு குஞ்சுகளை 9 நாட்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும். இந்த கவனிப்பு இருந்தால்தான் மயில்குஞ்சு பிழைக்கும். முட்புதர்களை உறைவிடமாகக் கொண்ட மயில்கள் இன்று வாழ இடம் தேடி அலைகின்றன. மயில்களுக்கு உகந்த காடுகள் உறைவிடம் அழிக்கப்பட்டுவிட்டது. இயற்கையாகக் கிடைத்து வந்த உணவு அழிந்ததால், உயிர்பிழைக்க அவை வயல்களை நாடுகின்றன. இது மட்டுமின்றி விவசாயிகள் அடிக்கும் பூச்சிக்கொல்லி கலந்த தானியங்களாலும் பாதிக்கப்படுகின்றன.

பல்வேறு முனைகளில் இருந்து நெருக்கடிகளைச் சந்திக்கும் விவசாயிகள், உணவு தேடி வரும் மயில்களை கொன்றுவிடுகிறார்கள். மயிற்பீலியை தீயில் கருக்கி தேனில் குழைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி குணமாகும் . புரதம் மிக்க மயிலை வாட்டி எடுக்கப்படும் எண்ணெயால் மூட்டு வலி குணமாகும் என்றெல்லாம் மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இதற்காக நரிக்குறவர்கள் மயிலைச் சுட்டுப் பிடிக்கின்றனர். ஆனால் மயிலுக்கு எந்த மருத்துவ குணமும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாகத்தான் மயில்கள் அதிகம் அழிக்கப்படுகின்றன. மயில்கள் சரணாலயமான விராலிமலையில் 8000 மயில்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள். இன்று எண்ணிவிடக் கூடிய அளவு அவை சுருங்கிவிட்டன.கோவை கன்யா குருகுலப் பகுதியில் உருவான தொழிற்பூங்கா காரணமாக முட்புதர்கள் அழிக்கப்பட்டன. இதனால் 250 மயில்கள் அழிந்துவிட்டன. மயில்கள் பாதிக்கப்பட்டால் , அது உணவாகக் கொள்ளும் பாம்பு, பூரான், தேள் போன்றவை அதிகரிக்கும். இதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. பாம்புகள் அதிகரித்தால், அவற்றைக் கொல்வோம். அதைக் கொன்றால் எலியும், தவளையும் பெருகும். பல நோய்கள் அதிகரிக்கும். பறவைகளின் முக்கியத்துவத்தை சூழலியல் ஆராய்ச்சிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன .

தாவரங்கள் இனப்பெருக்கத்துக்குத் தேவையான மகரந்தச் சேர்க்கை, விதை பரப்புதலில் பல்வேறு பறவைகள் மறைமுகமாக நமக்கு உதவி புரிந்து வருகின்றன. பறவைகள் அழிந்தால் தாவரங்கள் அழிந்துவிடும். இந்த படத்தை வெளியிட்ட பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம், மயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம் என்றார்.

'யானை-மனிதர்கள்' மோதல் பெருகிவிட்டது. சமீபத்தில் மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. உணவு, உறைவிடம் இன்றி அவை ஊருக்குள் வருவதும், கிணறுகளில் விழுந்து இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. யானைகளின் அழிவு , காடுகள் பெருமளவு அழிவதன் எச்சரிக்கை மணி. யானைகள்-விவசாயிகள் மோதல் அதிகரிப்பது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அழிவை சொல்கிறது. யானைகளின் வீட்டை அபகரித்துக் கொண்டு, அவை வெளியே வராமல் மின்வேலியிடுவது இதற்குத் தீர்வல்ல. காடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற வேண்டும். மலைத் தொடர் வரைமுறையன்றி அழிக்கப்படுவதால் ஆறுகள் வறண்டுபோகும். ஆறுகள் வறண்டுவிட்டால் நமது விவசாயம் பொய்க்கும். அடுத்ததாக யானைகள் -மக்கள் மோதலை மையப்படுத்தி விவரணப் படம் எடுக்கும் திட்டம் உள்ளது. இயற்கையை காப்பாற்றுவதால்தான், மனித இனத்தை காப்பற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.'

-- குறும்பட இயக்குனர் சதாசிவம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2