கோவையில் ஒரு பறவை மனிதர் - வடவள்ளி சுப்ரமணியன் சொக்கலிங்கம்

 Monday, September 9, 2019  04:32 PM

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அண்மையில் வெளியான ஒரு காணொளியை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அதாவது கிளிக்கு உணவளிப்பவர் பற்றிய செய்தி தொகுப்பு அது. இப்படி பறவைகளின் 'இயல்பு வாழ்க்கையில்' மனிதர்கள் குறுக்கிடுவது நல்லதா கெட்டதா என்கிற கேள்வியையே உங்கள் முன் வைக்கிறேன்.

இந்த பூமியில் மிச்சமாக இருக்கிற விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ நாம் உணவளிக்கத் தேவையே இல்லை.நமது உணவினை மட்டுமே நாம் தேடிக்கொண்டால் போதும்.மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்.பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அந்தத் தன்மை இன்னும் மிகச் சிறப்பாகவே இருக்கிறது.இரக்க குணத்தின் அடிப்படையில் உணவளிக்க விரும்பினால் உணவினைத் தேடத் தெரியாத/இயலாத மனிதர்களுக்கு உணவினைக் கொடுக்கலாம். உணர்ச்சிகளின் அடிப்படையிலான பார்வையும் செயல்களுமே நம்மை இயக்குவதால் இந்த மனிதரின் செயல்கூட நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நியாயமாகவே தெரிகிறது.

இந்த மனிதருக்கு பிறகு இந்தக் கிளிகள் உணவிற்கு என்ன செய்யும் என்பதைவிட மனிதர்கள் அளிக்கும் உணவில் உள்ள நச்சுகள் கொஞ்சம்கொஞ்சமாக பறவைகளை பாதிக்கவே செய்யும்.அதோடு பெரிய முயற்சிகளின்றி தொடர்ந்து எளிதில் உணவு கிடைக்கிறபோது.தன் முயற்சியில் உணவினைத்தேடிடும் இயல்பினை இப்பறவைகள் இழந்துகொண்டே வரும் என்பதில் சந்தேகமில்லை. அவற்றின் மரபியல்பை மாற்றியிருக்கக் கூடிய கடந்த
பதினைந்து ஆண்டுகாலம் பறவைகளுக்கு இவர் நடத்தியதை தீங்காகவே நான் கருதுகிறேன். பறவைகளின் இயற்கையான இயல்பை மாற்றிய இவர் எப்படி பறவை மனிதராவார்? இவர் அந்த இடத்தில் மட்டும் இல்லாதிருந்தால் அந்தக் கிளிகள் அனைத்தும் தமது இயல்பான வாழிடச் சூழலிலேயே உணவினைத் தேடிக் கொண்டிருக்கும்.

இயற்கை ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு பணியை கொடுத்திருக்கிறது. பறவைகளை எடுத்துக் கொண்டால் சில பறவைகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.பல பறவைகள் எச்சங்கள் மூலம் விதைபரவல் வேலையை முழுநேர வேலையாக செய்கிறது. பறவைகள் வனங்களை உருவாக்கி காப்பவை.இவர் அரிசியையும் பருப்பையும் போட்டு சுமார் ஆறாயிரம் கிளிகளை அந்த வேலையை செய்யவிடாமல் தடுப்பது சூழலியல் பாதகம் என்றுதான் நான் சொல்வேன்.ஒரு இரவில் மட்டும் பழந்தின்னி வவ்வால் உணவிற்காக சுமார் பலநூறு (சுமார் 500 கி்மீ மேலாக)கி்மீ பயணித்து அது உணவுத்தேவையை மட்டும் தீர்த்துக் கொள்வதில்லை விதை பரவல் எனும் அற்புதத்தை செய்கிறது. அது இப்படி அலைகிறதே என அரிசி சோத்தை ஆக்கிப்போட்டால் என்ன நடக்கும் சொல்லுங்க...


Real_Ads6
அதுபோல ஒவ்வொரு உயிரினமும் தத்தமது உணவுத்தேவையை பூர்த்தி செய்ய உணவு கிடைக்குமிடம் தேடி பயணப்பட்டே தீரும்.பாவம் என்று தடுத்தால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும்.சில குறிப்பிட்டவகை பறவைகள் அழிந்தால் அல்லது அதன் வேலையை நிறுத்திக் கொண்டால் சிலவகை மரங்கள் அழியும் நிலைக்கேகூட வந்துவிடும் - இப்படியான இயற்கை வலைப் பின்னலை மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு சிதைக்காமல் இருப்பதே மனிதர்களுக்கு நல்லது....

எமக்குத் தெரிந்து மிக நீண்ட காலமாக பறவைகளுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் கோவை வடவள்ளி சுப்ரமணியன் சொக்கலிங்கம். தமது வாழ்வில் முப்பதாண்டு காலத்திற்கு மேலாக அடிபட்ட கொன்றுண்ணி பறவைகளான கழுகு, வல்லூறு, ஆந்தை போன்றவற்றை எடுத்து வந்து சொந்த வீட்டில் வைத்து, தனது சொந்த சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை பறவைகளின் உணவிற்காகவே செலவழித்தவர். இரவில் உணவுண்ணும் ஆந்தைகளுக்கு இரவில் விழித்து உணவுகளும், பகலில் உணவுண்ணும் பறவைகளுக்கு பகலிலும் உணவு கொடுத்தும் காப்பாற்றி மருத்துவம் பார்த்து, பறவைகளுக்கு முறையான பயிற்சியும் பராமரிப்பும் கொடுத்து முறையான பறக்கும் நிலைக்கு வந்தவுடன் சுதந்திரமாக பறக்க விடும் பணியை சிறப்பாக செய்து வந்த இவரை பறவை மனிதர் எனலாம். இந்தப் பறவைகள் இருக்கும் வரை இவர் வீட்டிற்கு எந்த உறவினர்களும் வரமாட்டார்கள். கொன்றுண்ணி பறவைகளிடம் இயல்பாக வீசும் துர்வாடையே காரணம்.

நீண்ட காலமாக கூட்டிலிருந்து தவறிவிழுந்த நீர்ப்பறவைகளின் குஞ்சுகளை காப்பாற்றி, தனக்கு உண்ண உணவில்லாத நிலை வந்தால்கூட சொந்தக் காசில் மீன்களை வாங்கி உணவூட்டி பறக்கவைத்த கூந்தன்குளம் பால்பாண்டி அண்ணாவை பறவை மனிதர் எனலாம்.

இவர்களிருவரையும் சொல்வதென்பது அந்த சொல்லிற்கும் கூட சிறப்பு.

விளம்பரத்தை விரும்பாத வெளி உலகிற்கே தெரியாமல் தமது வாழ்வை கானுயிர்களுக்கே அர்ப்பணித்துவரும் சுப்பிரமணியன்களும், பால்பாண்டிகளும், அடர்ந்த காட்டிற்குள்ளே இருக்கும் கேத்தன்களும், ஆறுமுகம்ங்களும் பலர் இருக்கிறார்கள் சமயம் வரும்போது ஒவ்வொருவர் பற்றியும் மிக விரிவாக பார்க்கலாம்...

உணர்ச்சிகளின் அடிப்படையில் இந்தப் பிரச்சனையை பார்க்காமல், பறவைகளின் நலனில் அடிப்படையில் இந்தப் பிரச்சனையை பார்ப்போம். தொடர்ந்து நீண்ட காலம் உணவு வழங்கி மனிதர்களால் ஒருபோதும் மற்ற உயிர்களை காப்பாற்றிட முடியாது.


Arunhit

Real_Ad5


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Right3
Real_Ad1
Real_Ad9
AdSolar1
Arunsqr4
Website Square Vanavil2