ரசாயன கலப்பில்லாத இயற்கை பொருட்களை தயாரிக்கும் கோவை ஜோடி!

 Sunday, September 8, 2019  06:30 PM

கடந்த சில வருடங்களில் மிகவும் பரபரப்பாக உச்சரிக்கப்படும் ஒற்றைச்சொல் “ஆர்கானிக்”. அதேப்போல பெரும்பாலானவர்கள் அடுத்தவர்களுக்கு எச்சரிப்பது “லேபிளை முதலில் படிங்க” என்றுதான். ஆனால் இந்த விழிப்புணர்வு ஆரோக்யம், ஊட்டச்சத்து மற்றும் ஃபிட்னெஸ் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.

க்ரீம், ஷாம்பூ, லோஷன் போன்றவற்றை தயாரிக்க உபயோகப்படுத்தியிருக்கும் பொருட்கள் என்னென்னவென்று பார்த்திருக்கிறீர்களா? அந்த பொருட்களின் பெயர்களை கூகுளில் தேடிப் பார்த்தீர்களானால் “இயற்கை” “ஆர்கானிக்”, “ப்யூர்” போன்ற பெயர்களில் நாம் எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்துவிடும்.
மிகப்பெரிய பொய்

“இது முற்றிலும் தற்செயலாக நடந்தது” என்கிறார் 33 வயது ப்ரிதீஷ் ஆஷர்.

'அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம்போல நாங்கள் ஒரு ஷாப்பிங் மால் சென்றிருந்தோம். மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் இயற்கையான ஒரு அழகு சாதனத்தை எடுத்துக்கொண்டு ஒரு விற்பனையாளர் என்னிடம் வந்தார். அதைப் பார்த்தேன். அதை தயாரிக்க பயன்படுத்தியிருந்த உட்பொருள் யதேச்சையாக என் கண்ணில் பட்டது. நான் பெட்ரோலியம் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். என் கண்ணில் பட்ட அந்த பொருளின் பெயரை பார்த்து அதிர்ந்தேன். ஏனென்றால் அதே பொருள் எங்கள் நிறுவனத்தில் பெட்ரோலியம் ப்ராடக்டின் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது'.

லேபிளின் முன்பக்கம் நேச்சுரல், ஆர்கானிக் என்றெல்லாம் அச்சிட்டு, எவ்வளவு புத்திசாலித்தனமாக லேபிளின் பின்னால் ப்ரிஸர்வேடிவ்ஸ், பாராபென்ஸ், மினரல் ஆயில்ஸ், செயற்கை கலர்கள், பெர்ஃப்யூம்ஸ் போன்றவற்றை அச்சிட்டிருக்கிறார்கள்.'

லூப்ரிகண்ட்ஸ் தயாரிப்பு முறை குறித்த ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் ப்ரிதீஷ். இயற்கை என்று பெயரிடப்பட்ட அந்த பொருள் உண்மையில் கெமிக்கல்களினால் செய்யப்பட்டது என்று நொடியில் கண்டுபிடித்துவிட்டார். இது குறித்து தகவல்கள் தெரியாதவர்களால் மூலப்பொருட்களின் பெயரை பார்த்து தெரிந்துகொள்வது கடினம். தன் மனைவியிடம் இதுகுறித்து விவரித்ததும் அவர் ஆச்சர்யப்பட்டார். “நமக்கு கிடைப்பது இதுதான் இல்லையா?” என்றார்.
யோசனை

இந்த அனுபவம்தான் அந்த இளம் ஜோடியை நீண்ட நேரம் விவாதிக்கவைத்தது.“சுத்தமான இயற்கைப் பொருட்களை நாங்கள் தேட ஆரம்பித்தோம். ஆனால் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இதுகுறித்து பேசினோம். எங்களுக்கு சில விஷயங்கள் தெளிவாக புரிந்தது. சரும பராமரிப்பு பொருட்களில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இல்லை. அதனால் ஏற்படும் பாதகங்கள் குறித்தும் பலருக்கு தெரியவில்லை. மேலும் இதற்கு மாற்றாக வேறு முற்றிலும் இயற்கையான பொருட்கள் நுகர்வோருக்கு மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. இதில் காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு இடைவெளியை உணரமுடிந்தது.”

ஒரு நம்பிக்கையான ப்ராண்டை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கான தேவை இருக்கிறது. இதை இருவரும் சேர்ந்து தொடங்க நினைத்தனர். 2014-ல் இயற்கையான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த மூலப்பொருட்களைக்கொண்டு ஒரு சருமபராமரிப்பு ப்ராண்டை இந்த தம்பதி உருவாக்க நினைத்தனர். அதன் விளைவாக கோயமுத்தூரில் உருவானதுதான் 'ஜூஸி கெமிஸ்ட்ரி' (Juicy Chemistry).

இயற்கையான மற்றும் எளிதான ஒரு சரும பராமரிப்பு சாதனத்தை உருவாக்க ப்ரிதீஷின் அறிவும் அனுபவமும் கைகொடுக்க மெல்ல மெல்ல தயாரிப்புகள் தொடங்கின. பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில் லிக்விட் பேராஃபின், ப்ரிஸர்வேடிவ்ஸ், க்ளைகால்ஸ், செயற்கை நிறங்கள், வாசனை பொருட்கள் போன்ற சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல பொருட்கள் பல தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டது கண்டு அவர்கள் அதிர்ந்தார்கள்.

இதில் மாற்றத்தை கொண்டுவர முயன்றனர். முதலில் மினரல் சார்ந்த எண்ணெயை ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பட்டர் மற்றும் கேரியர் எண்ணெயாக மாற்றினர். செயற்கையான வாசனை பொருட்களை ஆர்கானிக் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எண்ணெயாக மாற்றினர். செயற்கை நிறங்களுக்கு பதிலாக இயற்கையான க்ளே, ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கற்கள் பயன்படுத்தினர். ப்ளாஸ்டிக் எக்ஸ்ஃபோலியன்ட்ஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக AHA மிகுந்த சர்க்கரை பயன்படுத்தினர்.

'எங்கள் தயாரிப்பில் தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்த்ததும் அபாயமான ப்ரிஸர்வேடிவ்ஸ், எமல்சிஃபையர்ஸ் மற்றும் பாராபென் பொருட்களை உபயோகிப்பதையும் தவிர்க்க முடிந்தது. எங்கள் தயாரிப்பை பயன்படுத்த உகந்த நாட்கள் குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.” என்கிறார் மேகா.

“இயற்கையான மூலப்பொருட்களைக் காட்டிலும் ஆய்வகம் சிறந்த மூலப்பொருட்களை தயாரிக்கும் என்பது பொய்யான நம்பிக்கை” என்கின்றனர் இந்த ஜோடி. இயற்கையின் மிகச் சிறந்தவற்றை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் எனும் நோக்கத்துடன் சிறந்த மூலப்பொருட்களை பல்வேறு பகுதிகளிலிருந்தும் சேகரித்தனர்.

“சிறந்த மூலப்பொருட்களைக்கொண்டே சிறந்த தயாரிப்பை உருவாக்கமுடியும். ப்ரீமியம் விலையில் மிகச்சிறந்த ஆர்கானிக் பொருட்களை கொள்முதல் செய்ய கடும் முயற்சி எடுக்கிறோம்.” என்கிறார் ப்ரிதீஷ்.

வளர்ந்துவரும் இதுபோன்ற ஸ்டார்ட் அப்களுக்கு பணப்புழக்கத்தை சமாளிப்பது சிக்கலான விஷயம் என்கிறார் மேகா. “நிதியை திரட்டும் திறமையுள்ள பணியாளர்களை கண்டறிவது மிகப்பெரிய சவாலாகும். ஒரு ஸ்டார்ட் அப்பாக தேவையை உருவாக்கியுள்ளோம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மிகச்சிறந்த தயாரிப்பை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது சவாலாகும்.” என்கிறார் ப்ரிதீஷ்.

வளர்ச்சிக்கான பல திட்டங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். அடுத்த நிதியாண்டில் சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் பிரத்யேக ஸ்டோர்ஸை திறக்க திட்டமிட்டுள்ளனர். நிறைய வாடிக்கையாளர்கள் ஆன்லைனின் ஆர்டர் செய்ய விரும்புவதால் அதிலும் கவனம் செலுத்திவருகின்றனர். ஒரு புகழ்பெற்ற ஏஜென்ஸி மூலம் சான்றிதழ் பெறுவதுதான் இவர்களின் உடனடி திட்டம். “புதுமையான சரும பராமரிப்பு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்கு இதுதான் எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை” என்று விடைபெறுவதற்கு முன் தெரிவித்தனர் இந்த இளம் ஜோடி.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2