சரும பிரச்னைகளை போக்கும் கடலை மாவு குளியல்

 Sunday, September 8, 2019  01:48 PM

சருமம் மென்மையாக: ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி வர சருமம் மென்மையாகும்.

குளிக்கும் போது: குளிக்கும் போது கடலை மாவு தேய்த்து குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன், 2 தேக்கரண்டி ரோஸ்வாட்டர், 4 தேக்கரண்டி பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும்.10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது. பொலிவிழந்த சருமும் இளமை பெறும்.

எண்ணெய்ப் பசை நீங்க: சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் கடலை மாவு, தயிர் , எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

சோர்வான முகம்: முகம் எப்போதும் சோர்ந்து வாடியது போன்ற தோற்றத்துடன் இருப்பவர்கள். தோலுடன் இருக்கும் அரை கிலோ கடலை பருப்பு, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அரைத்தப் பொடியைப் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பூசி ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் காணப்படும். வாரம் ஒரு முறை செய்தால் போதும்.

வெயில் கருமையை போக்க: வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 தேக்கரண்டி, கடலை மாவு 1 தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.உருளைக்கிழங்கு: உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும். இது பார்லர் சென்று பேஷியல் செய்த அனுபவத்தை கொடுக்கும்.

குளியல் பவுடர்: முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தி வந்தால் விரைவில் சருமம் மென்மையாகும்.

வறட்சியைப் போக்க: கடலை மாவில், தேன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், வறட்சி நீங்கி, முகம் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

பரு நீங்க: கடலை மாவு, சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

தேவையற்ற முடியா?: சிலருக்கு மீசை போன்று முடி வளரும். அதை தடுப்பதற்கு, கடலை மாவில் மஞ்சள் தூளை சேர்த்து, நீர்விட்டு பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில், முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

மூட்டுகளில் கருமை: முழங்கை மற்றும் கழுத்துகளில் இருக்கும் கருமையைப் போக்க கடலை மாவு பேஷியல் சரியான தீர்வு. கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் போய்விடும்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2