மறக்கமுடியாத எனது கோதவாடி' மனம் திறக்கிறார் - மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்

 Tuesday, August 13, 2019  06:30 PM

சந்திராயனை உருவாக்கிய குழுவின் தலைவர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. தாய்மொழிக் கல்வியால் உலகம் போற்றும் உயரங்களைத் தொட்டவர். தன்னுடைய சொந்த ஊரான கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகில் உள்ள கோதவாடியைப் பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''எத்தனையோ நகரங்களில் வாழ்ந்தாலும் எல்லோர் மனமும் சொந்த மண்ணை நோக்கித்தான் பாய்கிறது. எங்கள் ஊரின் அடையாளம் கோதவாடி ஆறும், குளமும்தான். என் பால்யத்தைப் பசுமை ஆக்கியவை அவை.

கோதவாடி ஆறு, 10 ஊர்களின் தாகம் போக்கியது. நாங்கள் ஆற்றங்கரையில் பிடித்தத் தும்பிகளும் ஆற்றில் பிடித்த மீன்களும் இன்னமும் கண்முன் துள்ளித் திரிகின்றன. பொங்கல் விழாவில் ஆறு இன்னும் பொலிவு பெறும்.

ஆற்றங்கரையில் களிமண்ணில் சிறிய மாட்டு வண்டி பொம்மைகள் செய்து, அதற்குச் சாயம் பூசி விற்பார்கள். பூப்பொங்கல் அன்று இரவு ஊர் முழுவதும் ஆற்றங்கரையில் குடும்பத்துடன் கூடி மகிழும். அன்று சாப்பிட்ட நிலாச் சோறு இன்னமும் இனிக்கிறது. எங்கள் ஊரிலேயே அமைந்திருக்கும் கோதவாடி குளம் விவசாயத்துக்குத் தெம்பூட்டியது. சதுரமான அந்தக் குளத்தைச் சுற்றி நெல் வயல்கள், கரும்புத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள், பனை மரங்கள் என மலை உச்சியில் இருந்து பார்த்தால் அது ஒரு பசுமை ஓவியம்.

Arunhit

எங்கள் ஊருக்குத் தபாலில்தான் செய்தித் தாள்கள் வரும். அதனால், ஓரிரு நாட்கள் கழித்துதான் கைக்குக் கிடைக்கும். அப்போது செய்திகளை எங்களுக்கு முந்தித் தந்தவை ரேடியோதான். ஆனால், அப்போது எல்லாம் ரேடியோவை வைத்துக்கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு ரேடியோ இன்ஸ்பெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்ற ரேடியோவில் கரகரத்த குரலில் ஆகாசவாணி செய்திகள் கேட்டதும், 'ரேடியோ மாமா’ நிகழ்ச்சிக்குக் காத்துக் கிடந்ததும் அழியாத நினைவுகள்!

எங்கள் ஊரின் இன்னோர் அடையாளம் ஆவாரம் பூ. மஞ்சள் நிறத்தில் ஊர் எங்கும் பரவிக்கிடக்கும் அந்த மலரைக்கொண்டு எங்கள் ஊருக்கு பெயர் காரணக் கதை சொல்வார்கள். பெரியவர் ஒருவர் கோதை அம்மனை எங்கள் ஊருக்கு வர வேண்டி விரும்பி அழைத்தாராம். ஆனால், அம்மன் விளையாட்டுக் காட்டி ஆவாரம் பூவைத் தூவிக்கொண்டே போனாளாம். பெரியவர் அவளைக் கண்டுபிடித்து 'கோதை வாடி! கோதை வாடி!’ என்று அழைத்து இந்த ஊரில் தங்க வைத்ததால், எங்கள் ஊர் கோதைவாடி ஆனதாம்.

எங்கள் ஊரின் மறக்க முடியாத மனிதர்கள் அய்யாமுத்துக் கவுண்டர் மற்றும் ஜோசப் வாத்தியார். அய்யாமுத்துக் கவுண்டர் காந்தியவாதி. சர்வோதய இயக்கத்தைப் பெரிய அளவில் எங்கள் பகுதியில் வளர்த்தவர். அன்பைப் போதித்து அதன் வழி வாழ்ந்துகாட்டியவர். அப்போது எல்லாம் பிள்ளைகள் தலையைச் சுற்றி காதைத் தொட்டால்தான் பள்ளியில் சேர்ப்பார்கள். அப்படி பள்ளியில் சேர்ந்த பிள்ளைகளை மெருகேற்றியவர் ஜோசப் வாத்தியார். உடற்பயிற்சிகள் சொல்லித்தருவார். பாடங்களைச் சுவைபட நடத்துவார். அவர் நடத்திய நாடகங்கள் எங்களுக்குள் படைப்பு ஆற்றலைப் புகுத்தின.

பேரறிஞர் அண்ணாவையும் பெருந்தலைவர் காமராஜரையும் எங்கள் ஊரின் ஊடாகச் செல்லும் சாலையில் பலமுறை பார்த்து உள்ளோம். ஒருமுறை அண்ணா வழி மாறி, ஊர் மாறி வந்தபோது அவருக்கு வழிகாட்டி அனுப்பினோம். ஊரின் நினைவுகள் இவ்வளவு உற்சாகம் தந்தாலும் என் நெஞ்சைக் கனக்கவைக்கிறது கோதவாடி குளத்தின் மரணம். நீர் நிறைந்து இருந்த அந்தக் குளம், ஆக்கிரமிப்புகளால் இப்போது மரணித்துவிட்டது. அதை மீண்டும் உயிர்ப்பிக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் பெரிதாகப் பலன் அளிக்கவில்லை. நிலவில் நீர் கண்ட என்னால், என் நிலத்தில் நீர் காண முடியாமல் போனது வேதனையே!'


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
arunhitech_sqr1
AdSolar1
Arunsqr4
Arunhitech_sqr2
Arunhitechsqr5