சிமெண்ட் ஃபாக்டரிகளுக்கு நடுவில் சிக்கி கொண்ட கானுயிர்கள்

 Tuesday, August 13, 2019  03:30 PM

1990களில்தான் கோவை மாவட்ட காடுகளின் எல்லைகளில் பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதற்கான பல்வேறு கட்டுமானப்பணிகள் தொடங்க ஆரம்பித்தன. தவிர அதற்கு முந்தைய சிறு, சிறு கட்டமைப்புகள் கூட தம்மை பிம்ம ராட்சஷனாக வடிவமைக்கத் தொடங்கின. அதில் மிகவும் தொந்தரவுக்கு உள்ளாகின கானுயிர்கள். அதில் காட்டின் மிகப் பெரிய விலங்கினமான யானைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. அதை ஒவ்வொன்றாக பார்க்கும்போது அதிர்ச்சியே மேலிடுகிறது.

கோவை மதுக்கரையில் உள்ள சிமெண்ட் ஃபாக்டரியை எடுத்துக் கொள்வோம். இந்த சிமெண்ட் ஃபாக்டரிக்கான சுண்ணாம்புக்கல் சுரங்கம் மதுக்கரை, சின்னாம்பதி, புதுப்பதி ஊர்களுக்கு இடைப்பட்ட காடுகளில் அமைந்துள்ளது. இது பிரிட்டீஷார் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது என்றாலும் இதன் குவாரிகளில் காலங்காலமாக சின்ன, சின்ன வெடிகளே வைத்து பாறைகள் உடைக்கப்பட்டு வந்தன.

அதுவே 1990களில் தொடங்கி காலையும் மாலையும் மட்டும் பல மடங்கு அதிர்வுள்ள வெடிகள் வெடிக்கப்பட்டன. அதன் மூலம் ஒரே வெடியில் முந்தைய வெடிகளுக்கு 50 மடங்கு, 100 மடங்கு பாறைகள் உடைக்கப்பட்டன. குறிப்பாக இந்த அதிர்வேட்டால் 5 மைல் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களில் அனைத்து வீடுகளும் நடு, நடுங்குவது வாடிக்கையாகவே உள்ளது என்பதை முன்னரே கண்டோம்.

இதில் கூடுதலான விஷயம். இந்த சிமெண்ட் ஃபாக்டரிக்கான பாறைகள் தோண்டப்படும் குவாரிகளுக்கு இடையே ரயில்வே தண்டவாளங்கள் குறுக்கிடுவதால் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலை தொடங்கி அய்யாசாமி மலை, சின்னாம்பதி புதுப்பதி காடுகள் வரை (கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவு, 4 கிலோமீட்டர் அகலம்) வெடி வைத்து எடுக்கப்படுவதால் இங்கு காலங்காலமாக வசித்து வந்த யானைகள் யாவும் சுமார் 40 சதுர கிலோமீட்டர் ஏரியாவை சுற்றியே வர வேண்டியுள்ளது. அதை மீறி யானைகள் இடறி படுபாதாளமாக இருக்கும் கல்குவாரிகளுக்குள் விழுந்தால் வனத்துறையினருக்கு கூட இங்கு பணிபுரிபவர்கள் சொன்னால்தான் தெரியும்.இந்த சூழ்நிலையில் கேரளா வாளையாறு எல்லையில் 1980 காலகட்டத்தில் ஒரு சிமெண்ட் ஃபாக்டரி உருவாகி அதுவும் புகை கக்கியபடி அந்த ஏரியாவின் சூழலை கெடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஃபாக்டரிக்கு அங்கிருந்து காடுகளுக்குள் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் குவாரிகள் உள்ளன. அதன் சுற்று வட்டாரமும் யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் வாசம் செய்யும் அடர் வனப்பகுதிதான். அங்கேயும் பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாறைகள் வெட்டியெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் வாளையாறு காடுகளின் வலசைகளும் பாதிக்கப்பட்டு அங்கேயும் யானைகள் ஊருக்குள் புகுவது, மனிதர்களை அடித்துக் கொல்வது வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு சிமெண்ட் ஃபாக்டரிகளுக்கு இடைப்பட்ட பகுதியில்தான் வாளையாறு(கேரளா), மதுக்கரை (தமிழ்நாடு) காடுகள் அமைந்துள்ளன. இதன் நடுவேதான் மீட்டர் கேஜ் ரயில்பாதை, அகல ரயில்பாதைகள் போடப்பட்டுள்ளன. அதில் வரும் ரயில்களில்தான் யானைகள் அடிக்கடி அடிபட்டு மரணிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த வாளையாறு, மதுக்கரைக்கு இடையில் வருகிறது எட்டிமடை, மாவூத்தம்பதி ஆகிய பஞ்சாயத்துகளுக்குட்பட்ட கிராமங்கள். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பெரிய பரப்பளவை (ஆயிரக்கணக்கான ஏக்கர்) பெரிய கல்வி நிறுவனம் வியாபித்துள்ளது. 1990களில் சிறிய அளவில் இருந்த இதன் கட்டுமானப் பணிகள், தற்போது அடிமுடி தெரியாத அளவு வளர்ந்து நிற்கிறது. கேரள மாநிலம் கொச்சினுக்கு சேர, சோழர் காலத்தில் பிரதான போக்குவரத்துப் பாதையாக திகழ்ந்த புரதான புகழ்மிக்க ராஜகேசரிப்பெருவழி மலைப்பாதை இந்த கல்வி நிறுவனத்தை ஒட்டியே அமைந்துள்ளது.

இந்த சாலை இப்போது காடடர்ந்து, வனவிலங்குகள் நடமாட்டத்துடன் பயன்படுத்தாமல் இருந்தாலும், இங்குள்ள பழங்கால கல்வெட்டுகள், சிதிலமடைந்து கிடக்கும் சத்திரங்கள், குதிரை லாயங்கள் போன்றவற்றின் எச்ச, மிச்சங்களை ஆராய்ந்தறியும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பாதையை சீரமைத்து பாதுகாக்க வேண்டும். இதன் வரலாற்று பெருமைகளை உலகறிய செய்ய வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1
Website Square Vanavil2