கடந்த 1 வாரமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பவானி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக கோவை பில்லூர் அணையின் உயரமான 100 அடி மூன்றாவது முறையாக நிரம்பியது.. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியதால் பில்லூர் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இரவு 7மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்தொடங்கியது. அணையின் நீர்மட்ட உயரம் 95 அடி அணையின் 4 மதகுகளில் இருந்து இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பில்லூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 95 அடியாக இருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி 2 ஆயிரம் கன அடி தண்ணீர் 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பவானி ஆற்றில் வெள்ளம் செல்வதால் பில்லூர் அணை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில் மின்வாரிய அலுவலர்கள் அணைக்கு நீர்வரத்து, அணையின் நீர்மட்டம், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறித்து 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.