கோவையில் நடமாடும் பியூட்டி பார்லர்..

 Tuesday, August 6, 2019  05:30 PM

போன் வந்த அரை மணி நேரத்துக்குள் ஸ்பாட்டுக்குப் போயிடறதுதான் எங்க ஸ்பெஷல். இப்போ சொல்றதுக்கு ஈஸியா இருக்கு. ஆனால், ஆரம்பத்தில் மக்களுக்குப் புரியவைக்க நிறைய கஷ்டப்பட்டேன். மனம் தளராமல், கோயம்புத்தூரின் முக்கிய இடங்களுக்குச் சென்று விளம்பரப்படுத்தினேன். என் இந்த ஐடியா சக்சஸ் ஆச்சு.
நடமாடும் பார்லர்... மாதம் லட்சத்தில் வருமானம் அள்ளும் ஶ்ரீதேவி!

அட... எல்லாத்தையும்விட இது வித்தியாசமா இருக்கே என மற்றவர்களை வியக்கவைத்துவிட்டால் நாம்தான் வின்னர்'' என ஆர்வத்துடன் பேசுகிறார், `க்யூ த்ரீ' என்ற நடமாடும் பியூட்டி பார்லர் உரிமையாளரான, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஶ்ரீதேவி.

``நிறைய கட்டுப்பாடுகள்கொண்ட நடுத்தர குடும்பம் எங்களுடையது. சிறுவயதில் என் ஆசைகளையும் கனவுகளையும் வீட்டில் சொல்லவே பயமாக இருக்கும். இந்தப் பயம் இருந்தால் ஜெயிக்க முடியாதுன்னு லேட்டா புரிஞ்சுகிட்டு முழிச்சுக்கிட்டேன். சின்ன வயசிலிருந்தே அழகு என்ற விஷயத்தின் மேலே எனக்கு ஆர்வம் இருந்துச்சு. என் வயதுள்ள தோழிகளுக்கு பவுடர் போடுவது, லிப்ஸ்டிக் போடுவது என ஏதாவது செய்துட்டே இருப்பேன். குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம், புதுவிதமான ஹேர்ஸ்டைல் செய்துவிட ஆரம்பிச்சேன். அப்படி அன்னைக்கு யாருமே கையில் சிக்காட்டி, என் பொம்மைகள்தான் கஸ்டமர்ஸ். எல்லாப் பெண் குழந்தைகளுக்குமே தன் பொம்மைக்கு மேக்கப் செய்த அனுபவம் இருக்கும். அப்படி எனக்குக் கிடைத்த அனுபவம்தான் என்னை ஒரு ஸ்டைலிஸ்ட் ஆக்கிருக்கு.காலேஜில் எனக்கு நிறைய நார்த் இண்டியன் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. அவங்க மெஹந்தி போடுவதில் வல்லுநராக இருந்தாங்க. படிச்சுட்டிருக்கும்போதே மெஹந்தி போடறதை பார்ட் டைம் பிசினஸாகப் பண்ணிட்டிருந்தாங்க. அவங்க மூலமா மெஹந்தி கலையைக் கற்றேன். அவங்க போகும் மெஹந்தி ஈவன்டுகளுக்கு நானும் டிசைனரா போவேன். அதில் கிடைக்கும் தொகை, என் பாக்கெட் மணிக்கு யூஸ்ஃபுல்லா இருந்துச்சு. ஐ-ப்ரோ டிரிம் பண்றதுக்கும் ஃப்ரெண்ட்ஸ்களிடம் கத்துக்கிட்டேன். உறங்கிக்கிடந்த என் அழகுக்கலை கனவு மறுபடியும் துளிர்விட்டுச்சு. பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்கிறென்னு சொன்னால், வீட்டில் யாரிடமும் சொல்லாமல், கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டில் பியூட்டிஷியன் கோர்ஸ் சேர்ந்தேன். ஆனால், அதுவும் ஒரு மாசத்திலே வீட்டுக்குத் தெரிஞ்சுபோய், கோர்ஸை பாதியிலேயே விட்டுட்டேன். திருமணம், குழந்தை என செட்டில் ஆகிட்டேன். அங்கே ஒரு ஐடி கம்பெனியில் வொர்க். ஒவ்வொரு மாசமும் சம்பளம் வாங்கும்போது, பார்லர் தொடங்க வேண்டும் என்ற கனவு வந்துபோகும். கணவரிடம் என் ஆசையைச் சொல்லி, ஓ.கே வாங்கினேன். ஐ.டி வேலையை விட்டுட்டு கோயம்புத்தூர் வந்து பியூட்டிஷியன்,ஸ்டைலிஸ்ட்க்கான கோர்ஸ்களில் சேர்ந்தேன்'' எனப் பரவசத்துடன் தொடர்கிறார்.

ஶ்ரீ தேவி``அப்பவும் என் குடும்பத்தில் எதிர்ப்பு. எல்லாவற்றையும் தாண்டி என் கனவுக்கு உயிர் கொடுக்க களத்தில் குதிச்சேன். பியூட்டிஷியன் கோர்ஸ் முடிச்சதும், ஏதாவது நிகழ்வுகளில் மேக்கப் பண்ணிவிட்டால் போதும். பார்லர் வைக்கிற வேலையெல்லாம் வேணாம்னு வீட்டுல சொன்னாங்க. ஆனாலும், என்கிட்ட இருந்த சேமிப்புதொகையில் 2010-ம் வருஷம், `திவா சலூன்; என கோயம்புத்தூரில் ஆரம்பிச்சேன். நிறைய புது டெக்னாலஜி, ஃபேஷன் அப்டேட் மூலம் கஸ்டமர்ஸ் தேடிவர ஆரம்பிச்சாங்க. மூன்று வருஷத்துக்குப் பிறகு, வீடுகளுக்கே போய் அலங்காரம் செய்யலாமானு தோணுச்சு. ஆனால், தொழிலில் நம்ம பாதுகாப்பும் முக்கியம். கஸ்டமர்களும் நம்மை வீட்டுக்குள் அனுமதிக்கணும். நாற்காலியில் ஆரம்பிச்சு எல்லாத்தையும் தூக்கிட்டுப் போகணும். என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ, வெளிநாடுகளில் நடமாடும் பார்லர்கள் இருக்கிறது பற்றி தெரிஞ்சது. `அது வெளிநாடுகளுக்கு ஓ.கே. கோயம்புத்தூரில் செட் ஆகுமானு யோசி'னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. சரி, இறங்கி பார்த்துடுவோம்னு ஒரு செகன்ட் ஹேண்ட் வேனை விலைக்கு வாங்கினேன்.

ஹைடெக் மியூசிக் சிஸ்டம், திரும்பிய பக்கமெல்லாம் கண்ணாடி, ரோலிங் சேர், ஏசி என ஒரு பார்லரில் இருக்கும் அத்தனை வசதிகளையும் அந்த வேனில் உருவாக்கினேன். கோயம்புத்தூரின் பல பகுதிகளில் தொலைபேசி எண்ணுடன் விளம்பரம் கொடுத்தேன். போன் வந்த அரை மணி நேரத்துக்குள் ஸ்பாட்டுக்குப் போயிடறதுதான் எங்க ஸ்பெஷல். இப்போ சொல்றதுக்கு ஈஸியா இருக்கு. ஆனால், ஆரம்பத்தில் மக்களுக்குப் புரியவைக்க நிறைய கஷ்டப்பட்டேன். மனம் தளராமல், கோயம்புத்தூரின் முக்கிய இடங்களுக்குச் சென்று விளம்பரப்படுத்தினேன். என் இந்த ஐடியா சக்சஸ் ஆச்சு. கல்லூரி, வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் நேரத்தை மிச்சப்படுத்த இது யூஸ்ஃபுல்லா இருக்கிறதா சொன்னாங்க. இப்போ, திருமணம், ரிசப்ஷன் ஆர்டர்களும் கிடைக்குது. தன்னம்பிக்கையுடன் தொடங்கிய பிசினஸ்தான் எனக்கு மாசம் ஒரு லட்சம் வரை வருமானம் ஈட்டித் தருகிறது. ஒரு விஷயத்தைப் பிடிச்சு ஈடுபாட்டுடன் செய்தால், எப்போதுமே வெற்றிதான்'' எனப் புன்னகைக்கிறார் ஶ்ரீதேவி.

--


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Noyyal_media_Right1
Noyyalmedia_right2