பறை இசையை எட்டுத்திக்கும் கொண்டுசெல்லும் - கோவை நிமிர்வு கலையகம்

 Monday, August 5, 2019  06:30 PM

தமிழரின் பாரம்பரிய இசை பறை இசை. இந்த பறை இசையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் விதமாக பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பயிற்சி வகுப்புகள் மூலம் கற்றுக்கொடுத்து வருகின்றனர் கோவையைச் சேர்ந்த நிமிர்வு கலையகம் குழுவினர்.

பறை… கலை… இயற்கை… மக்களுக்கே எனத் தொடங்குகிறது பறை இசை நிகழ்ச்சி. இசை சங்கமிக்கும்போது அரங்கமே அதிரும்படியாக ஒலிக்கிறது பறை. ஆதித் தமிழரின் பாரம்பரிய இசைக் கருவிகளில் ஒன்றான பறை, தற்போது அழிந்துவரும் கலைகளில் ஒன்று. அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் களம் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுவருகின்றனர்.

இவர்கள் வாசிக்கும் பறை வழக்கமான சமயச் சடங்குகளுக்கானது அல்ல. இந்தக் கலையை முற்றிலுமாகப் புதுப்பிக்கும் திட்டமே இவர்களுடைய வாசிப்பில் எதிரொலிக்கிறது. வே.சக்தி. மற்றும் ஹரிதாஸ், பிரபாகரன், துரை மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து இக்குழுவை உருவாக்கியுள்ளனர்.

உடைக்க வேண்டிய எண்ணம்

இசை ஆர்வமுள்ள மாணவர்களைக் கொண்டு 2011-ல் இவர்கள் ‘நிமிர்வு’ கலையகத்தைத் தொடங்கிப் பறை இசையைப் பரப்பிவருகிறார்கள். கல்லூரிகளில் தொடங்கி, கார்ப்பரேட் நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள்வரை இசைத்துவருகிறார்கள். மக்களிடமும் நல்ல வரவேற்புப் பெறத் தொடங்கியுள்ளனர்.

வரவேற்பு மட்டுமல்ல, பிரச்சினைகளும் வரத்தான் செய்கின்றன. “நான் பறை இசை வாசிப்பதை எனது நெருங்கிய உறவினர்கள் பலரும் விரும்பவில்லை. காரணம் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் அடையாளமாகப் பார்க்கப்படுவதுதான்” என்று சொல்லும் சக்தி, அந்த எண்ணத்தை உடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இசையை அதிக ஆர்வத்துடன் கற்றுக் கொண்டேன் என்கிறார். மதுரை அலங்காநல்லூரில் உள்ள வேலு ஆசானிடம் முறையாகப் பறை அடிக்கக் கற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறார்.

பழனி முதலான பிரபலமான கோயில் விழாக்களின்போது நடைபெறும் பாரம்பரிய பறை இசைக் குழுக்களின் வாசிப்பை ரசித்த இந்தக் குழுவினர், அதிலிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இசையார்வம் உள்ள நண்பர்கள் இவர்களுடன் இணைய, தற்போது பெண்களை உள்ளடக்கிய 50 பெருகும் ஏற்பட்ட குழுவாக ‘நிமிர்வு’ கலையகம் உருவெடுத்துள்ளது.

இங்குள்ள பெண் கலைஞர்களில் ஒருவரான எஸ். சங்கவி நான்காம் வகுப்பு பயிலும்போதே தந்தை இறந்துவிட, தாயாரின் அரவணைப்பிலும், சித்தப்பாவின் ஊக்கத்தாலும் பறை இசை கற்கத் தொடங்கினேன் என்கிறார். ”நிமிர்வு கலையகத்தில் இரண்டே நாள் பயிற்சியில் இந்தக் குழுவுக்கு ஏற்ப இசைக்க கற்றுக்கொண்டேன். கலை என்று வந்து விட்டால் ஆண், பெண் வேறுபாடு கிடையாது. திறமைதான் முக்கியம். பறை இசை தமிழரின் பாரம்பரிய இசை என்ற விழிப்புணர்வு வர வேண்டும். இக்கலையை கற்றுக்கொள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அவர்களை கேலி, கிண்டல் செய்யாமல் கைதட்டி பாராட்டினாலே போதும்” என உத்வேகத்தோடுப் பேசுகிறார் சங்கவி.இசைக் கலவை

பறை இசையை முழுமையாகக் கற்ற பின்னர் இந்தக் குழு களத்தில் இறங்கியுள்ளது. “மரபுகளை உடைக்கும் நோக்கில் பறை இசையில் கர்நாடக இசை, மேற்கத்திய இசையையும் புகுத்தியுள்ளோம். மேலும் கேரளத்தின் செண்டை, சிங்காரி மேளம், மிருதங்கம், தவில் எனப் பல இசை முறைகளையும் பறையில் வாசித்துவருகிறோம். அது மட்டுமல்லாமல் எங்கள் குழுவில் முறைப்படி பரதம் கற்ற ஐந்து மாணவிகளைக் கொண்டு பறை இசையில் பரதத்தையும் இணைத்துவருகிறோம். இந்த அணியில் ஆர்வமுள்ள சில பள்ளி மாணவ, மாணவிகளும் உள்ளனர்” என்கிறார் சக்தி.

பறை இசையை வாசிக்கும் விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கருப்பு டி- ஷர்ட், நீல நிற ஜீன்ஸ், ஷூ அணிந்த கால்கள் இவைதான் இந்தக் குழுவின் சீருடை. மது, புகை பழக்கம் உள்ளவர்களுக்குக் குழுவில் அனுமதி இல்லை. தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கு நடத்தும் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் தொகையில் பெரும்பகுதியை நண்பர்களின் கல்விக்கும், பறை இசையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் செலவிடுகிறார்கள்.

யார் வேண்டுமானாலும் கற்கலாம்

பறை இசையின் மீதான களங்கங்களைப் போக்கி அதை உலகப் பொது இசைக் கருவியாக முன்னிறுத்துவது, அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வது என்னும் திட்டங்களுடன் செயல்பட்டுவரும் இந்தக் குழுவினர் பறை இசையைக் கற்றுக்கொடுப்பதற்கான பாடத்திட்டத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். பறை இசைக்குத் தனியாக இசைக் குறிப்புகள் (Notes) வரையறுக்கப்படவில்லை.

இந்தக் குழுவினர் அதனை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இதுவரை 100 குறிப்புகளை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடத்திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் பறையைக் கற்க முடியும் என்னும் அளவுக்கு அந்தப் பாடத்திட்டம் உள்ளது என்று கூறும் சக்தி, இணைய தளம் வாயிலாகப் பாடம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

கோவை மட்டுமில்லாமல் மற்ற மாவட்டத்திலிருந்தும் வெளிநாடுகளிருந்தும் பறை இசையை கற்றுக்கொள்ள அழைப்புகள் வர, அதனை இணையம் வாயிலாகவும் நேரடியாகவும் சென்றும் கற்று கொடுத்து வருகிறார் சக்தி.

சமநீதிச் சமூகம் அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று இந்தக் குழுவினர் குறிப்பிடுகிறார்கள். பறை இசையைப் பரவலாக்க தமிழக இசைக் கல்லூரிகளில் பறை இசையை சேர்க்க வேண்டும். பறை இசைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றெல்லாம் பல கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்கிறார்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் 95784 43795


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Website Square Vanavil2
Noyyalmedia_right2