பூலோக சொர்க்கம் ஆனைமலை வனம்

 Wednesday, July 31, 2019  02:55 PM  1 Comments

இயற்கை ஆர்வலர்கள், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள், உயிரின ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது, கொங்கு மண்டலத்தில் உள்ள ஆனைமலை. உலகின் மிகச் சிறந்த வன உயிரினப் பகுதியான இது, தென்னை நகரான பொள்ளாச்சிக்கு அருகில் அமைந்துள்ளது. மொத்தம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீண்டு, பரவிப் படர்ந்துள்ளது ஆனைமலை வனம்.

இந்திரா காந்தி வன உயிரின உய்விடம்

மிக அதிக எண்ணிக்கையிலான பல்வேறு வகை உயிரினங்கள், பறவைகளின் புகலிடமாகத் திகழ்கிறது, பொள்ளாச்சி இந்திராகாந்தி வன உயிரின உய்விடம். 1976-ல் கரியன்சோலை, மஞ்சம்பட்டி, புல்மலைகள் அடங்கிய பகுதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது 1989-ல். இதில், பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலைப்பேட்டை, அமராவதி என 6 சரகங்கள்.

இப் பகுதியில் உள்ளது போன்ற நில அமைப்பு வேறெங்கும் கிடையாதென்பது இங்கு மலையேற்றத்துக்கு வந்துள்ள பல வெளிநாட்டவரின் வியப்பான கருத்து. உடலுக்கு இதமான மிதமான தட்பவெப்பம், உள்ளத்துக்கு உற்சாகத்தைத் தரும் மெல்லிய சாரல் மழை, பார்வைக்கு விருந்தாகும் சோலைக் காடுகள், ஆண்டுக்குச் சுமார் 700 செ.மீ. மழை பொழியும் கரியன் சோலை பசுமை மாறாக் காடுகள், மிகக் குறைந்த அளவில் மழை பெறும் மஞ்சம்பட்டி முள்புதர்க் காடுகள், எண்ணிலடங்காத அரிய உயிரினங்களைக் கொண்ட வறண்ட மற்றும் ஈரப்பதமுள்ள இலையுதிர்க் காடுகள், ஊசியிலைத் தாவரங்கள், சோலைகள், புல்வெளிகள் ஆகியவை ஆனைமலையின் சிறப்புகள்.

கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் அதிகபட்சமாக 2513 மீட்டர் உயரம் வரை பல மலைகள் இப்பகுதியில் உள்ளன. அதிகபட்ச உயரமான 2513 மீட்டரில் காணப்படும் புல் மலைக்கு தனக்காமலை.இந்திராகாந்தி வன உயிரின உய்விடத்தின் மற்றொரு சிறப்பு, மலையும் மடுவும். ஒரு பக்கம் ஓங்கி உயர்ந்த மலைகள்; மறுபுறத்தில் அதல பாதாளம் -உலகின் வேறெந்த வனப்பகுதியிலும் இல்லாத சிறப்பு இது.எத்தனையெத்தனை உயிரினங்கள்!

தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடுகள் இங்கு மிக அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மேலும் ஆசிய யானைகள், சிறுத்தைகள், புலிகள், ஆனைமலையின் தனிச் சிறப்பான சிங்கவால் குரங்குகள், நீலகிரிக் கருங்குரங்குகள், ஆனைமலையின் பெருமையான இருவாச்சிப் பறவை, 350 வகைப் பறவையினங்கள், ராஜநாகம், விஷமில்லாத பறக்கும் பாம்பு உள்ளிட்ட எண்ணிலடங்காத பாம்பு வகைகள், கடமான், புள்ளிமான் எனப் பலவகை மான்கள், காட்டெருமை, காட்டு மாடு, வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் ராட்சதச் சிலந்திகள், பறக்கும் பச்சைத் தவளை, மனித ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள், மருந்துக்குப் பயன்படும் ஆயினிப் பலா, சிங்கவால் குரங்குகள் விரும்பி உண்ணும் குரங்குப் பலா, 500-க்கும் மேற்பட்ட அழகிய ஆர்க்கிட் மலர்கள், காட்டுப் பகுதிக்கே உரிய கல்வாழை, காட்டு நெல், வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் கோடம்புலி மற்றும் நூற்றுக்கணக்கான மூலிகைகள் (மூச்சு வாங்குகிறதா!) ஆகிய அனைத்தும் ஆனைமலை வனத்தில்.

யானைகளுக்கான பயிற்சி முகாம்கள் :

ஆனைமலையில் வரகலியார் மற்றும் கோழிக்கமுத்தி ஆகிய இரு இடங்களில் யானைகளுக்கான பயிற்சி முகாம்கள் உள்ளன. தற்போது 12 ஆண் யானைகள், 5 பெண் யானைகள், ஒரு குட்டி உள்ளன. இந்த யானைகள் பிற பகுதிகளில் அடங்காத யானைகளையும் அடக்கும் பயிற்சி பெற்றவை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆனைமலை வனப்பகுதிக்குள் செல்லவும், டாப்சிலிப்பில் உள்ள விடுதிகளில் தங்கவும் அனுமதியுண்டு. யானைச் சவாரி செய்யவும், கோழிக்கமுத்தி முகாமைப் பார்வையிடவும் வனத்துறை அனுமதியுள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களைத் தவிரப் பிற மாதங்கள் முழுவதும் சீசன்தான். இவ்வளவு பெருமைகள் மிக்க ஆனைமலை வனப் பகுதியை 'பூலோக சொர்க்கம்' என்று சொல்வது சரிதானே?

டாப்சிலிப்பின் கதை

கோவை மாவட்டத்தில் இந்திரா காந்தி வனவிலங்குச் சரணாலயப் பகுதிக்கு வருபவர்கள் டாப்சிலிப்பில் தங்குவதை பெரிதும் விரும்புவார்கள். இங்கிலாந்தில் கப்பல் கட்டுவதற்குத் தேவைப்பட்ட தேக்கு, ஈட்டி, ஆய்மி மரங்களைப் பயிரிடக் கடந்த 1847-ல் பிரிட்டிஷ் அரசு இப்பகுதியில் விஞ்ஞான வன மேலாண்மையைத் துவக்கியது. வனப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களை யானைகளின் மூலம் கொண்டு வந்து டாப்சிலிப் பகுதியில் இருந்து உருட்டி விட்டால் மலையடிவாரத்துக்கு அவை வந்துவிடுமாம். இதன்பின் துறைமுகங்களுக்கு மரங்கள் கொண்டு செல்லப்பட்டன. மரங்களை உருட்டிவிடும் மிக உயரமான இடம் டாப்சிலிப் என அழைக்கப்பட்டது. இம்முறையைக் கேப்டன் மைக்கேல் என்பவர் அறிமுகப்படுத்தியுள்ளார். டாப்சிலிப்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கே மான், காட்டுப் பன்றிகள் ஆகியவற்றைக் கூட்டம் கூட்டமாக மிக அருகாமையில் பார்க்க முடியும். இங்கு மூலிகைப் பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Gopal Koothapiran Gopal Koothapiran commented on 3 month(s) ago
welcome (Government help me )
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Website Square Vanavil2
Noyyal_media_Right1