1000 நாடகங்கள், 500 திரைப்படங்கள் - மேட்டுப்பாளையம் வெள்ளை சுப்பையா - ஒரு சகாப்தம்

 Thursday, July 18, 2019  06:30 PM

மேட்டுப்பாளையம் அருகே உள்ள புஞ்சை புளியப்பட்டியை சேர்ந்த வெள்ளை சுப்பையா 1000 நாடகங்கள், 500 திரைப்படங்களில் பங்கேற்றவர். மேட்டுப்பாளையம் மட்டுமில்லாமல் கோவைக்கே ஒரு பெருமையை தேடிக்கொடுத்தவர்.. கடந்த செப்டம்பர் மாதம் உடல்நல குறைவால் காலமானார்.

நகைச்சுவை நடிகர் `வெள்ளை' சுப்பையா உடனான தனது நினைவுகள் குறித்து இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.கூறுகையில்...

சுப்பையா நடித்த படங்களிலேயே `வைதேகி காத்திருந்தாள்' திரைப்படம் மிகவும் பிரபலமானது. அந்தப் படத்தில் கல்யாணப் பெண்ணான ரேவதி தன் கணவருடன் பரிசலில் அக்கரையைக் கடக்கும் காட்சியில் இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற ஒரு பாடல் வரும். `மேகங் கருக்கையிலே...' எனத் தொடங்கும் அப்பாடலில் `வெள்ளை' சுப்பையா நடித்திருப்பார்.

``40 வருடங்களுக்கு முன் சென்னை தேனாம்பேட்டையில் நான், பாக்யராஜ், `சங்கிலி' முருகன், வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா, பெரிய கருப்புத்தேவர்... எல்லோரும் ஒரே காம்பவுண்டில் வசித்தோம். நானும், பாக்யராஜும் 10-ம் நம்பர் வீட்டில் இருந்தோம். அப்போது நாங்கள் இயக்குநர்கள் ஆகவில்லை. எங்களை அடிக்கடி பார்க்கவரும் கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் ஆகியோரும் நடிகர்கள் ஆகவில்லை. `16 வயதினிலே' படத்தில் பாக்யராஜ் உதவி இயக்குநராக வேலை பார்த்தபோது, `கிழக்கே போகும் ரயில்' படத்தில் கவுண்டமணியை நடிக்க வைத்தார். இயக்குநர் ஆனபிறகு `சங்கிலி' முருகனை `ஒரு கை ஒசை' படத்தில் நடிகராக்கினார்.

நான் இயக்குநரான பிறகு, என் படத்தில் கோயம்புத்தூர் ஸ்லாங் பேசும் ஒரு நடிகர் தேவைப்பட்டார். `கிழக்கே போகும் ரயில்' படத்தில் `பாஞ்சாலி கொஞ்சம் தூக்கிவிடவா..' என்று சாதாரண மொழி நடையில் வசனம் பேசிய கவுண்டமணியை என் படத்தில் `காட்டை வித்தே கள்ளை குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன்தான்டா' என்று கோவை ஸ்லாங்கில் பேசவைத்தேன். பிறகு கிராமப் படங்கள் நிறைய வர ஆரம்பித்ததால் வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா, குள்ளமணி `பசி' நாராயணன் எல்லோருக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன.வெள்ளை சுப்பையா 1000-க்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கிறார். 500-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். என் படங்களில் விதவிதமான கேரக்டர்களில் நடிக்கும்போது, அவருடைய நாடக அனுபவம் பலமுறை கைகொடுத்திருப்பதை கண்கூடாகப் பார்த்து வியந்திருக்கிறேன். நாங்களும் அவருடைய நாடக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். சுப்பையாவின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். அங்கேயே தனது ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வரை அவ்வப்போது சினிமாவில் தலை காட்டினார். சினிமாவில் பெரிதாக வாய்ப்பும் இல்லை, அவருக்கும் வயதாகிவிட்டது.

இப்போதுள்ள இளம் இயக்குநர்கள் பலருக்கு அவருடைய திறமை தெரியாது என்பதால், அவரைப் புதிய படங்களில் நடிக்க அழைக்கவில்லை. அதனால், சொந்த ஊரான மேட்டுப்பாளையத்துக்கே போய் உறவினர்கள், குடும்பத்தினரோடு செட்டிலாகி வாழ்ந்தார். தனியாக வர வேண்டும் என்பதால், அவர் சென்னைக்கு வருவதையே தவிர்த்துக் கொண்டார்.

எப்போதாவது நடிகர் சங்கத் தேர்தல் வரும்போது மட்டும் சென்னைக்கு வந்து தவறாமல் வாக்களித்துவிட்டுச் செல்வார். அப்போது என்னை வந்து பார்த்துவிட்டு நீண்டநேரம் மனம் விட்டுப் பேசுவார். முதுமை வந்துவிட்டதால், அதற்குரிய அவஸ்தைகளை அனுபவித்து வந்தார். நாங்கள் இருவரும் இரண்டு நாளைக்கு ஒரு முறை போனில் தவறாமல் பேசிக்கொள்வோம்.

--- ஆர்.சுந்தர்ராஜன்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2