மேட்டுப்பாளையத்தில் மாணவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கும் பார்வையற்ற ஆசிரியர்

 Sunday, July 14, 2019  04:30 PM

அய்யோ பாவம் என்ற பரிதாபம் வேண்டாம்; அவரை போல நாம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை தான், நாம் உருவாக்க வேண்டும்; கடவுள் என்னை கண்பார்வையற்றவராக படைத்ததற்கு நன்றியை தெரிவிக்கிறேன்,' என இருளில் வெளிச்சத்தை காணும் தன்னம்பிக்கை ஆசிரியர் தெரிவித்தார்.

குறைகளை காட்டி பரிதாபத்தை தேடி அலைபவர்களும் உண்டு. குறைகள் ஒரு குறையல்ல; அவை இறைவன் கொடுத்த சிறப்பான அம்சம் என நினைத்து சாதிக்க கூடியவர்களும் உண்டு. அந்த சாதனையாளர்களில் ஒருவராக திகழ்கிறார், கண் பார்வை இல்லையென்றாலும், மாணவர்கள் முன்னேற்றத்துக்காக தன்னை அர்பணித்துக் கொள்ளும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்.மேட்டுப்பாளையம் சிறுமுகைபுதுார் சொந்த ஊராக இருந்தாலும், பொள்ளாச்சியில் தனது பெற்றோர், சகோதரருடன் வசிக்கிறார் சுரேஷ்குமார்,28. பெத்தநாயக்கனுார் அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார்.

கண் பார்வை இல்லையென்று வீட்டில் முடங்கவில்லை; அதற்கு மாற்றாக, தனது குறையே தனக்கு சிறப்பு என ஏற்றுக் கொண்டு வாழ்க்கை பாதையில் அடி எடுத்து வைத்தார்.சிறப்பு பள்ளியில் பயிலாமல், கோவை சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளியில், சக மாணவர்களோடு மாணவர்களாக பள்ளி படிப்பை முடித்துள்ளார். கோவை அரசு கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் படித்து, டிப்ளமோ படிப்பாக, பிரென்ச், ஜெர்மன் மொழியினை பயின்றுள்ளார். பின், ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் பயிற்சி பெற்றார்.கடந்த, 2014 செப்., 26ம் தேதி பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பணியால் மகிழ்ச்சி கிடைத்தாலும், சிறப்பாக பணியை செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கியுள்ளது.பள்ளிஆசிரியர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியதுடன், மாணவர்களும் அவரது பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதனால், கடந்த, மூன்று ஆண்டுகளாக ஆங்கில பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று கொடுக்கிறார்.

அவர் தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து...''பெற்றோர் ஜோதிமணி, செல்வி, சகோதரர்கள் கொடுத்த ஊக்கம் எனக்கு உதவியது. மற்றவர்களை போல என்னால் உலகை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் வந்தது.அதற்காக உடைந்து போய்விடக்கூடாது, அய்யோ பாவம் என்ற பரிதாபம் காட்ட கூடாது; இவரை போல சாதிக்க வேண்டும் என பலருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என மனதில் பதிந்து கொண்டேன்.என்னுடைய பணிகளை நானே செய்து கொள்ள கற்றுக் கொண்டடேன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், பழகிக் கொண்டேன். ஆசிரியர்கள் கூறும் குறிப்புகளை செவி கொடுத்து கேட்டு நினைவில் பதிய வைத்துக் கொண்டு, சந்தேகம் இருந்தால், தெளிவுபடுத்திக் கொள்வேன். கல்லுாரி வாழ்க்கை முடிந்ததும் ஆசிரியர் பணி கிடைத்தது. இந்த பணி கிடைத்தது மன மகிழ்ச்சியை கொடுத்தது.வகுப்பில், மாணவர்களை படிக்க வைத்து அதன் மூலம் விளக்கம் கொடுத்தேன். பின், மாணவர்கள், என்னை கரும்பலகையில் எழுத வைக்க பயிற்சி கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதனை நானும் கற்றுக்கொண்டதால், கரும்பலகையில் எழுதி போட்டு பாடம் நடத்துகிறேன்.வகுப்பில், மாணவர்கள் சேட்டை செய்யாமல், கவனமாக பாடங்களை கேட்டு எழுதி கொள்வர். ஆங்கில உச்சரிப்பு, பேச்சுத்திறமையை வளர்த்துக் கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன்.

பள்ளியில் செயல்படும் ஆங்கில மன்றத்தில், ஆறு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' மற்றும் இலக்கண பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி, 10ம் வகுப்புக்கு வரும் போது, ஆங்கில பாடம் படிக்க எளிதாகிறது. இந்த முயற்சிக்கு கிடைத்த பலனாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, 100 சதவீதம் தேர்ச்சி கிடைக்கிறது.பள்ளி தலைமையாசிரியர் திருமலைசாமி, பள்ளி உதவி ஆசிரியை ஆரோக்கியபாலா, தமிழாசிரியர் பாலமுருகன், தற்போதைய பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி என, உடன் பணிபுரியும் அனைத்து ஆசிரியர் நண்பர்களும் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். என்னிடம் கோபம், வெறுப்பு காட்டியது இல்லை.

கண்பார்வை குறைபாடு இல்லாமல் சாதித்து வருபவர்களை எனது ரோல்மாடலாக கொண்டு வாழ்ந்து வருகிறேன். பார்வையின்றி பிறக்க வைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு எல்லாம் இருளாக தெரிந்தாலும், கல்வி அறிவை கொடுத்து, பலரையும் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளேன் என்ற மனதிருப்தி என்னை மேலும் சிறப்பாக பணியாற்ற செய்கிறது. இருளில் வெளிச்சத்தை காணுகிறேன். இந்த பணியே எனக்கு மனதிருப்தி தருகிறது. இவ்வாறு, தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.எத்தனை தடைகள் வந்தாலும், அதனை படிக்கல்லாக மாற்றிய மாற்றுத்தினாளி ஆசிரியர், மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக உள்ளார். தனது நம்பிக்கை, விடா முயற்சியால் மற்றவர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1