சாலைகளாகும் பிளாஸ்டிக் கழிவுகள்; சாதனை படைக்கும் கோவை மகளிர் சுயக்குழு

 Thursday, July 11, 2019  06:30 PM

முதுமை எய்திட்டாலோ பூமித்தாய்! நரைத்த முடிகளாய் நாடெங்கும் பாலிதீன் பைகள் முளைத்துள்ளன என ஒரு கவிஞர் எழுதியது போல, நாம் எங்கு நோக்கிணும் பிளாஸ்டிக் பைகளாக தான் தென்படுகின்றன. குடிநீர் பாட்டில் முதல் குழந்தைகளுக்கு விற்கும் மருந்துக்கள் வரை அனைத்திலும் பிளாஸ்டிக் உள்ளே புகுந்து விட்டது. வேதி பொருள்களால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்களில் டீ கப் முதல் உணவு பொருள்கள் வரை அடைத்து, ஆபத்தை நாமே தேடிக் கொள்கிறோம்.

இந்த பிளாஸ்டிக்கை பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், அதை மறுசுழற்சியாவது செய்து அதன் தீமைகளில் இருந்து நாம் தப்பிக்க வேண்டாமா? பிளாஸ்டிக்கை எரித்தால் காற்று மாசுப்படும், குழித்தோண்டி மண்ணில் புதைத்தால் மக்காமல் இருந்து மண் மாசுப்படும். இவ்வாறான தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து, சுற்றுச்சுழலை காக்க முயன்றுள்ளது கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த பனிமலர் மகளிர் சுயஉதவிக்குழு.

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, அதாவது பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகள் அமைக்க பயன்படுத்தும் வகையில் தூள் தூளாக மாற்றி கொடுத்து வருகின்றனர் இந்தக் குழுவினர். இதற்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையால் தேர்வுச் செய்யப்பட்டு மாநில அளவில் 2ம் பரிசும் பெற்றுள்ளனர்.

பனிமலர் குழு இதுவரை 10 டன் பிளாஸ்டிக் கழிவுகளை, சாலை பணிகளுக்காக அனுப்பி உள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இக்குழுவினர் பிளாஸ்டிக் பைகளை கொடுத்துள்ளனர். இவர்களிடம் இருந்து சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை, கணபதியில் உள்ள நிறுவனம் தயாரித்து கொடுத்த இயந்திரம் மூலம் தூள், தூளாக ஆக்குகின்றனர். சுமார் 20 ஹெச்.பி. திறனுடைய மோட்டாரின் வலிமையால், பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கி தருகிறது. இந்த பிளாஸ்டிக்குகள் சுமார் 70 முதல் 80 கிலோ அளவிலான மூட்டைகளாக பேக்கிங் செய்யப்படுகிறது. இவை கிலோ ரூ.25க்கு சாலைகள் அமைக்கும் பணிக்காக அரசுத் துறைகள் மூலம் வாங்கி கொள்ளப்படுகிறது. கோவை, நீலகிரி, திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் சாலை பணிகளுக்கு இந்த பிளாஸ்டிக் தூள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 100 சதவீத தார் சாலையில் 10 சதவீதம் இந்த பிளாஸ்டிக் தூள்கள் பயன்படுத்தப்படுகிறது.

yt_custom

இதுகுறித்து பனிமலர் சுயஉதவிக்குழுவின் தூணாக செயல்படும் குழுத் தலைவி பி.ராணி கூறுகையில், 2003-ல் ஆரம்பிக்கப்பட்ட இக்குழு, தற்போது 13 பேர்களுடன் இயங்கி வருகிறது. 2010ல் பிளாஸ்டிக் கவர்களை உருக்கி, மின் விளக்குகள் பொருத்தப்படும் பிளாஸ்டிக்குகளாக மாற்றும் 3 இயந்திரங்கள் ரூ.2.91 லட்சத்தில் கடனுதவியில் வாங்கப்பட்டது. பின்னர் இயந்திரத்தில் பயன்படுத்திவதில் குழுவினருக்கு ஏற்பட்ட சிரமங்களினால், அந்த இயந்திரங்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகளுக்கு உபயோகப்படுத்தும் வகையில் தூளாக்கும் இயந்திரங்களை வாங்கினோம்.

முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை, இங்குள்ள அம்மன் நகர் பகுதியிலுள்ள 3 ஆயிரம் குடும்பங்களில் இருந்தே பெற்று பயன்படுத்தி வந்தோம். பின்னர் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து மறுச்சுழற்சிக்காக பயன்படுத்தி வந்தோம். குப்பைக்கிடங்கில் இருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவினால் துர்நாற்றம் ஏற்படுவதாக கூறி இப்பகுதி மக்கள் எதிர்ப்பு காட்டினார்.

இதனால் தற்போது தொழிற்நிறுவனங்களில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு, மறுசுழற்சியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது தமிழ்நாடு சுற்றுச்சுழல் துறை பாராட்டுகளுக்கு பின்னர், மாநகராட்சியில் இருந்து உதவிகள் தருவதாக கூறியுள்ளார்கள். வீணாக போகும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து, இதுபோன்று மறுசுழற்சி செய்வதால், இந்த பகுதியை தூய்மையாகவும், சுற்றுச்சுழலும் மாசுப்படமால் காப்பாற்ற முடியும். உரிய அனுமதி கிடைத்தால், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் இருந்து நிறைய அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது இந்த பகுதியை முதலில் சுத்தமாக்கி காட்டுவேன். மேலும் 3 சுயஉதவிக்குழுவினர் இதே போல் இயந்திரங்கள் கேட்டுள்ளனர். குப்பைகளை மறுசுழற்சி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பினும், குப்பையில் இருந்து கோபுரமாக ஜொலிப்போம் என உறுதியாக கூறுகிறார் ராணி.

சிறிய முயற்சிகள் தான் ஒரு நாள் சரித்திரமாக மாறும். சாதிக்கட்டும் இந்த சாதனை பெண்கள். பிளாஸ்டிக்குகளினால் ஈக்கள் முதல் பூக்கள் வரை மலண்டு (மலட்டுத்தன்மை அடையும்) போகும், கால்நடை இறப்பிற்கும், சாக்கடை அடைப்பிற்கும் காரணமிந்த நெகிழி (பிளாஸ்டிக்) எனவே இயன்றவரை நெகிழியை நேசிக்காமல் இருப்பதே நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
fb_right
Telegram_Side
mobile_App_right