கோவையில் டீக்கடை நடத்தும் பெண் மராத்தான் போட்டியில் சாதனை


Source: maalaimalar
 Thursday, July 11, 2019  01:30 PM  1 Comments

கோவையில் டீக்கடை நடத்தும் 45 வயது பெண் மராத்தான் போட்டியில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார்.
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் அழகு. இவரது மனைவி கலைமணி (45). இவர்களுக்கு பிரபு(24), பிரபாகரன்(21) ஆகிய 2 மகன்களும், பிரியங்கா(19) என்ற மகளும் உள்ளனர். கணவன்- மனைவி 2 பேரும் கோவை தாமஸ் வீதியில் டீக்கடை நடத்தி வருகிறார்கள். கலைமணி 45 வயதிலும் மராத்தான் போட்டியில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். பள்ளியில் படிக்கும் போதே எனக்கு கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மீது ஆர்வம் இருந்தது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று உள்ளேன். எனக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு 3 குழந்தைகள் பிறந்த பின்பும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் குறைய வில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது விளையாட்டு ஆர்வம் குறித்து எனது கணவரிடம் கூறினேன்.


Vanavil New1
அவர் எனக்கு ஊக்கம் கொடுத்தார். இதன் பயனாக ஜோசப் என்ற பயிற்சியாளர் மூலம் தடகள போட்டிக்கான பயிற்சி பெற்றேன். அதன்மூலம் மாநில, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தேன். இதுவரை 4 தங்க பதக்கம் உள்பட 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று உள்ளேன்.

தற்போது பீனிக்ஸ் ரன்னர்ஸ் என்ற கிளப்பில் உறுப்பினராக இணைந்துள்ளேன். இதன்மூலம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 21 கி.மீ. ஓட்டப்பயிற்சி பெற்று வருகிறேன். அன்னூரில் கடந்த மாதம் நடைபெற்ற 21 கி.மீ. மராத்தான் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றேன். தற்போது 41 கி.மீ. மராத்தான் பயிற்சிக்காக பயிற்சியாளர் கணேஷ்குமார் என்பவர் மூலம் பயிற்சி பெற்று வருகிறேன்.

41 கி.மீ. மராத்தான் போட்டியில் 4 மணிநேரத்தில் ஓடி சாதனை படைப்பதே எனது குறிக்கோள். 2014-ல் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான மராத்தான் போட்டியில் முதல் பரிசாக தங்க பதக்கத்தையும், 2017-ம் ஆண்டு கரூர் மாவட்டம் புகலூரில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 3 தங்கபதக்கம் பெற்றேன். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களுரில் நடந்த தேசிய அளவிலான மராத்தான் போட்டியில் பங்கேற்றேன். ஆனால் பரிசு பெற முடியவில்லை. இதனால் மனவருத்தத்தில் திரும்பிய நான் கடந்த மாதம் அன்னூரில் நடந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்தேன்.

எனது சாதனைக்கு பயிற்சியும், ஊக்கமும்தான் காரணம். வயது ஒரு தடையல்ல. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து சமையல் செய்து விட்டு 5 மணி முதல் 1 மணிநேரம் பயிற்சி எடுப்பேன். பின்னர் எங்களது டீக்கடைக்கு சென்று வழக்கம் போல் பணிகள் செய்வேன். எனக்கு கணவர், மகன்கள், மகள் ஆகியோர் உறுதுணையாக இருந்து எனது பயிற்சிக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


balu rathna balu rathna commented on 4 day(s) ago
valthukkal sagothari
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2