வளர்ச்சியா... வீழ்ச்சியா..? கோவை ரியல் எஸ்டேட் இன்றைய நிலவரம்

 Wednesday, June 19, 2019  04:30 PM  1 Comments

பொதுவாகவே அனைத்துத் தரப்பினரும் மிகவும் விரும்பும் இடமாக இருக்கிறது கோயம்புத்தூர். வீடோ, மனையோ கோயம்புத்தூர் புறநகரில் வாங்கி விட வேண்டும் என்பது பலரின் ஆசை. தங்களது ஓய்வுக்காலத்தை நல்ல நிலையில், நிம்மதியாக கழிக்க வேண்டும் என நினைக்கும் சீனியர் சிட்டிசன்கள் தேர்வு செய்யும் இடங்களில் கோவை முக்கிய நகரமாக இருக்கிறது.

ஆனால், கடந்த சில ஆண்டு களாகவே கோயமுத்தூர் ரியல் எஸ்டேட் நிலவரம் வளர்ச்சியைச் சந்திக்கவில்லை. மாறாக, வீழ்ச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் டெவலப்பர்கள் சிலரிடம் பேசினோம்.

“தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் தொழில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. என்றாலும் கோவையில் பெரிய அளவில் பாதிப்பில்லை. ஆனால், கடந்த ஆண்டு முதல் கோவையிலும் ரியல் எஸ்டேட் தொழில் சரிவைச் சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட 25% அளவுக்கு பதிவுத் துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவு குறைந்திருக்கிறது.

மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதுடன், வீடு மற்றும் மனைகளின் விலையும் அதிகரித்துவிட்டது இதற்கு முக்கிய காரணம். இதுபோக, ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிகமாக இருக்கும் கைடுலைன் வேல்யூ குளறுபடிகள் உள்ளிட்ட காரணங்களும் உள்ளன.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நிலங்களின் விலை உயரவில்லை. மாறாக, சில இடங்களில் நிலங்களின் விலை குறைந்திருக்கிறது. விலை இன்னும்கூட குறையலாம் என்பதால் மனை வாங்குவது கணிசமாகக் குறைந்திருக்கிறது” என்றனர்.

கடந்த ஓராண்டில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் விற்பனை கோவையில் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இது பற்றி புரமோட்டர் ஒருவருடன் பேசினோம். ‘‘கோவையில் குறைந்தபட்சமாக 20 ஆயிரம் அடுக்குமாடி வீடுகள் விற்பனை ஆகாமல் இருக்கிறது. கோவையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் தேவைக்கும் அதிகமாகக் கட்டி வைக்கப் பட்டுள்ளன. இவற்றை எப்படியாவது விற்றால் போதும் என்ற அடிப்படையில் தற்போது விலை சற்று குறைக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.

ரியல் எஸ்டேட் தொழில் மேம்பட அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் செய்யப்படவில்லை எனக் கடும்கோபத்துடன் புகார் சொன்னார்கள் புரோக்கர்கள்.

“ரியல் எஸ்டேட் தொழில் நசிவுக்கு கைடுலைன் வேல்யூ பிரச்னையில் தொடங்கி பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பெருமளவில் லஞ்சம் பெறப்படுகிறது. தொடர்ச்சியான வற்புறுத்தலின் பேரில் கட்டட அப்ரூவலுக்கு சதுர அடிக்கு 43 ரூபாய் என்றிருந்த லஞ்சம், இப்போது 13 ரூபாய் குறைக்கப் பட்டு, 30 ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதைத் தவிர, அரசுத் தரப்பில் எங்களுக்கு எதுவும் செய்துதரப்படவில்லை” என்றனர்.

Vanavil New1

“வெள்ளலூரில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட சில அரசுத் திட்டங்களும் ரியல் எஸ்டேட் தொழில் மேம்பாட்டுக்கு உதவவில்லை. சில இடங்களில் செயற்கையாக வளர்ச்சியை ஏற்படுத்த சில திட்டங்கள் முன்மொழியப்பட்டது. ஆனால், அது பலனளிக்கவில்லை” என புரோக்கர்கள் தெரிவித்தனர்.

கோவையைப் பொறுத்தவரை, ஐ.டி. ஹப் என்று சொல்லப்படும் சரவணம்பட்டியில் முதலீட்டு நோக்கிலும், வணிக பயன்பாட்டுக் காகவும் நிலம் வாங்குபவர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் அங்கு ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக உள்ளது.

மிகச் சிறந்த சீதோஷ்ண நிலை, சுகாதாரமான சூழல் காரணமாக முழுமையான குடியிருப்புப் பகுதியான வடவள்ளி வீழ்ச்சியைச் சந்திக்க வில்லை. வடவள்ளியைப் போலவே இதமான சுற்றுச்சூழல், நல்ல காலநிலை காரணமாகவே பொள்ளாச்சியில் ரியல் எஸ்டேட் உச்சத்தை எட்டியது.

தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி பொள்ளாச்சி யையும் விட்டு வைக்கவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக எந்த வளர்ச்சியிலும் இல்லாமல் முடங்கியே கிடக்கிறது. கடந்த ஓராண்டில் நிலங்கள் விற்பனை, பதிவு போன்றவை கணிசமாக சரிந்திருப்பதாகச் சொல்கிறார்கள் புரமோட்டர்கள்.

கோவையில் தொழில் துவங்குபவர்கள் தங்கள் வீட்டை பொள்ளாச்சியில் கட்ட ஆர்வம் காட்டத் துவங்கியதால், மனைகளின் விலை கடந்த 2010 முதல் 2012-ம் ஆண்டு வரை எகிறியது. நடுத்தர மக்கள் துவங்கி மேல்தட்டு மக்கள் வரை பல தரப்பட்ட மக்களும் பொள்ளாச்சி யில் இடம் வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஏக்கர் 4 லட்சம், 5 லட்சத்துக்கு விற்ற இடங்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் சென்ட் 2, 3 லட்சத்துக்கு விற்கும் அளவு ரியல் எஸ்டேட் உச்சத்தை எட்டியது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டு களில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் பொள்ளாச்சியும் முடங்கிக் கிடைக்கிறது.

பொள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரம், வெங்கடேஷா காலனி, சிடிசி டிப்போ பகுதியிலும், புறநகரில் சேரன் நகர், சின்னாம்பாளையம், மின்நகர், கோட்டம்பட்டி ஏரியாக்களில் ஓரளவு நல்ல விலை போகிறது.

கோவையில் தொண்டா முத்தூர், சிங்கா நல்லூர், பீளமேடு, காளப்பட்டி, துடியலூர், மலுமிச்சம்பட்டி, நஞ்சுண்டா புரம் போன்ற பகுதிகளில் போடப்பட்ட லே அவுட்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை யாகவில்லை. மக்களிடம் மனை, வீடுகளை வாங்குவதில் தயக்கம் உள்ளது.

சென்னையைப் போல. இப்போது கோவையிலும் பில்டர்கள் அதிகரித்து விட்டார்கள். இதன் காரணமாக வீடு, அப்பார்ட்மென்ட் வாங்கு பவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக மனை, வீடு, அப்பார்ட்மென்ட் வாங்குவது குறித்து முடிவெடுப்பதில் மக்கள் தாமதிக்கின்றனர். வீடு வாங்க வேண்டிய கட்டாயமுள்ளவர்கள் கூட முடிவெடுக்க தாமதிக்கும் சூழலும் இப்போது உள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலில் அகில இந்திய அளவில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடியின் போதுகூட கோவை பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்திக்க வில்லை. ஆனால், இப்போது கோவை ரியல் எஸ்டேட் தொழில் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கத் துவங்கியிருக்கிறது. வீடுகள், மனைகள் நடுத்தர மக்களின் வாங்கும் சக்திக்கேற்ப இருந்தால் தான் விற்பனையாகும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இதை மனதில்கொண்டு அரசு மற்றும் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்தவர்கள் செயல் பட வேண்டும். செய்வார்களா?


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Venkatesh Venkatesh commented on 3 week(s) ago
The main thing is some mediators playing double game& expecting more than their commission. that's why I stopped my plan to buy a house & a agricultural land.
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2