யாரும் பேட்டி அளிக்க கூடாது- அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு கட்சி தலைமை உத்தரவு


Source: Maalaimalar
 Wednesday, June 12, 2019  03:23 PM

அடுத்த அறிவிப்பு வரும் வரை கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
யாரும் பேட்டி அளிக்க கூடாது- அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு கட்சி தலைமை உத்தரவு

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை தற்போது உள்ளது. இதனை மாற்றிவிட்டு ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு கட்சியில் சில நிர்வாகிகள் ஆதரவும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒற்றைத் தலைமை கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், அதுபற்றி பேசப்படவில்லை.


Vanavil New1
தற்போது உள்ளபடி செயல்பட ராஜன் செல்லப்பா ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். ஒற்றை தலைமை குறித்த கோரிக்கை இனி அதிமுகவில் எழாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்நிலையில், அதிமுக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அதிமுக சார்பில் பத்திரிகைகள், ஊடகங்கள் வழியாகவும் இன்னபிற சமூக தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துக்கள் தெரிவிக்கும் பணிக்கென செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்றபிறகே அவர்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை பெற்றவர்கள்.

பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூக தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூக தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துக்களாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2