கோவையில் ஒரு கொட்டாங்கச்சி சிற்ப கலைஞர் - விஸ்வநாதன்

 Wednesday, May 29, 2019  04:30 PM

சிலருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று பேச்சுக்கு சொல்வார்கள். அதுபோல, விஸ்வநாதன் கையில் படும் கொட்டாங்குச்சிகள் அனைத்துமே கண்ணை ஈர்க்கும் கலைப் பொக்கிஷங்களாக மாறிவிடுகின்றன!

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர், கொட்டாங்குச்சிகளைக் கொண்டு ஆதியோகி முதல் அப்துல்கலாம் வரை சிற்பங்களாக வடித்து வைத்திருக்கிறார். இதுமட்டுமல்ல.. வீட்டு அலங்காரப் பொருட்கள், காதணிகள், ஜிமிக்கி, வளையல், டாலர் செயின் உள்ளிட்ட பெண்களுக்குப் பிடித்தமான அலங்காரப் பொருட்களையும் கொட்டாங்குச்சியில் செதுக்கி அசத்துகிறார். இன்றைக்கு கொட்டாங்குச்சிகளைக் கொண்டு இந்தப் பொருட்களை செதுக்கும் விஸ்வநாதன் ஒரு காலத்தில் நகைப் பட்டறைத் தொழிலில் ஏகபோகமாக இருந்தவர். நகைத் தொழில் நசிந்துபோனதால், கொட்டாக்குச்சிகளை கையில் எடுத்ததாகச் சொல்கிறார்.

பூர்வீகம் திருநெல்வேலி

“எங்களுக்கு பூர்வீகம் திருநெல்வேலி. நாங்க பரம்பரை சிற்பிகள். நகைப் பட்டறை வேலைக்காக எங்க அப்பா காலத்துல நாங்க கோவைக்கு வந்தோம். படிப்பு அவ்வளவா ஏறாததால நாலாம் வகுப்போட எடுத்து வெச்சுட்டு, இங்கே சொந்தமா நகைப்பட்டறை வெச்சேன். அதில் கிடைத்த வருமானத்தை வெச்சுத்தான் குடும்பமே ஓடுச்சு. ஆனா, இப்ப நகைத் தொழில் முன்ன மாதிரி இல்ல. எல்லாமே மெஷின் கட்டிங் ஆகிடுச்சு. அதையும் பெரிய, பெரிய கம்பெனி களே செய்ய ஆரம்பிச்சுடுச்சு. அங்க வேலை செய்யுறதுக்கு வடமாநிலங்கள்ல இருந்து கம்மியான சம்பளத்துக்கு ஆட்களை கூட்டிட்டு வந்துடுறாங்க. அதனால, எங்கள மாதிரி சின்னச் சின்ன நகைப் பட்டறைகள் எல்லாம் தாக்குப்பிடிக்க முடியல.

கோயமுத்தூருல மட்டுமே நகைப்பட்டறைத் தொழிலில் இருந்த சுமார் 40 ஆயிரம் பேர் இப்ப அந்தத் தொழிலை விட்டுட்டு, டீக்கடை, டிபன் கடை, பெயின்டர்னு கிடைச்ச வேலைக்கு போயிட்டு இருக்காங்க. எனக்கு எந்த வேலைக்குப் போறதுன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. அப்பத்தான் இந்த கொட்டாங்குச்சி நமக்கு கைகுடுத்துச்சு. ஆரம்பத்துல, கொட்டாங்குச்சியில சின்னச் சின்ன கம்மல், ஜிமிக்கி, டாலர் செயின்களை செய்ய ஆரம்பிச்சேன். கொட்டாங்குச்சியை செதுக்கி, அறுத்து, பாலீஷ் ஏற்றி, தேங்காய் நார்களை வச்சுப் பின்னியே அதை எல்லாம் செய்தேன்.


Real_Custom1
எந்தவொரு மாடலையும்..

நான் செஞ்சுவெச்ச அலங்காரப் பொருட்களை எம் பொண்ணு காலேஜ் போறப்ப எடுத்துட்டுப் போனா. வித்தியாசமா, க்யூட்டா இருக்குன்னு சொல்லி அவளோட ஃபிரெண்ட்ஸுங்க கொஞ்சப் பேர் வாங்க ஆரம்பிச்சாங்க. அப்புறமா, பெட்ரூம் லேம்ப், பூந்தொட்டி, பேனா ஸ்டாண்டு சின்ன, சின்ன சிற்பங்கள்ன்னு கொட்டாங்குச்சியில செய்ய ஆரம்பிச்சேன். இப்ப, எந்தவொரு மாடலைப் பார்த்தாலும் அதை அப்படியே கொட்டாங்குச்சியில உருவமா செதுக்க என்னால முடியும்.

அப்படித்தான், அப்துல் கலாம், காந்தி, புத்தர், வீணை என ஏகப்பட்ட சிற்பங்களைச் செஞ்சேன். நான் செஞ்சு வெச்ச பொருட்களை எல்லாம் போட்டோ எடுத்து என் பையன் ஃபேஸ் புக்ல போட்டான். அதுக்கெல்லாம் லைக்கும் பாராட்டும் தான் வந்துச்சே ஒழிய, எங்களுக்கு எந்த லைஃப்பும் கிடைக்கல. சிலபேரு இந்தப் பொருட்களை மொத்த விலைக்குத் தரமுடியுமான்னு கேட்டாங்க. அது எனக்கு ஒத்துவராததால சம்மதிக்கல” என்கிறார் விஸ்வநாதன்.

“கண்காட்சியில் கொட்டாங்குச்சி சிற்பங்களைப் பார்க்கும் எல்லாருமே ஆச்சர்யப்படறாங்க. முழுக்க இது கொட்டாங்குச்சிதான்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க. இதுக்கு எங்கே பயிற்சி எடுத்தீங்கன்னு கேட்கிறாங்க. சிலபேரு, எங்களுக்கும் கத்துத் தருவீங்களான்னு கேட்கிறாங்க. கண்காட்சியில வெச்சிருந்த பொருட்கள்ல சிலது விற்பனையும் ஆகியிருக்கு. இந்தக் கலையை கத்துக்கிறதுக்கு கல்லூரி மாணவ - மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டுறதால அவங்களுக்காக ஜனவரியில் ஒரு பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம்னு இருக்கேன்” என்றார்.

நிச்சயம் பரிந்துரைப்போம்

இவரின் கைவினைப் பொருட்களை கண்காட்சிக்கு அனுமதித்த பூம்புகார் மேலாளர் ரா.நரேந்திர போஸ் நம்மிடம், “கொட்டாங்குச்சியில் இவ்வளவு கலையம்சத்தைக் காட்டியவர்களை இதுவரை நான் பார்க்கவில்லை. முன்கூட்டியே வந்திருந்தால் இவரை சிறந்த கைவினைஞர்கள் என்ற முறையில் மாவட்ட, மாநில விருதுக்கு பரிந்துரைத்திருக்கலாம். எனினும், அடுத்த வருடம் இவரது பெயரை நிச்சயம் விருதுக்கு சிபாரிசு செய்வோம்” என்று சொன்னார்.


Real_Ad5

Real_Ads6


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Real_Ad1
AdSolar1
arunhitech_sqr1
Arunsqr4
Real_Right2