கோவை - உதகை இடையே பேருந்துகள் பற்றாக்குறை: சுற்றுலாப் பயணிகள் புகார்


Source: dinamani
 Wednesday, May 15, 2019  01:35 PM

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து உதகைக்குச் செல்ல பேருந்துகள் பற்றாக்குறையாக உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் உதகைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் உதகை செல்ல பிரதான போக்குவரத்து மார்க்கமாக கோவை உள்ளது. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ரயில், விமானம், பேருந்துகளில் கோவை வரும் சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம், கல்லாறு, குன்னூர் வழியாக உதகைக்குச் செல்கின்றனர்.

சிலர் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயிலில் செல்கின்றனர். ஆயினும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் பேருந்துகள் மூலமாகவே செல்கின்றனர்.

தற்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையாக உள்ளதால் கோவை பேருந்து நிலையத்தில் இருந்து உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


Vanavil New1
குறிப்பாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை பேருந்து நிலையத்தில் உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், பேருந்துகள் பற்றாக்குறையால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கோவையில் இருந்து உதகைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. ஒரு மணி நேர இடைவெளியில் பேருந்து நிலையத்தில் மீண்டும் பயணிகள் கூட்டம் அதிகரித்து விடுகிறது.

குழந்தைகளுடன் உதகைக்குச் செல்ல வருபவர்கள் பேருந்துக்காக காத்திருந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கோடை விடுமுறை முடியும் வரை 10 முதல் 20 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் இயக்கினால் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி சென்று வர முடியும் என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கூடுதலாக 5 பேருந்துகள் தினசரி உதகைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் 15 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன.

கோவையில் இருந்து உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி பயணிக்க தேவையான அளவு பேருந்து வசதிகள் செய்யப்படும் என்றனர்.

Courtesy : dinamani






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2