வேற்றுமைகளை புறந்தள்ளி, கூடிக் குலாவுவோம்: சர்வதேச குடும்ப தினம் இன்று!!

 Wednesday, May 15, 2019  06:51 AM

ஒற்றுமை போற்றுவர் தவிர மற்றவர்கள் இறந்தவர்களாகக் கருதப்படுவர் என்றான் வள்ளுவன். அதற்கேற்றாற்போல், எந்த சூழலிலும் தன் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சர்வதேச குடும்ப தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 1992 -ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் மே மாதம் 15-ம் தேதி 'சர்வதேச குடும்ப தினம்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எந்த சூழ்நிலையிலும் எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம் வலியுறுத்துகிறது. குடும்பங்களுக்கிடையே, சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப் பொறுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

நகரமயமாக்கலால் பாரம்பரியமாக இருந்த கூட்டுக்குடும்பம் உடைந்து தனிக் குடித்தன விகிதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அந்த கணிப்பு அரங்கேறி வருகிறது. சமுதாயத்தின் முதல் நிறுவனமே குடும்பம் தான் எனும் நிலையில், அது ஆட்டம் காண்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின், நாட்டின் அஸ்திவாரத்தையே அசைப்பதாக இருக்கிறது.

இன்றைக்கு பல குடும்பங்களில் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு பெற்றோர்களுக்கு நேரமில்லை. வேலைப் பளுவும், தொலைக்காட்சியும், செல்போனும், இணையமும் நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதேபோல், தங்களது பெற்றோர்களையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் அவலமும் அரங்கேறி வருகிறது.


Arunhit
உலகம் முழுவதும் பலர், வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பம், இவர்களைத் தான் சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.

அண்மையில் இது குறித்த குறும்படம் ஒன்றை பார்த்த போது, வெளிநாட்டில் வாழும் மகன் தனக்கு என்ன தான் வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தாலும், நான்கு சுவர்களுடன் வாழ மனமில்லாமல் முதியோர் இல்லம் சென்று தங்கும் பெற்றோரின் மனநிலை நமது மனதை உறுத்த தவறவில்லை.

சில நேரங்களில் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்து செயல்படுகிற இந்த இயந்திரமய வாழ்க்கையின் வெறுமை நம்மை உறுத்தக்கூடும். ஆனால், அது இனம் புரியாத வெறுமையாகவே இருக்கிறதே தவிர அதற்கு மாற்றுவழி என்ன என்று நாம் ஆராய்வதில்லை.

அன்றாடம் மனிதர்கள் குடும்பம், வேலையிடம், சமூகம் என்ற மூன்று வேடங்களை ஏற்க நேரிடுகிறது. அதில், பின்வரும் இரண்டும் எப்போது வேண்டுமானாலும் மாற்றத்திற்குள்ளாகலாம். ஆனால், துக்கத்திலும், மகிழ்ச்சியிலும் என்றும் மாறாதது குடும்பம்தான்.

எனினும், வேலையிடம், சமூகம் ஆகிய இரண்டும் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு குடும்ப உறவுகளுக்கான நேரத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. இதை தவிர்க்க குடும்ப உறவுகளில் அதிக கவனம் செலுத்துவதோடு, அவர்களுக்குரிய நேரத்தையும் சரியாக ஒதுக்க வேண்டும். முக்கியமாக உறவுகளை பலப்படுத்துவதற்குரிய பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கூடிக்குலாவி ஒற்றுமையாக வாழ்வதற்கு, வேற்றுமைகளை புறந் தள்ளுவோம் என்ற கூற்றுக்கிணங்கி, அன்னையர் தினம் கொண்டாடிய இதே வாரத்தில் குடும்ப தினத்தையும் கொண்டாடி மகிழ்வோமாக!!


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Arunhitechsqr5
Website Square Vanavil2
Arunhitech_sqr2
arunhitech_sqr1
AdSolar1
Arunsqr4