அன்னூரில் கீரை விவசாயத்தில் அசத்திவரும் தம்பதி

 Monday, May 6, 2019  04:30 PM

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் இருக்கும் தேவாங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற குலசேகர ராமானுஜதாஸன், ஜெயந்தி என்கிற குமுதவல்லி ராமானுஜதாஸயை தம்பதி, இயற்கைக் கீரை சாகுபடியில் அசத்தி வருகிறார்கள்.

“எங்களுக்கு மொத்தம் பதினோரு ஏக்கர் நிலம் இருக்கு. போர்வெல் மூலமாதான் பாசனம். நான் பி.இ. படிச்சிருக்கேன். கோயம்புத்தூர்ல இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யுற தொழிற்சாலையை நடத்திட்டிருக்கேன். மனைவி ஜெயந்தி எம்.பி.ஏ. படிச்சிருக்காங்க. அவங்கதான் தொழிற்சாலையை நிர்வாகம் பண்றாங்க. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். ஆனா, அவருக்கு இயற்கை விவசாயத்தைப் பத்திய விழிப்பு உணர்வு இல்லை. ரசாயன உரத்தைப் போட்டுத்தான் விவசாயம் பாத்துக்கிட்டிருந்தாரு.

ஒருகட்டத்துல, எங்களுக்கு ஆன்மிகத்துல நாட்டம் ஏற்பட்டுச்சு. தொழில், ஆன்மிகம்னு வாழ்க்கைனு போனதால விவசாயத்தைப் பத்திய நினைப்பே இல்லை.

கிராமத்துல போய் அடிக்கடி அப்பாவை பார்த்துட்டு திரும்புறதோடு சரி. விவசாயம் எல்லாம் அவரோடு போகட்டும் என்கிற நினைப்புத்தான் இருந்திச்சு. ஆனா, நாங்க கலந்துக்குற ஆன்மிகக் கூட்டங்கள்ல, சொற்பொழிவாளர்கள், ஆன்மிகத்தோடு பேச்சை முடிக்காம, இயற்கை வாழ்வியல் அதற்கான உணவு முறை, ஆன்மிகத்தில் பஞ்சகவ்யாவின் பங்களிப்பு பத்தியெல்லாம் பேசுவாங்க. அந்த மாதிரி விஷயங்களைக் கேக்க ஆரம்பிச்சப்பறம்தான் இயற்கை விவசாயம் மேல ஆர்வம் ஏற்பட்டுச்சு. சரியா அந்த நேரம் ‘பசுமை விகடன்’ கிடைக்க ஆரம்பிச்சதும், எங்கள முழுநேர விவசாயியா, அதுவும் இயற்கை விவசாயியா மாத்திக்கிட்டோம்.

மனமாற்றத்தை ஏற்படுத்திய இயற்கை!

Arunhitech_curom1

“முதல்ல நான் செஞ்ச வேலை நாட்டு மாடு வாங்கினதுதான். அடுத்து தினம் வருமானம் கொடுக்குற பயிரா இருக்கணும்னு யோசிச்சு கீரை சாகுபடி பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. பழகப்பழக எல்லாம் சரியாயிடுச்சு. ரசாயன விவசாயம்தான் ஏற்றதுனு சொல்லிட்டிருந்த அப்பாவும், இப்ப இயற்கைப் பக்கம் சாய்ஞ்சிட்டாரு. அவரும் இப்போ பசுமை விகடனுக்கு தீவிர வாசகர். அடுத்ததா, மரவள்ளி, வாழை, பப்பாளினு மீதமுள்ள நிலத்துலயும் இயற்கை விவசாயம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கோம்” என்று சொன்ன சிவக்குமாரைத் தொடர்ந்து பேசினார், அவர் மனைவி ஜெயந்தி.

ஒன்பது வகை கீரைகள்... 400 வாடிக்கையாளர்கள்!

“ஆரம்பத்துல கீரைக்கட்டுகளை கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம்னு தினசரி மார்கெட்டுகள்லதான் கொண்டு போய் விற்பனை செய்தோம். அதுல கிடைக்கிற வருமானத்துல, இடைத்தரகர் கமிஷன், வேன் வாடகை, ஆள்கூலினு பாதி பணம் போயிடும். அந்த வியாபாரிகள்கிட்ட இயற்கை கீரைக்கெல்லாம் தனிமரியாதை கிடைக்கலை. அதுக்கப்பறம்தான் நாங்களே நேரடி விற்பனையில இறங்குனோம். இப்ப நாலு வருஷம் முடியப்போகுது. நானூறுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எங்களுக்கு இருக்காங்க.

வெந்தயக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக் கீரை (சுக்கட்டி), அரைக்கீரை, புளிச்சக்கீரை, அகத்திக்கீரைனு 9 வகை கீரைகளை சாகுபடி பண்றோம். மூணு ஏக்கர்ல சுழற்சி முறையில கீரை சாகுபடி பண்றோம். ஒரு நாளைக்கு 200 கீரைக்கட்டுக்களை நேரடியா விற்பனை செய்றோம். எல்லா ரக கீரைக்கும் ஒரே விலைதான். எதை எடுத்தாலும் கட்டு 15 ரூபாய்னு கொடுக்கிறோம். அந்த வகையில தினமும் 3 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. மாசத்துல 25 நாட்கள் மட்டும்தான் விற்பனை செய்றோம். ஆக, மாதம் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் பாக்குறோம். சுழற்சி முறையில ஒரு ஏக்கருக்கான வருமானம் இது. இதுல, செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் போனாலும் மாசம் 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்குது. மார்க்கெட்டுல விற்பனை செய்றதை விட நேரடி விற்பனையில ரெண்டு மடங்கு லாபம் கிடைக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய சிவக்குமார், “என்னதான் தொழில்ல வருமானம் கிடைச்சாலும், விவசாயம் மூலமா கிடைக்குற வருமானம்தான் மனசை நிறைவாக்குது. வாடிக்கையாளர்களுக்கு கீரையை மட்டும் கொடுக்காம, இயற்கை வேளாண்மை, விஷமில்லா உணவு குறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்திக்கிட்டு வர்றோம். இயற்கைக் கீரை, 48 மணி நேரத்துக்கு வாடாம இருக்கு. அதனால, இதை ஏற்றுமதி செய்ற யோசனையும் இருக்கு. அதுக்கான வாய்ப்புகளும் கிடைச்சிருக்கு” என்றார், மகிழ்ச்சியுடன்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
arunhitech_sqr1
Arunsqr4
Arunhitechsqr5
AdSolar1
Arunhitech_sqr2