இயற்கை விவசாயம்-அனுபவ விவசாயியின் பகிர்வு

 Monday, July 3, 2017  08:00 PM

ஆண்டு முழுவதும் பணத்தை வாரி இறைத்து விவசாயம் செய்து ஒரு கட்டத்தில் வரவுக்கு மீறிய செலவு ஆனதால் விவசாயத்தை கைவிட எண்ணினேன். அந்த சூழ்நிலையில் தான் வேளாண் அறிஞர் சுபாஷ் பாலேக்கர் அவர்களின் பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நான் பயிற்சி எடுத்துக் கொண்ட 2007 ம் ஆண்டு முதல் இன்று வரை பைசாகூட விவசாயத்திற்கு முதலீடாக செலவு செய்ததில்லை என்கிறார் திரு.N.G.பிரபுராம், அவர்கள் பெருமிதத்தோடு இவரின் பண்ணை கோவை மாநகரிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் குனியமுத்தூர் என்னும் பகுதியில் உள்ளது. சுமார் 4.75 ஏக்கர் விவசாய நிலத்தில் இதுவரை நெல், வாழை, காய்கறி என்று பல பயிர்கள் ஜீரோ பட்ஜெட்டில் சாகுபடி செய்து வருகிறார்.

இப்பட்டம் 4.75 ஏக்கரில் நெற் பயிர் செய்து வருகிறார். இனி அவரின் அனுபவம்….. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் விவசாயத்தில் ஈடுபட்டேன் ஆரம்ப கால விவசாயம் மிகவும் சோதனை காலமாக இருந்தது. அன்று இரசாயன உரம், பூச்சிக் கொல்லி என்று விஞ்ஞானிகள் கூறிய அனைத்து தொழில் நுட்பங்களையும், சந்தைகளுக்கு வரும் புதிய பூச்சிக் கொல்லிகளை அதன் பெயர்களில் ஈர்க்கப்பட்டே பயன்படுத்தினேன், பின் கடன் சுமைக்கும் மன உளைச்சலுக்குமே ஆளானேன்.
வேளாண் அறிஞர் சுபாஷ் பாலேக்கர் அவர்கள் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு நாட்டுப் பசு மாட்டின் பெருமைகளை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருந்த காலத்தில் அவரின் மந்திர வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயியாக உருவெடுத்தேன். ஒரு ஏக்கருக்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ சாணம் போதுமானது என்பதே அந்த தாரக மந்திரமாகும் என்றார்.

ஏன் நாட்டு மாடுகள்?

பசுமை புரட்சிக்கு முன்பாக விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் மாடுகளை வளர்த்து வந்தனர். இதனால் அதிக அளவில் சாணங்களும் விவசாயத்திற்கு கிடைத்தது, மேலும் குளத்து மண், வண்டல் மண் என்று சத்து மிகுந்த மண் வளம் மேம்படுத்தும் காரணிகளும் எளிதாக கிடைத்து வந்தது. பசுமை புரட்சியின் கால் சுவடு அனைத்தையும் அழித்தது… உழைக்கும் மக்கள், மாடுகளின் எண்ணிக்கை, குளம், குட்டை நன்னீர் , மேய்ச்சல் நிலம், என்று ஏராளம். இது போன்ற சூழ்நிலைகளில் இயற்கை விவசாயம் செய்திட வேண்டும் என்று வந்த பலருக்கும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டது (இயற்கை விவசாயத்திற்கு திரும்ப அதிக எண்ணிக்கையில் மாடுகள் தேவைப்பட்டது. டன் கணக்கில் தொழு உரத்திற்காக) என்று வேளாண் அறிஞர் சுபாஷ் பாலேக்கர் அவர்கள் நாட்டு மாட்டின் ஆராய்ச்சி மூலம் ஜீவாமிர்தம் என்னும் பார்முலாவை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

சுபாஷ் பாலேக்கர் வளர்த்த சொன்ன மாடுகள்

இந்தியாவில் சுமார் 33 வகையான நாட்டுப் பசு மாடுகள் இருக்கிறது அதில் சில கர்நாடகாவின் கிட்டா (சிறிய உருவம் – சுமார் 2 முதல் 3 கிலோ வரை ஒரு நாளுக்கு சாணம் கிடைக்கும் – சுமார் 2 முதல் 3 லிட்டர் வரை ஒரு நாளுக்கு கோமியம் கிடைக்கும்), கேரளாவின் வேச்சூர் (சிறய உருவம்) சிறிய உருவமுடைய பசுவிலிருந்து கிடைக்கக் கூடிய சாணம் மற்றும் கோமியத்தில் நுண்ணியிர்களின் செயல் திறன் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்கு காங்கேயம், ஆந்திராவிற்கு ஓங்கோல், குஜராத்திற்கு கிர், ராஜஸ்தான் தார்பார்கர், பஞ்சாபிற்கு சாகிவால், மைசூர்க்கு அமிர்தமஹால் பசு, தஞ்சாவூர் உம்பலச்சேரி, பர்கூர் என்று ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நாட்டு மாடுகள் இருந்தாலும் இவை அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்வது காங்ரெஜ் என்னும் நாட்டு மாடாகும். ஆகவே நாட்டு மாடுகள் அனைத்தும் சிறந்ததே, விவசாயிகள் அவர்களின் பகுதியில் சீதோ­னத்திற்கேற்ப இருக்கும் நாட்டு மாடுகளையே ஜீவாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தலாம் என்று வேளாண் அறிஞர் அறிவுறுத்துவதாக கூறினார்.

நாட்டு மாட்டின் சிறப்பு

சீமை மாடுகள் இந்தியாவிற்குள் பாலுக்காக இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும் ஆனால் இதுவே மேலை நாடுகளில் இறைச்சிக்காக வளர்த்தப்படுபவை, ஆனால் நமது நாட்டு மாடுகள் பால் உற்பத்தி, மற்றும் அதிலிருந்து கிடைக்கக் கூடிய பல அறிய சிறப்புகளுக்காக வளர்த்தப்படுபவை,. நாட்டு மாட்டின் கொம்பு, திமில் மற்றும் வால் ஆகியன சூரிய ஒளி, காற்று மண்டலம் என அனைத்திலிருந்தும் சத்துக்களை எடுத்து கிரகித்து சாணம் மற்றும் கோமியத்தில் கொடுப்பதோடு அல்லாமல் மீதம் இருக்கும் சத்துக்களை அதன் உடலில் பல மாற்றங்களை செய்து தன் கால் குளம்பு வழியாகவும் மேய்ச்சலுக்கு செல்லும் இடங்களில் சிறப்பு மிகுந்த நுண்ணுயிர்களை மண்ணில் பதிக்கிறது என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்படி பல சிறப்புகள் இருப்பதாலேயே நாம் கோமாதா என்று கூறி வழிபடுகிறோம். கால் குளம்பு பட்ட இடம் குண்டுமணி எருவும் தேவையில்லை என்பது பழமொழி.

கிர் பசு வளர்ப்பதற்கான காரணம்

இயற்கை விவசாயத்தின் தொடக்க காலத்தில் கர்நாடகாவின் கிட்டா பசுக்களை வளர்த்து வந்தேன் அதன் சாணமும் கோமியமும் குறைந்த அளவிலே கிடைத்ததால் (தீவன அளவும் குறைவாகவே எடுத்துக் கொள்ளும்) காங்கேயம் பசுவினை தேர்வு செய்து வளர்த்து வந்தேன், இதில் பராமரிப்பு என்பது எளிது ஆனால் பாலின் அளவு குறைவு மற்றும் அதன் கம்பீரமான தோற்றத்தினால் நெருங்கி பால் கறப்பதென்பது பழகியவரால் மட்டுமே இயலும். பால் அளவு என்பது சுமார் ஒரு நாளுக்கு 4 லிட்டர் வரை கரக்கும் திறனுடையது, வீட்டின் தேவை போக மீதம் இருக்கும் பாலை அதன் சுவை, மணம் மற்றும் ஆரோக்கியம் அதிகமாக இருப்பதினால் சந்தையில் விற்க தொடங்கினேன் ( 1 லிட்டர் பால் ரூ.100/-) நாளுக்கு நாள் சந்தையில் இதன் தேவை அதிகரிக்கவே காங்கேய மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்தேன். ஆனால் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட பால் கறவை திறன் அதிகமுள்ள நாட்டு மாடுகளை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து கிர் பசு (மிகவும் சாது) வளர்க்க ஆரம்பித்தேன். இதன் பராமரிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது சுமார் ஒரு நாளுக்கு 8 – 10 லிட்டர் வரை பால் கறக்கும் திறன் உடையது, வீட்டின் தேவை போக 1 லிட்டர் பால் ரூபாய்.100/- என்று விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மாடென்பது எனது பண்ணையின் உரத் தொழிற்சாலை கிர் பசு ஒரு நாளுக்கு சுமார் 12 கிலோ சாணமும், 10 லிட்டர் கோமியமும் கொடுக்கும். மேலும் பழைய கோமியங்களை சேமித்து வைத்துக் கொள்வேன், ஜீவாமிர்தம் தயாரிக்க பழைய கோமியமும் புதிய சாணமும் சிறந்த கலவையாகும், தேவைக்கு அதிகமாக கிடைக்கும் கோமியத்தினை இறவை பாசணத்தின் போது கலந்து விடுவதால் நிலத்தின் வளம் கூடுவதாக தன் அனுபவத்தை பகிர்ந்தார்.ஜீவாமிர்தம் மட்டும் போதும்

ஜீவாமிர்தம் கலவை தயாரிக்க, எந்த நிலத்தில் பயன்படுத்கிறோமோ அந்த நிலத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண் பயன்படுத்த வேண்டும் அப்போது தான் நாட்களில் நன்கு வளர்ந்து நிற்கும். இதில் சுமார் இரண்டு முறை ஜீவாமிர்தம் கொடுத்திட வேண்டும். இது போன்று தயார் செய்த நாற்றினை எடுத்து வயலில் நடும் பொழுது சுமார் 1 அடி இடைவெளி விட்டு நடவு செய்தல் வேண்டும் (ஒற்றை நாற்று நடவு முறை) இதில் ஒவ்வொரு நாற்றும் சுமார் 256 தூர்கள் விடும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்கிற விதத்தில் தூர்கள் வெளிப்படும் இந்த வளர்ச்சியானது சுமார் 70 நாட்கள் வரை முழுவளர்ச்சி தொடரும். (இதுவே நாற்றங்காலில் இருந்து 30 வது நாள் வயலில் நடவு செய்யும் பொழுது டி அடி இடைவெளி போதுமானது என்று தன் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்தார்) நாற்றங்காலில் இருந்து 15 வது நாள் வயலில் நடப்படும் நெல்கள் அதிக மகசூல் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவாமிர்தம் தயாரிக்கும் விவசாயிகள் கவனத்திற்கு

சாணம், கோமியம் மற்றும் மண் ஆகியவை நமது பண்ணையில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம், கரும்புச் சர்க்கரையை மற்றும் பயிர் மாவு இரண்டினையும் இயற்கை விவசாயிகளிடம் மொத்தமாக வாங்கிக் கொள்வேன். கரும்புச் சர்கரையை ஒரு ஸ்பூன் சிந்தினால் ஆயிரம் எரும்புகள் வரும் ஆனால் மூட்டையாக வைத்தால் ஒரு எரும்பு கூட வராது என்கிறார் (இதற்கு உதாரணமாக கரும்புச் சர்க்கரை உற்பத்தி செய்யும் இடங்களை கூறுகிறார்). அடுத்ததாக பயிர் மாவினை இரண்டு கிலோவாக மட்டும் அரைக்க வேண்டும், திருகுக்கல்லில் அரைப்பது சிறந்தது (இயந்திரம் அதிக சூடாக இருந்தால் மாவில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் இதர சத்துக்களை இழக்க நேரிடும்).

ஜீவாமிர்தம் தவிர வேறு எந்த உரங்களையும் நிலத்திற்கு கொடுப்பதில்லை. நெல் பயிருக்கு மாதம் இரண்டு முறையும், காய்கறி பயிர்களுக்கு மாதம் முன்று முறையும், வாழை போன்ற வருடாந்திர பயிர்களுக்கு மாதம் இரண்டு முதல் மூன்று முறை வரை கொடுத்து வருகிறேன். நெல் பயிரில் அறுவடைக்கு முன்பாக சுமார் 20 நாட்களுக்கு முன்பு தண்ணீர் மற்றும் ஜீவாமிர்தம் கொடுப்பது நிறத்தி விடுவேன் என்றார். இது போன்று சாகுபடி தொழில் நுட்பத்தில் ஏக்கருக்கு சுமார் 2 டன் வரை மகசூல் எடுத்து வருகிறேன், மேலும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் சாகுபடி செய்யும் நெல்லை கைகுத்தல் அரிசியாக மாற்றி கிலோ ரூபாய்.100/- என்று விற்பனை செய்து வருகிறேன்.

ஜீரோ பட்ஜெட் தொழில் நுட்பத்தை வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் அவர்களின் பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டோ அல்லது அவரது புத்தகங்களை முழுமையாக படித்த பின்போ செயல்படுத்த வேண்டும். நூற்புழு தாக்குதலுக்கு தக்காளி பயிர் செய்யும் பொழுது 6 தக்காளி செடிக்கு 1 செடி மாரி கோல்டு (துண்டா மல்லி) பயிர் செய்ய வேண்டும் அதே போல் 6 வரிசை தக்காளி செடிக்கு 1 வரிசை மாரி கோல்டு பயிர் செய்தல் வேண்டும் ஜீரோ பட்ஜெட் என்றாலே செலவு இல்லா ஆன்ம வேளாண்மை என்று பொருள், ஜீரோ பட்ஜெட்டின் ரகசியங்கள் நாட்டு பசு , மூடாக்கு, கலப்பு பயிர் சாகுபடி மற்றும் ஜீவாமிர்தம் ஆகும். இந்த நான்கு ரசசியங்களையும் ஒருசேர பின்பற்றினால் மட்டுமே ஜீரோ பட்ஜெட் விவசாயம் வெற்றியடையும் என்றார்.

தொடர்புக்கு

N.G.பிரபுராம்
இயற்கை விவசாயி
மணி நாயுடு இயற்கை பண்ணை,
குனியமுத்தூர்.
கோவை – 08
93631 47111


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp1
Website Square Ad spp2
Website Square Ad spp3
Website Square Vanavil 1
Website Square Vanavil2