இன்று வரை கோவையில் பல நூறு ஏழைக் குடும்பங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் - ஜி.டி.நாயுடு

 Thursday, April 18, 2019  06:30 PM

ஒழுக்கமும் உழைப்புமே உயர்வு தரும் என்பது கோவை ஜி.டி.நாயுடு தொழிலகத்தின் தாரக மந்திரம். இங்கு வேலையை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை. ஒழுக்கமும், கடினமாக உழைப்பதும் எப்படி என்றும் சேர்த்துதான் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதனால்தான் தொழிற்பயிற்சி கல்விகூட பயிலாத, மூன்று மாத பயிற்சி மட்டும் பெற்ற மாணவர்களை பல முன்னணி நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன.

மோட்டார் நகரத்தின் மேதை ஜி.டி.நாயுடு தொடங்கிய பயிற்சி வகுப்புத் திட்டம், இன்றைக்குப் பல நூறு ஏழைக் குடும்பங்களை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

இந்தப் பயிற்சித் திட்டம் உருவான வரலாறே மிக சுவராசியமாக இருக்கிறது. 1945-ம் ஆண்டு அப்போதைய சென்னை கவர்னர் ஆர்தர் ஹோப் பெயரில் இன்ஜினீயரிங் கல்லூரியையும், பாலிடெக்னிக் ஒன்றையும் துவங்கினார் ஜி.டி.நாயுடு. இந்தக் கல்லூரிகளில் பிராக்டிகலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தக் கல்வித் திட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. படிப்பு என்ற பெயரில் நீண்ட நாட்களை கல்லூரியில் கழிப்பதும், வெறும் பாடத் திட்டம் மூலம் கற்பித்தால் மாணவருக்குப் பயனில்லை என்பது ஜி.டி.நாயுடுவின் வாதம். அதனால், அரசிடமே இரு கல்லூரிகளையும் ஒப்படைத்துவிட்டு, 'இண்டஸ்ட்ரியல் லேபர் வெல்ஃபேர் அசோஸியேஷன்' என்ற அமைப்பை 1946-ல் துவங்கி, 6 வாரம் மட்டுமே கற்றுத்தரும் கோர்ஸைத் துவக்கினார். இதில் அதிகபட்சமாக பிராக்டிகல் வகுப்புக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தப் படிப்பின் முக்கியத்துவமே 10-ம் வகுப்பு தேறியவர்களும் தவறியவர்களும் சொந்தமாகத் தொழில் துவங்கவும், தொழிற்சாலையில் பணிபுரியவும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஏற்படுத்தினார். இந்தப் பயிற்சி வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்தான் இந்தப் பயிற்சி பரவலான கவனத்தைப் பெற்றது.

கோவை அவிநாசி சாலையில் ஜி.டி.நாயுடு அறக்கட்டளை வளாகத்தில் இருக்கும் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றோம்.

''இந்தப் பயிற்சிக்கு எவ்வாறு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்'' என மேலாளர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''இன்றைக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர் முதல் பி.இ முடித்த மாணவர்கள் வரை இந்தப் பயிற்சி வகுப்பில் படிக்கின்றனர். ஆனால், பயிற்சிக் காலம் மூன்று மாதங்கள் ஆகிவிட்டாலும், ஜி.டி.நாயுடு வகுத்துத் தந்த அதே பாடத் திட்டத்தின்படிதான் வகுப்புகள் நடக்கின்றன. 'ஆட்டோமொபைல் சர்வீஸ் அண்டு மெயின்டனன்ஸ் டெக்னாலஜி' என அழைக்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளுக்கு, ஆண்டுக்கு நான்கு முறை மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஓரளவு ஆங்கில அறிவு இருப்பது அவசியம். ஏனென்றால், தொழில்நுட்ப வார்த்தைகளை அறிந்துகொள்வதற்கு இது பயன்படும். நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவச் சோதனை ஆகியவற்றில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு மூன்று மாதம் எங்களது விடுதியில் தங்கி இருப்பது கட்டாயம். இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.4,500 மட்டுமே! பகிர்வு முறையில் உணவும் விடுதியில் வழங்கப்படுகிறது. இதற்கு மாதம் உத்தேசமாக 1,500 வரை ஆகும்'' என்கிறார் மேலாளர் பாலகிருஷ்ணன்.

''எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது'' எனக் கேட்டபோது, ''இந்த மூன்று மாதப் பயிற்சியில், வாகனம் எவ்வாறு இயங்குகிறது, பராமரிப்பது எப்படி என இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்துக்கும் பயிற்சி அளிக்கிறோம். இயந்திரத்தின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வாறு கழற்றுவது, மீண்டும் எப்படிப் பொருத்த வேண்டும் என்பதை விளக்கிவிடுவோம். பின்பு மாணவர்களே அதேபோல் செய்து வாகனத்தை இயக்கிக் காட்ட வேண்டும். ஒவ்வொரு மாணவரின் தனித் திறமையைக் கண்காணித்து அதற்கேற்ப பயிற்சி அளிக்கிறோம். மேலும், ஒவ்வொரு மாதமும் தேர்வுவைத்து திறமையை வளர்த்துக் கொள்ள ஊக்கப்படுத்துகிறோம். இறுதியாக தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குச் சான்றிதழ் வழங்குகிறோம்'' என்று கூறினார் பயிற்சியாளர் பொன்னுசாமி.


Arunhit
''இங்கு பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகத் தொழில் துவங்கியும், பல்வேறு பெரிய நிறுவனங்களிலும் வேலை செய்து கொண்டும் இருந்தாலும், பஜாஜ் நிறுவனம் இங்கு பயிற்சி அளிக்கும் முறையைப் பார்த்துவிட்டு 1999 முதல் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி ஆட்களை எடுத்துக்கொள்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பஜாஜ் நிறுவனத்தில் இருந்து வந்து 20 பேர் வரை தேர்வு செய்கின்றனர். புனேவில் உள்ள பஜாஜின் செக்கான் பைக் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 300-க்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே தனியாகத் தயாரிப்பு பிளாட்பார்ம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். வேண்டுமானால் நீங்கள் புனேயில் உள்ள எங்களிடம் பயின்ற மாணவர்களிடம் பேசிப் பாருங்கள்'' எனக் கூறினார் ஜி.டி. அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஜி.டி.கோபால்.

புனே அருகிலுள்ள செக்கான், பல ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளைக் கொண்ட ஊர். இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் பஜாஜ் தொழிற்சாலை. 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையில்தான் பல்ஸர், டிஸ்கவர், அவென்ஜர் ஆகிய பைக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு வேலை செய்யும் தமிழர்களில் பெரும்பாலானோர் கோவை ஜி.டி.நாயுடு கல்லூரியில் பயின்று, கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு வந்தவர்கள். அவர்களைச் சந்திக்க தொழிற்சாலைக்குச் சென்றோம். ஜி.டி.நாயுடு கல்லூரியில் பயின்றவர்களைக் காண வந்துள்ளதை அறிந்து மொத்தக் கூட்டமும் நம்முன் திரண்டது. ஒவ்வொருவரும் தங்களது பயிற்சிக் காலத்தை நெகிழ்வோடு நினைவு கூர்ந்தனர்.

கோவையைச் சேர்ந்த செல்லப் பாண்டியன், இங்கு வேலைக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. லைன் மேன் ஆக சேர்ந்தவர், படிப்படியாக முன்னேறி இப்போது லைன் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறார். புளியம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கூறும்போது, ''நான் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன். படித்துவிட்டு என்ன செய்வது என திண்டாடிக்கொண்டு இருந்தபோது, எனது உறவினர் ஒருவர் மூலம் இந்த பயிற்சியைக் கேள்விப்பட்டு, இங்கு சேர்ந்து படித்தேன். ஜி.டி.நாயுடு கல்லூரியில் சொல்லித் தந்த ஒழுக்கமும் கடின உழைப்பும்தான் இந்தத் தொழிற்சாலையில் வேலை கிடைக்க உதவியது'' என்று நெகிழ்ந்தார். இவர் தற்போது பகுதி நேரமாக பி. டெக் படித்து வருகிறாராம்.

பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ரமேஷ், ஜி.டி கல்லூரியில் படிந்த மூன்று மாதங்களை தவக்காலம் என்கிறார்.

''படிப்பு மட்டும் இன்றி ஒழுக்கமும் கடினமாக உழைக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். கல்லூரிக்குள் புகை பிடிக்க, புகையிலை போட என எந்த ஒழுங்கீனங்களுக்கும் அனுமதி கிடையாது. மூன்று மாதமும் சொந்தப் பிள்ளைகளைப் போல பார்த்துக்கொண்டார்கள். அப்போது கண்ணும் கருத்துமாகப் படித்ததால்தான் இந்த நிலைமைக்கு முன்னேறியுள்ளேன்'' என பெருமையுடன் கூறினார் ரமேஷ்.

பஜாஜ் நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் சந்தேஷ் எம். தம்னேவிடம் பேசினோம். ''இங்கு தொழிற்சாலை துவங்கியபோது, ஒழுக்கமும், கடின உழைப்பும் கொண்டவர்களைத் தேடிக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் ஜி.டி.நாயுடு கல்லூரியைப் பற்றி தெரியவந்தது. கடந்த எட்டு வருடங்களாக அந்த கல்லூரியின் மாணவர்களை வேலைக்காகத் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் எதிர்பார்ப்பை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்வதில் வல்லவர்கள் கோவையில் பயின்றவர்கள். அதனால், சிறப்பாக கவனித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் இருந்து வேலைக்கு வந்தவர்களுக்காக தனி விடுதியும், அவர்களுக்காக தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல்காரர்களும் உள்ளனர்'' என்றார்.

குறைவாகப் படித்திருக்கிறோமே அடுத்து என்ன செய்வது என திசை தெரியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, வளமான வாழ்வை வழங்கிக்கொண்டு இருக்கிறது ஜி.டி.நாயுடு கல்லூரி!


Arunhitech_curom1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


arunhitech_sqr1
Arunsqr4
Arunhitechsqr5
AdSolar1
Website Square Vanavil2
Arunhitech_sqr2