அதிக வருவாய் ஈட்டித்தரும் பட்டியலில், கோவை ரயில்வே ஸ்டேஷன்

 Tuesday, April 16, 2019  02:06 PM

வருவாயை அள்ளித்தருவதில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, பீளமேடு உள்ளிட்ட ஸ்டேஷன்களுக்கு முக்கியப்பங்கு உண்டு.

சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக வருவாய் ஈட்டித்தரும் பட்டியலில், கோவை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. ஆனால், 'யானை பசிக்கு சோளப்பொரி' என்பது போல், கொங்கு மண்டலத்துக்கு கிடைக்கும் ரயில்வே சேவைகளும், கட்டமைப்பு வசதிகளும் மிகவும் குறைவுதான். ஓர வஞ்சனையுடன் செயல்படும் ரயில்வே நிர்வாகத்திடம், எதையும் போராடித்தான் வாங்க வேண்டியுள்ளது.

அதிலும், ஏமாற்றங்களையே இங்குள்ள மக்கள் அதிகம் சந்தித்துள்ளனர். அதற்கு, இங்குள்ள ரயில்வே ஸ்டேஷன்களே சாட்சிகளாக நிற்கின்றன. உதாரணமாக, இருகூர் ஸ்டேஷனில் புதர் மண்டிய நிலையும், 'பிளாட்பார்ம்'களில் நிழற்குடை இல்லாததையும் காண முடிகிறது.


Vanavil New1
மதுக்கரை ஸ்டேஷனில் உள்ள, உயர்மட்ட நடைபாதையில், ஆளையே பாதாளத்துக்கு அழைத்துச் செல்லும் வகையில், இடிந்த நிலையில் படிகள் உள்ளன. வடகோவை ஸ்டேஷன், ஏற்கனவே பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளது.இங்கு இரவு நேரங்களில், 'பிக் பாக்கெட்' திருடர்கள் தொல்லை அதிகம் என, அடுக்கடுக்காக புகார்கள் கூறப்படுகிறது. அங்குள்ள பெண்கள் கழிப்பறையோ, பயன்பாடற்ற வெறும் காட்சிப்பொருளாக உள்ளது.

பீளமேடு ஸ்டேஷனை மேம்படுத்தினாலே, கோவை ரயில்வே ஸ்டேஷனில் போக்குவரத்து பிரச்னை பெருமளவு குறைந்துவிடும். ஆனால், சேறும், சகதியுமான வடகோவை ஸ்டேஷன் வளாகமே, ஸ்டேஷனை மேம்படுத்த அதிகாரிகளுக்கு ஆர்வமில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

குப்பை குவியலுடன் கொசுக்களின் கூடாரமாக திகழும், போத்தனுார் ஸ்டேஷனில் ஆண், பெண் கழிப்பறைகள் மூடிக்கிடக்கின்றன. அது குடிகாரர்களின் கூடாரமாக திகழ்கிறது என்ற புகாரும் உண்டு.

இதே போல்தான், சிங்காநல்லுார் உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களின் அவல நிலையும் உள்ளது. வருவாய் தரும் இது போன்ற ஸ்டேஷன்களில், பயணிகள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டியது, ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு மட்டுமல்ல... கடமையும் கூட!


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2