கோவைக்கு சிறப்பு - சரவணம்பட்டி ரத்தினகிரி மலை

 Monday, April 15, 2019  05:30 PM

கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது சரவணம்பட்டி. ரத்தினகிரி மலையில் குமரக்கடவுள் கோயில் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிப்பதால், இந்த ஊருக்கு சரவணம்பட்டி எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர்!

பல வருடங்களுக்கு முன்பாக, நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் பிள்ளை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த பெண்மணி, கோவில் பிரதானத்தைச் சுற்றி வேண்டிக்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், பெண்மணியின் கதைகேட்டு மனமுருகி கையில் வைத்திருந்த திருநீற்றைக் கொடுத்து வேண்டிக்கொள்ள சொன்னானாம். சற்று நேரத்தில் அந்த சிறுவன் மறைந்து விட்டதாகவும், அவன் சொன்னபடியே பெண்மணி கருவுற்றதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இங்குள்ள முருகன் சிலை நான்கு கரங்களைக் கொண்டதாகவும், அவருக்கு அருகில் தனது வாகனமான மயிலை வைத்திருக்கும்படியும் உள்ளது. முருகன் சிலை அருகில் விநாயகர் சுயம்பாக உதித்ததாகக் கூறப்படுகிறது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று இங்கு நடைபெறும் பூப்பறித்தல் நிகழ்வு மிக சிறப்பாக கொண்டாடப்படும். முறைப் பையனும், முறைப்பொண்ணும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் திருமண வாழ்வு சிறக்க வேண்டி முருகனை வழிபடுவர். தற்போதைய காலங்களில், காதலர்களும் இங்கு இந்த முறையில் வேண்டிக்கொள்கின்றனர்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், ரத்தினகிரி மலையே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்குமாம். அந்த மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் சிவ-பார்வதி, திருமால் மற்றும் பூதேவி ஆகியோரின் திருவுருவங்களில் முருகப்பெருமான் திருக்காட்சி தந்தருள்வது சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். அப்போது முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்க, சரவணம்பட்டியில் உள்ள கோயிலில் இருந்து சிவ-பார்வதி, திருமால், பூதேவி ஆகியோர் மலையில் தரிசனம் தருகின்றனர்.

Vanavil New1

இதேபோல், தை அமாவாசை நாளில், இங்கு பால் குடம் எடுத்து முருகப்பெருமானைப் பிரார்த்தித்தால், நினைத்த காரியம் யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம், மாங்கல்ய வரம் கிடைக்கப் பெறுவார்கள். இந்த நாளில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்!

இப்படியாக, வருடம் முழுவதும் விசேஷங்களும் விழாக்களும் இருந்தாலும், பங்குனி உத்திரத் திருநாள்தான் இங்கு அதிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கையில் கூடை கூடை யாகப் பூக்களைச் சுமந்தபடி, காவடி எடுத்தபடி, மலையை வலம் வந்து, பிறகு மலையேறி, அழகுக் குமரனுக்கு பூக்கள் சார்த்தி வழிபடுகின்றனர். அப்போது பல வண்ண மலர்களால், குமரக்கடவுளைத் தரிசிப்பது பெரும் புண்ணியம். இல்லறம் சிறக்கவும் செழிக்கவும் செய்வார், குமரக்கடவுள் என்பது ஐதீகம்!

தவிர, மாதந்தோறும் பௌர்ணமியில் கிரிவலம் வந்து, குமரக்கடவுளைத் தரிசித்தால், ஒரு குறையுமின்றி சீரும் சிறப்புமாக வாழலாம் என்கின்றனர் கோவைப் பகுதி மக்கள்.

பங்குனி உத்திர நன்னாளில், கூடை கூடையாக பூக்களை எடுத்துக்கொண்டு, கிரிவலம் வந்து குமரனைத் தரிசித்து, பூக்களால் அர்ச்சியுங்கள்; மூட்டையெனக் குவிந்துகிடக்கும் துன்பங்களும் பாவங்களும் சட்டென மறைவதாக ஐதீகம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2