பிளேக் நோயால் சின்னாபின்னமான - கோவை நகரம்

 Sunday, April 14, 2019  11:30 AM

1855ல் சீனாவிலிருந்து கிளம்பி மூன்றுமுறை உலகைச் சூறையாடிய பிளேக், 1903-ல் கோவையையும் தாக்கியது. நகரில் பல்கிப் பெருகியிருந்த எலிகள் மரணத்தை ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் தாங்கிச் சென்றன. பின்பு 1904, 09, 16, 17, 20, 21, 23, 25, 27, 28, 29, 30 ஆகிய ஆண்டுகளில் திரும்பத் திரும்ப இந்நோயால் கோவை நகரம் சின்னாபின்னமாக்கப்பட்டது.

பிளேக் நோயால் 1904ல் 3,045 பேரும், 1909ல் 2973 பேரும், 1916ல் 5582பேரும், 1917ல் 3284பேரும், 1920ல் 3869 பேரும், 1921ல் 4123பேரும், 1923ல் 3888பேரும், 1925ல் 392 பேரும், 1927ல் 109 பேரும் இறந்துபோயினர். 1901ல் 53,080 ஆக இருந்த கோவை மக்கள்தொகை 1911ல் 47,007ஆகக் குறைந்துபோயிற்று.

இது பிளேகால் இறந்தவர்களைப் பற்றிய புள்ளி விவரம் மட்டும்தான். காலரா, பெரியம்மை போன்ற கொள்ளை நோயால் உயிர்விட்டவர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். உழைக்கும் மக்கள் வாழ்ந்து வந்த சேரிகளே பேரழிவைச் சந்தித்தன. செத்துப்போன தகப்பனை மகனும், மகனைத் தாயும் தொட பயந்த அந்தக் காலத்தில் சடலங்களைச் சுமந்து சென்று அடக்கம் செய்தனர். வீடுகளைச் சுத்தம் செய்து சீல் வைத்தனர். பிளேகும், காலராவும், பெரியம்மையும் ஏற்படுத்திய சர்வ நாசத்தைப் பற்றி அப்போது கோவையில் வாழ்ந்த பலர் எழுதியுள்ளனர்.


Vanavil New1
அப்படி மனிதர்கள் இறந்தபோது தமிழகத்தில் கோயில்களில் தஞ்சம் புகுந்தனர். இப்போதும் கோவையில் பிளேக் மாரியம்மன் என்று ஓர் அம்மன் கோயிலுக்குப் பெயர் வைத்துள்ளனர்.

இந்த நோய் ஐரோப்பாவில் வந்தபோது, ஆயிரக்கணக்கானோர் இறந்துபோனார்கள். அப்போது அந்த நோய்க்கான அறிகுறி, நோய் வந்தவுடன் வெள்ளை உடம்பில் ஒரு கட்டி வரும். அந்தக் கட்டி முற்றியதென்றால், கட்டியைச் சுற்றி ரோஸ் கலரில் ஒரு வளையம் வரும். அந்த வளையம் வந்தால் அந்தக் கட்டி உடையப் போகிறதென்று அர்த்தம். உடைந்தால் நாற்றம் வரும். அந்த நாற்றமடித்தால் யாரும் அருகில் வரக்கூடாது என்பதற்காக, பாக்கெட்டில் வாசனை திரவியங்களைப் போட்டுக்கொள்வார்கள்.

கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அப்போது பிளேக் நோய் பரவி ஏராளமான பேர் மடிந்தனர். பிளேக் நோய் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கென தனித்தனி குடியிருப்பு உருவாக்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக குடியேறிய பகுதி தேவாங்கர்பேட்டையானது. தற்போதைய ராம்நகர் பகுதியில் பிராமணர்கள் அதிகளவில் குடியேறியுள்ளனர். முன்பு அக்ராஹரம் என அழைக்கப்பட்டது. பின்னர் ராம்நகர் என மாற்றப்பட்டது.

வீடு இழந்த மக்களை குடியேற்றுவதற்காக மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடு ஆகியவற்றுக்கு இடையே இருந்த 350 ஏக்கர் தோட்ட நிலத்தை நகரசபை நிர்வாகமே வாங்கி விசாலமான மனையிடங்களாக பிரித்து கொடுத்தது. அந்தப் பகுதி பின்னாளில் கோவை நகரசபை தலைவராக இருந்த ரத்தினனசபாபதி முதலியார் முயற்சியில் வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே அந்த பகுதிக்கு அவரது பெயரும் சூட்டப்பட்டது. அதேபோல் அப்போது நகரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்களின் பெயரால் சாலைகளும் அமைக்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம், புலியகுளம், பாப்பநாயக்கன்பாளையம் போன்ற கிராமங்கள் தனித்தனியாக தான் இருந்தன. நாளடைவில் கோவை நகர வளர்ச்சியில் இந்த பகுதிகளும் இணைக்கப்பட்டன.


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2