கொங்குநாட்டுத் தங்கம் - எஸ்.ஏ.நடராஜன்

 Tuesday, April 9, 2019  03:30 PM

உலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படம் பிறந்த பிறகு நன்மையின் உருவமாக வடிக்கப்பட்ட கதாநாயகனின் ஆளுமைகளை நிலைநாட்ட, தீமையின் உருவமாக வடிக்கப்பட்டுவரும் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது.

கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம் உயர்ந்து நின்றுவிடும் பல படங்கள் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் 40-களிலேயே தென்பட்டது. பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ சிறந்த உதாரணம். அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’யில் கதாநாயகன் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, அந்தப் படத்தில் மொட்டை அடித்துக்கொண்டு ராஜகுருவாக மிரட்டிய எம்.என்.நம்பியாரையே தூக்கிச் சாப்பிட்ட வில்லன் வேடத்தை அந்தப் படத்தில் ஏற்று நடித்தவர் எஸ்.ஏ.நடராஜன்.

நாடக உலகிலிருந்து சினிமாவுக்குக் கிடைத்த நல்முத்து. ஆர். நாகேந்திர ராவ், ரஞ்ஜன், எம்.என். நம்பியார், எஸ்.வி. ரங்கா ராவ், எம்.ஆர். ராதா, வீ.கே.ராமசாமி என்று வயதிலும் அனுபவத்திலும் மூத்த பத்துக்கும் அதிகமான வில்லன் நடிகர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த ஐம்பதுகளில் ‘மந்திரிகுமாரி’ என்ற ஒரே படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார் இந்த நடராஜன்.

பெரும்புகழ் தந்த ‘மந்திரிகுமாரி’

மாடர்ன் தியேட்டர்ஸின் வெற்றித் தயாரிப்பான ‘மந்திரிகுமாரி’ படத்தை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. அதில் அவர் எழுதிய வசனங்கள் அன்று திரையுலகுக்கு வெளியேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. எம்.ஜி.ஆர். கதாநாயகன். கதாநாயகனைவிடக் கதாநாயகி மாதுரி தேவியின் வேடமே அதில் முதன்மையானது. அதையும் தூக்கிச் சாப்பிட்டது எஸ்.ஏ.நடராஜன் ஏற்ற வில்லன் வேடம். முல்லை நாட்டு அரசரின் மகள் ஜி.சகுந்தலாவும் மந்திரியின் மகள் மாதுரிதேவியும் உயிர்த் தோழிகள். அரசனைத் தனது தலையாட்டி பொம்மையாக வைத்திருக்கும் ராஜகுருவான எம்.என்.நம்பியாரின் மகன் பார்த்திபனாக நடித்தார் எஸ்.ஏ.நடராஜன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் கொள்ளைக்கூட்டத்தின் தலைவன்.

கொங்குநாட்டுத் தங்கம்

இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட சோமனூத்து என்ற ஊரில் 1918-ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.ஏ.நடராஜன். கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் தொடக்கல்வி பயின்று தேறினார். மேல்நிலைக்கல்வி பயில கோவையில் இருந்த தன் அண்ணன் வீட்டுக்குச் சென்றார். தஞ்சை ‘நவாப்’ ராஜமாணிக்கம் பிள்ளை நாடக கம்பெனி திருப்பூரில் முகாமிட்டு ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தது. தொழில்நிமித்தமாக திருப்பூர் சென்ற அண்ணன், நடராஜனையும் அழைத்துசென்று அந்த நாடகத்தைக் காட்டினார்.

அதைக் கண்டு அக்கணமே நாடகக் கலையின்பால் மனதைப் பறிகொடுத்தார் நடராஜன். வீட்டுக்குத் தெரியாமல் ரயிலில் திருப்பூருக்கும் திருச்சிக்கும் நாடகம் பார்க்கச் சென்றார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் இளைஞராக வளர்ந்து நின்றபோது, ‘நவாப்’ ராஜமாணிக்கம் கம்பெனி கோவையின் எடிசன் அரங்கில் முகாமிட்டு ‘பவளக்கொடி’ நாடகத்தை நடத்திவந்தது. தினசரி எடிசன் அரங்கில் தவமாய்க் கிடந்த 16 வயது நடராஜனைத் தனது குழுவில் சேர்த்துக்கொண்டார் ராஜமாணிக்கம்பிள்ளை.

Vanavil New1

‘கன்னியின் காதலி’ படத்தில்...

உருண்டையான விழிகளும் நீளமான புருவங்களும் கொண்ட நடராஜனுக்கு முதலில் கிடைத்தவை பெண் வேடங்கள். அடுத்த 4 ஆண்டுகளில் பவளக்கொடியாகவும் வேடம் கட்டினார். ஆனால், அவரது வெண்கலக்குரல் காரணமாக அவருக்கு விரைவிலேயே ‘கள்ள பார்ட்’ எனப்படும் வில்லன் வேடங்கள் கொடுக்கப்பட்டன. ராஜமாணிக்கம் கம்பெனியில் எம்.எம்.நம்பியார், கே.டி.சீனிவாசன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எனப் பலர் நடராஜனுக்கு நண்பர்கள் ஆனார்கள். கம்பெனி கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தபோது, ‘இன்பசாகரன்’ நாடகத்தில் உத்தமபாதன் வேடத்தில் நடித்துவந்த எம்.என்.நம்பியார் சினிமா படப்பிடிப்புக்குச் சென்று திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எம்.என்.நம்பியாருக்குப் பதிலாக அந்த வேடத்தில் நடித்து நாடக ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றார் நடராஜன்.

அதன் பின்னர் நடராஜனுக்கும் திரைப்படங்களின் பக்கம் கவனம் திரும்பியது. இதனால் தினசரி 5 ரூபாய் சம்பளம் பெற்றுவந்த நாடக நடிகரான நடராஜன், ‘நவாப்’ ராஜமாணிக்கம் கம்பெனியிலிருந்து விலகி சேலம் வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடினார். சேலம் மீனாட்சி பிலிம் கம்பெனியாரின் சிபாரிசில் டி.ஆர். சுந்தரம் இயக்கிய ‘சதி சுகன்யா’ (1942) படத்தில் துணை வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்துவாய்ப்புக் கிடைக்காமல் திரும்பவும் நாடக மேடையேறியனார். என்றாலும் சினிமா இழுத்துக்கொண்டே இருந்தது. ஜுபிடர் தயாரிப்பில் கே.ராம்நாத் இயக்கிய ‘கன்னியின் காதலி’ படத்தில் வசந்தபுரி மன்னனாக நடித்ததும் ரசிகர்களின் பார்வை இவர் மீது விழுந்தது. இந்தப் படத்தில்தான் நூறு ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டு, ‘கலங்காதிரு மனமே...’ என்ற தனது முதல் பாடலை எழுதி திரையுலகில் அறிமுகமானார் கவியரசர் கண்ணதாசன்.

வியத்தகு வில்லன் நடிகர்

அதன் பின்னர் ‘மந்திரிகுமாரி’யும் ‘மனோகரா’வும் எஸ்.ஏ.நடராஜனை வியத்தகு வில்லன் நடிகராக மாற்றின. பல படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார் என்றாலும், தமிழ் சினிமா வரலாறு நினைவில் கொள்ள வேண்டிய வியத்தகு வில்லன் நடிகராக முத்திரை பதித்தார். முப்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்த நடராஜன், ‘நல்ல தங்கை” (1955) என்ற படத்தைத் தனது ஃபார்வட் ஆர்ட் பிலிம்ஸ் கம்பெணி மூலம் தயாரித்து இயக்கவும் செய்தார்.

இந்த முயற்சி வெற்றிபெற்றாலும் ஏ.பி.நாகராஜனின் கதை வசனத்தில் நடராஜன் தயாரித்த ‘மாங்கல்யம்’ உள்ளிட்ட சில படங்கள் அவருக்குப் பெரும் பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தின. அதனால் நொடித்துப்போனவர் அதன்பின் எழவே இல்லை. 90 வயதில் சென்னை வந்த எல்லீஸ் ஆர். டங்கன், தாம் பாதிவரை இயக்கிய ‘மந்திரிகுமாரி’ படத்தில் நடித்த நடிகர்களைப் பார்க்கவிரும்பினார். முக்கியமாக எஸ்.ஏ.நடராஜனை. ஆனால், அவர் அப்போது காலமாகியிருந்தார்.

-- -- நன்றி தி இந்து தமிழ், படங்கள் உதவி : ஞானம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2