கோவையை கலக்கும் மூன்று நண்பர்கள் தொடங்கிய 'பர்ப்பிள் ஐயர்னிங்'

 Sunday, March 17, 2019  04:30 PM

வேகமாக பயணிக்கும் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கும் நாம், அன்றாடம் உடுத்தும் துணியை சரியான முறையில் பராமரிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்தத் தேவையை உணர்ந்து எழுந்த எண்ணமே 'பர்ப்பிள் ஐயர்னிங்' நிறுவனமாக உருவெடுத்தது.

அன்றாட நிறுவன வேலைகளுக்கு இடையில், தமிழ் யுவர்ஸ்டோரி குழுவிடம் எளிமையாக பேசினார் 'பர்ப்பிள் ஐயர்னிங்' Purple Ironing நிறுவனர் விஜய். கோவையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்து 15 வருட வேலை அனுபவத்திற்குப் பின்னர், தனக்கென்று ஒரு முத்திரை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் தனது நண்பர் அமனுடன் கலந்து ஆலோசித்தார். இருவருக்கும் ஒரே நோக்கங்கள் இருப்பதை அறிந்தவுடன், பல்வேறு தொழில்முனைவு யோசனைகளைப் பற்றி உரையாடி, இறுதியில், சீரில்லாத் துறையை சீரமைப்பது முக்கியம் என்று உணர்ந்து பர்ப்பிள் ஐயர்னிங் நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்தனர்.
பர்ப்பிள் ஐயர்னிங் தொடக்கம்

ஊர் முழுவதும் சலவைக்கென்றே நிறுவனங்கள் இருப்பினும், இஸ்திரியிடலுக்கு ஒரு சிறந்த நிறுவனம் என்று எதுவுமில்லை. இதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, இஸ்திரி தொழிலை விஜய் மற்றும் அமன் இருவரும் இணைந்து துவங்கினார். நான்கு மேஜைகளை வைத்தே ஆரம்பித்த இந்த நிறுவனம், இன்று பல ஊழியர்களுடன் பலருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது.

பர்ப்பிள் ஐயர்னிங் சிறப்பு :

பல வருடங்களாக மக்கள் மின் மூலமாகவும், நிலக்கரி மூலமாகவும் ஐயர்ன் செய்வதை மாற்றி, பர்ப்பிள் ஐயர்னிங் நீராவியை வைத்து இஸ்திரியிடுவதை அறிமுகப்படுத்தியது. இந்த முறையின் மூலம் துணிகள் சுகாதார முறையில் இஸ்திரி செய்யப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர். இது போன்று வேறு எங்கும் செய்யாததால், இவர்களுக்கு சாதகமாகவே இந்தத் தொழில் அமைந்தது.

'இந்தத் தொழில் மக்கள் சார்ந்தது. நாங்கள் தரம், சீரான பணி, நேரத்தில் விநியோகம் செய்வதையே முக்கியமாகக் கொண்டு செயல்பட்டோம். இதன் மூலம் மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்தோம். இதைச் சரியாக பயன்படுத்தாதவர்களே சந்தையில் தொழிலை இழக்கிறார்கள்' எனிகிறார் விஜய்.

இணை நிறுவனர்களின் பங்களிப்பு :

பர்ப்பிள் ஐயர்னிங், 2013-ல் தொடங்கப்பட்டது. பலரது ஊக்கத்தைப் பெற்று தொடங்கிய இந்நிறுவனம், பலரது அறிவுரைகளுக்கு ஏற்றார் போல் தங்களது அணுகுமுறைகளை கொண்டிருந்தனர். இந்த நிறுவனத்திற்குத் தகுந்த பக்கபலம் இருந்தும், ஒரு வித்தியாசமான விதத்தில் தொழிலுக்குத் தேவையான பணத்தை ஈட்டினர்.

Vanavil New1

விவேக், விஜய் மற்றும் அமனின் நண்பர். இவர் இந்நிறுவனத்தில் சேர்ந்தவுடன் நிறுவன விரிவாக்கம் பற்றிய முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். வங்கியில் நிதியுதவிக்காக அணுகிய போது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இவர்களுக்கு உதவியது. நிறுவனம் தொடங்கியபோது இருந்த மின் பற்றாக்குறை மற்றும் ஊழியர்கள் பணியமர்த்தல் போன்ற பிரச்சனைகளை கிடைத்த நிதியைக் கொண்டு சிறப்பாக கையாண்டுள்ளனர்.

புதிய அணுகுமுறை மற்றும் வருவாய்

இந்த இஸ்திரி பணியை செய்வதற்கு, எந்த விதமான கருவிகளும் தேவையில்லை. மக்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக, விநியோகத்தை பரவலாக அமைத்தார்கள். கோவையில் ஒரு கிளையுடன் தொடங்கிய இவர்கள், 2 வருட காலத்திற்குள் பல கிளைகளை அமைத்தார்கள்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து இஸ்திரிக்கு துணி வாங்குவதை இரண்டு முறையாக பிரித்தனர்: ஒன்று கிளை அமைத்து துணியை பெற்றுக்கொள்வது, இரண்டாவது வாடிக்கையாளர்களின் வீட்டிற்கேச் சென்று துணியை பெற்றுக் கொள்வது.

நிறுவன முறையில் சில மாற்றங்கள் விதிக்கப்பட்டவுடன், தொழிலில் பல முன்னேற்றங்களைக் கண்டனர் இந்நிறுவனர்கள். மக்களுடைய அனைத்து சலவை சம்பந்தப்பட்ட தேவைகளுக்கும், ஒரே நிவாரணமாக பர்ப்பிள் ஐயர்னிங் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்ததால் 'வாஷ் ஹவுஸ்' என்னும் கோவை சலவை நிறுவனத்தை கையகப்படுத்தி, பர்ப்பிள் ஐயர்னிங் நிறுவனத்துடன் இனணத்துக் கொண்டனர்.
வருங்கால திட்டங்கள்

தரத்தையும், நேரத்தையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தினர். சிறிதாகத் தொடங்கி இன்று இந்த நிறுவனம் 36 பேர் கொண்ட குழுவுடன் செயல்படுகிறது. பர்ப்பிள் ஐயர்னிங் விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தினால், இந்நிறுவனம் இந்தியா முழுவதும் கிளைகளைப் பரப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்பு, அதனுடைய நன்மையையும், தீமையையும் முன்னரே அறிந்து ஆராய வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப செயல்பட்டால் வெற்றி நிச்சயம்', என்று கூறுகிறார் விஜய்.

நண்பர்கள் ஒன்று கூடி வெளியே சென்று மகிழ்வதையும் தாண்டி, ஒரு சிறந்த தொழிலையும் நிறுவ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கோவை நண்பர்கள் திகழ்கின்றனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2