கோவையில் மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரிப்பு: கருத்தரங்கில் தகவல்

 Saturday, March 16, 2019  12:28 PM

கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து வருவதாக தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய போதை விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுதில்லி தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம், பாரதியார் பல்கலைக்கழக சமூக பணித் துறை, குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித் துறை ஆகியவற்றின் சார்பில், போதைத் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை கருணை மறுவாழ்வு இல்லம், போதைத் தடுப்பு மையத்தின் ஆலோசகர் டீ.ஷீலா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

Vanavil New1

சர்வதேச அளவில் 6 சதவீத மக்கள் போதைக்கு அடிமையாகி இருக்கின்றனர். கோவையில் இளைஞர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. அண்மைக் காலத்தில் போதைக்கு பெண்களும் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். சந்தையில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைப் பொருள்கள் புழங்கி வந்தாலும் அதிகபட்சமாக புகையிலை, ஆல்கஹால், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்களில் அதிகமானோர் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் சிலர், நண்பர்களின் உந்துதல், போதைப் பொருள்களைப் பற்றிய தவறான கருத்துகள், விளையாட்டாக பயன்படுத்துதல் ஆகிய காரணங்களால் போதைக்கு அதிகமானோர் அடிமையாகி வருகின்றனர். போதைக்கு அடிமையாகும் நபர்களின் தன்னம்பிக்கை குறைவதுடன், வேலைத் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது. உடல், மன ஆரோக்கியம் பெரிதும் பாதிப்பதுடன், மாணவர்களின் படிப்புத் திறனும் குறைகிறது. போதையைக் கட்டுப்படுத்த சுயக்கட்டுப்பாடு அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் திலீப்குமார், ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் பி.பேபி ஷகிலா, பாரதியார் பல்கலைக்கழக சமூகப் பணித் துறைத் தலைவர் லவ்லினா லிட்டில் பிளவர், கல்லூரியின் முதுகலை சமூகப் பணித் துறைத் தலைவர் அழகர்சாமி, சங்கீதாஆண்டனி உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2