பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் கைதானவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து ஆர்ப்பாட்டம்

 Friday, March 15, 2019  02:30 PM

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தால் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் முகநூல் (பேஸ்புக்) மூலம் நட்பாக பழகி, பின்னர் அவர்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக வீடியோ எடுத்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று காலை 11 மணிக்கு, திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தின்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பறை அடித்து பாட்டு பாடினார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்காது. எனவே, அவர்களை மக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிளக்ஸ் பேனரில் உள்ள கைதானவர்கள் 4 பேரின் உருவப்படத்தின்மீது துடைப்பத்தாலும், செருப்பாலும் மாறி, மாறி அடித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெய்வேலி புதுநகர் 14-வது வட்டத்தில் உள்ள ஜவகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழக்கம்போல் நேற்று காலை மாணவ-மாணவிகள் வந்தனர். ஆனால் அவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல், நுழைவு வாயில் முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Vanavil New1
பின்னர் கல்லூரியில் இருந்து மாணவ-மாணவிகள், பேரணியாக சூப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவ-மாணவிகள் நேற்று காலை 10.45 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து பொறியியல் துறை கல்லூரி வளாகம் முன்பு ஒன்று திரண்டு தரையில் அமர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் கைதானவர்களை தூக்கிலிட வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அண்ணாமலைநகர் போலீசார் விரைந்து வந்து, மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ- மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பொள்ளாச்சி நகரம் போராட்ட களமாக மாறியது. நேற்று பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது.

இதையடுத்து பொள்ளாச்சியில் உள்ள குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற நகராட்சி அலுவலகம் எதிரே தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 350 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வால்பாறையில் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை தர்ணா போராட்டம் நடத்தினர்.

தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு மாணவிகள் அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ரெயிலடியில் பல்வேறு தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சை கோர்ட்டு முன்பு சாலையின் குறுக்கே நின்று தஞ்சை வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர் ஊரீசு கல்லூரி மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவிகள் போராட்டம் நடந்த அதேவேளையில் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பணிபுரியும் பெண் வக்கீல்கள் அனைவரும் வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2