மனதை விட்டு அகலாத அந்த மதுக்கரை சம்பவம்....

 Wednesday, March 13, 2019  08:30 PM

குட்டி யானையும், அதை காப்பாற்றப் போன தாய் யானையும் ரயிலில் அடிபட்டு இறந்த சோக சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் ஆகிறது. அதன்பிறகு ஆறே மாதங்களில் இதே வாளையாறு கேரள பகுதி ரயில்பாதையில் அடிபட்டு மற்றொரு யானை இறந்தது. பிறகும் அது தொடர்கதையானது. அதில் சில சம்பவங்கள் கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. அதில் ஒன்றுதான் இப்பகுதியில் ஒன்றான குரும்பபாளையத்தில் 10 வருடங்களுக்கு முன்பு நடந்த சோகம்.

வாளையாறு ரயில்பாதையையே பிடித்துக் கொண்டு கிழக்கு நோக்கி வந்தால் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த குரும்பபாளையம். தமிழகப் பகுதியான இக்கிராமத்தில் ரயில்வே தண்டவாளம் பெரிய ஒரு பள்ளத்தாக்கில் சில கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. அதற்கு இருபுறமும் பல கிராமங்கள் உள்ளன.

யானைகள், காட்டு மிருகங்கள் வராது இருக்க அகழிகள், மற்ற விவசாயிகள், பொதுமக்கள் நுழையாமல் இருக்க தனியார் சோதனைச் சாவடிகள், அத்துமீறுபவர்களை பிடித்து தண்டிப்பதற்கு பாதுகாவலர்கள் என இங்கே போடப்பட்டனர். இதில் விவசாயிகள் போராட்டங்களும் எழுந்தன. அதையும் அடக்க அதிகார துஷ்பிரயோகங்கள் பயன்பட்டன. இதில் இங்கே எஞ்சியிருந்த விவசாயிகள் துவண்டனரோ இல்லையோ காட்டு மிருகங்கள், குறிப்பாக காட்டு யானைகள் மிகவும் துவண்டன. தம் வழித்தடம் தெரியாமல் தவித்தன.

ஏற்கெனவே தெற்கில் பெரிய ஒரு கல்வி நிறுவனம், அவை போட்டிருக்கும் தடுப்புச் சுவர்கள், மின்வேலிகள். கிழக்கிலும், தென் மேற்கிலும் பிரம்மாண்ட சிமெண்ட் பாக்டரிகள், அவற்றுக்கான குவாரிகள், வேட்டு வெடிச் சப்தங்கள். வடகிழக்கில் இப்படியொரு புதிய நவீன நகரம். அதற்குள் நுழைய முடியாது தடுக்க ஆகப்பெரும் அகழிகள் கண்டு துவண்ட யானைகள் திக்குத் தெரியாமல் அல்லாடின.

அதில் ஏழு யானைகள் கொண்ட ஒரு யானைக் கூட்டம் இங்கே உள்ள எட்டிமடை, கோவைபுதூர், பச்சாபள்ளி, பரிபூர்ணா எஸ்டேட், எட்டிமடை, மதுக்கரை, மைல்கல் என நுழைய ஆரம்பித்தன. போகிற இடங்களில் எல்லாம் வாழை, சோளம், தென்னை என சகலத்தையும் கபளீகரம் செய்ய ஆரம்பித்தன.

அவற்றை அந்த கிராம மக்கள் வெடி வைத்து விரட்ட, அங்கும் இங்கும் அலைபாய்ந்து கிழக்கே என்.எச் 47 எனப்படும் கொச்சின்- பெங்களூர் சாலையையும் கடந்தது. கடந்ததோடு நில்லாது இங்கிருந்து குறிச்சி, வெள்ளலூர், போத்தனூர், இடையர்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, சூலூர், கலங்கல், செட்டிபாளையம், சின்னக்குயிலி, பெரியகுயிலி, என சுமார் 40 கிலோமீட்டர் தூரம் நகர்ந்தது. இந்த ஊர்கள் எல்லாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் பல்வேறு ஊராட்சிகளை உள்ளடக்கியவை.

வனத்துறையினர் இந்த யானைகளை மேற்கு நோக்கி விரட்டி வருவதும், அவை பகலில் அங்கங்கே பதுங்கி, இரவு நேரங்களில் திரும்ப ஊருக்குள் புகுவதும், அவற்றை பட்டாசு வெடித்து விரட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

இந்த யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்கள் பலர் படுகாயமுற்ற சம்பவமும், யானை மிதித்து ஒருவர் இறந்த சம்பவமும் அப்போது நடந்தது. வேறு வழியில்லாது டாப் ஸ்லிப்பிலிருந்து கும்கி யானைகளும் கொண்டு வரப்பட்டன. கும்கியையும் தாக்கும் அளவு காட்டு யானைகளின் மூர்க்கம் இருந்ததால் அவையும் பின்வாங்கி விட்டது. என்றாலும் இந்த கூட்டத்து யானைகளின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது.

இந்த நிலையில்தான் 2008 பிப்ரவரி மாதத்தின் 2 ஆம் ஞாயிற்றுக்கிழமை நாளில் அந்த துயர சம்பவம் நடந்தது. இந்த கூட்டத்து யானைகள் மதுக்கரை காட்டை விட்டு வெளியேறி மதுக்கரை குரும்பபாளையம் ரயில்வே டிராக்கில் வந்துள்ளன. நள்ளிரவு 1.10 மணி. கூட்டத்து யானைகளை ஒற்றை யானை வழிநடத்த மற்ற யானைகள் பின் தொடர்ந்துள்ளன.

இப்பகுதியில் தண்டவாளம் வளைவான பாதையில் செல்கிறது. தவிர இந்த பாதை பத்தடி முதல் பதினைந்தடி ஆழமுள்ள பள்ளத்தாக்காக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்கிறது. இந்தப் பள்ளத்தில் வழிகாட்டி யானை இறங்கி செல்ல கூடவே மற்ற இரண்டு யானைகளும் இறங்கியிருக்கின்றன. அந்த சமயம் பார்த்து ஈரோட்டில் இருந்து பாலக்காடு நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயில் வந்திருக்கிறது.

அதில் கடைசியாக இறங்கிய யானை மாட்டிக் கொண்டு நூறு மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு சின்னாபின்னமாகி விட்டது. அப்படி அடிபட்ட யானை நிறைமாத கர்ப்பிணி. அதன் வயிறும் கிழிக்கப்பட்டு அதில் உயிர்ப்புடன் இருந்து யானையின் சிசுவும் தூக்கியெறியப்பட்டு தண்டவாளத்திலேயே விழுந்து மூச்சை அடக்கியிருக்கிறது.

இப்படி அடிபட்ட தாய் யானையின் மரணப்பிளிறல் கேட்ட முன்னே சென்ற மற்ற இரண்டு யானைகள் ரயிலின் பக்கவாட்டில் மோதி அவையும் மரணத்தைத் தழுவின. கடைசியாக வந்த ஒன்றிரண்டு யானைகள் இந்த படுபயங்கர சம்பவங்களைப் பார்த்து, பிளிறி ரயில்வே டிராக்கில் இறங்காமல் வந்த வழியே திரும்ப ஓடி காட்டுக்குள் மறைந்தன. இதனால் அந்த நள்ளிரவு குரும்பபாளையம் மட்டுமல்ல, சுற்றுப் பத்து பதினெட்டு பட்டிகளும் தூக்கத்தை தொலைத்து சோகத்தில் மூழ்கியது.

இரவில் நடந்த சம்பவத்தில் யானைகள் இறந்தது மட்டுமல்ல, ரயிலின் சில சக்கரங்களும் தடம் புரண்டு விட்டன. எனவே ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.


Vanavil New1
அதே சமயம் தொடர்ந்து யானைகளின் பிளிறல் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. அதனால் உடனுக்குடனே அங்கே கூட்டம் திரண்டு விட்டது. அந்த யானைகள் இறந்த பகுதியில் உள்ள வனாந்திரத்தில் தப்பித்துச் சென்ற ஒற்றை யானை ஒன்றும், வேறு ஒரு குட்டியானை ஒன்றும் மூர்க்கத்துடன் நிற்பதாக மக்களிடம் பேச்சு அடிபட்டது.

ஒரு யானை இறந்துவிட்டாலோ, குட்டி இறந்து விட்டாலோ கூட்டத்தில் உள்ள யானைகள் அவ்வளவு சுலபமாக அந்த இடத்தைவிட்டு செல்லாது. அவை இறந்து கிடக்கும் உடலை அப்படி இப்படி புரட்டி எடுக்கும். உண்மையிலேயே விழுந்து கிடக்கிற யானை இறந்துதான் விட்டதா என்பதை பலமுறை சோதிக்கும். அதேபோல் தன்னால் அடித்துக் கொல்லப்பட்ட மனிதன் உயிரோடு இருக்கிறானா? இல்லையா என்பதிலும் கூட பெருத்த சந்தேகம் கொள்ளும்.

எனவே பிணவாடை அடிக்காமல் அந்த இடத்தை விட்டு நகராது. அப்படித்தான் கோவை குற்றாலத்தில் சிறுமியை கொன்ற ஒற்றையானை கூட அந்த இடத்திலேயே அரைமணி நேரத்திற்கும் குறையாமல் நின்றிருந்தது. சிறுமியிடம் பிணவாடை அடித்த பின்பே நகர்ந்தது.

அதேபோல் இங்கே தன் குடும்பமே இறந்து கிடப்பதை மற்ற இரண்டு யானைகள் (அதில் கொம்பன் யானையும் கூட) கண்டிப்பாக எதிர்கொள்ளும். சுற்றியிருப்பவர்களை தாக்கும் என்பதால் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் விரட்டினார்கள்.

அதில் ஆண் யானை விடிந்த பிறகே அந்த இடத்தை விட்டு அகன்றது. விடியலில் ரயில்வே மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் எல்லாம் வந்தார்கள். அங்கே கண்ட காட்சி மனதைப் பிழிய வைப்பதாகவே இருந்தது.

அப்பெரிய பள்ளத்தாக்கில் இரைதேடும் மலைப் பாம்பை போல நீண்டு கிடந்தது தண்டவாளம். அந்த தண்டவாளத்தின் தெற்குப்பகுதியில் இரண்டு யானைகள் குன்றுகள் சாய்ந்து கிடந்ததுபோல் கிடந்தது.

அங்கிருந்து 100 அடிதூரத்தில் வடபுறப்பகுதியில் தாய் யானை வயிறு கிழிந்த நிலையில் இருந்தது. அதற்கும் முன்னே சில அடி தூரத்தில் கத்திரிப்பூ, கனகாம்பரப்பூ இரண்டும் கலந்தால் எப்படியிருக்கும்? அந்த கரிய செந்நிறத்தில் அப்பழுக்கில்லாத விநாயகர் போல் தன் தாயின் வயிற்றில் இருந்து பிதுங்கி மரித்துக் கிடந்தது. அங்கே பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

அதைப் பார்ப்பவர்கள் யாரும் உச்சு கொட்டாமல் அங்கிருந்து நகரவில்லை. 'அடப்பாவி யானைகளா? இப்படி அநியாயமா உசிரை விடத்தான் பத்திருபது நாளா எங்ககிட்ட எல்லாம் கண்ணாமூச்சி விளையாடினீங்களா?' என மனிதர்களுடன் பேசுவது போலவே பெண்கள் கனிந்துருகி வெளிப்படையாக வார்த்தைகளை உதிர்த்துச் செல்வதையும் காண நேர்ந்தது.

அங்கு விடியும் முன்பே வந்துவிட்ட உள்ளூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மூர்த்தியிடம் பேசியபோது, ''இந்த இடத்தில் ரயில் எல்லாம் மெதுவாத்தான் வரும். அதுதான் சட்டுனு யானைகள் மோதின வேகத்தில் தடம்புரண்டு நின்றுவிட்டது. முழு வேகத்தில் ரயில் வந்திருந்தால் யானைகளை அடித்து தள்ளிவிட்டு போயிருக்கும்!'' என குறிப்பிட்டார்.

அந்த இடம் தமிழகப்பகுதியை சேர்ந்தது என்றாலும், ரயில்வே கோட்டம் பாலக்காடு என்பதாலும், காட்டு யானைகள் பாதுகாப்பில் இருமாநில அதிகாரிகளுக்கும் பொறுப்புள்ளதாலும் தமிழக, கேரள வனத்துறை, ரயில்வே உயர் அதிகாரிகள் அங்கே குழுமி விட்டனர்.

விபத்துக்கு காரணம் :

இப்படி ஒரு கோர விபத்துக்கு காரணம் வனத்துறையின் அலட்சியம்தான் என்று ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ரயில்களின் வேகம்தான் என்றும் இயற்கை ஆர்வலர்களிடம் புகார்கள் கிளம்பின. இருவேறு மாநிலத்திலிருந்து வந்த மீடியாக்களிடமும் இதேபோன்று இருவேறு குற்றச்சாட்டுகள் இருந்தன.

''இந்த வாளையாறு -மதுக்கரை ரயில்வே லைனுக்கு இடைப்பட்ட பகுதியில் இதுபோல இரண்டு சம்பவங்கள் நடந்துவிட்டது. இது மூன்றாவது. இதில் இதுவரை ஏழு யானைகள் இறந்துள்ளன. இவ்வளவு பெரிய உருவங்கள் ரயில்வே லைனை கடக்கும்போது தூரத்திலேயே ரயிலை ஓட்டிவரும் என்ஜின் டிரைவருக்கு தெரியாதா? அப்படி கண்ணுக்கு தெரியும்போது வண்டியை நிறுத்தும் மிதவேகத்தில் ரயிலை செலுத்த முடியாதா? இந்த யானைகள் மூன்று மாதமாக இங்கேதான் சுற்றித் திரிந்துள்ளன. அவை எங்கே செல்கின்றன. எந்த திசையில் நகர்கின்றன என்பதை கண்காணிப்பதற்குத்தான் வனத்துறை இருக்கிறது.

-- நன்றி தி இந்து தமிழ் நாளிதழ், யானைகளின் வருகை தொடர் 6, 7.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2