கொங்கு நாட்டு காப்பியங்கள்

 Wednesday, March 13, 2019  02:20 PM

‘மான்படுகாடு, தேன்படுவரை, மீன்படுசுனை, பொன்படு குட்டம்” என்று கல்வெட்டுகள் கொங்கின் இயற்கை வளத்தை பேசும். கொங்கு, சங்ககாலம் முதல் தனி நாடாகவே விளங்கியது. சங்கச் சான்றோர்களாகிய புலவர்கள், புரவலர்களாகிய வேளிர்தலைவர்கள், சீருர் மன்னர்கள், பாரி, ஓரி, காரி, பண்ணன், பழையன், குமணன் போன்ற கொடை வள்ளல்கள். அத்தி, அதிகன், பூந்துறை, கொடுமுடி போன்ற வீரர்களும் சிறந்து விளங்கின. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்ட இனக்குழுக் குடியரசும், கொங்கு நாடு கடந்து வணிகரும், வேளாளரும் சேர்ந்து அறப்பணி செய்த சித்திர மேழிப் பெரிய நாட்டவையும் கொங்கு மண்ணுக்குப் புகழ் சேர்த்தன.

ஊரவை, நாட்டவை போன்ற தன்னாட்ச்சி அமைப்புகள் மக்களாட்சியை மாண்புடன் நடத்தின. இன்றைய ஆத்தூர் வட்டம், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல். ஈரோடு. கோவை, நீலமலை, தர்மபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களும் மங்களுர் வரை இருந்த பகுதிகளுடன் மைசூர், கோலார், பொன் வயலும் கொங்குப் பகுதியாக ஆதியில் விளங்கின. உலகப் புகழ் பெற்ற வணிக நகரங்களாகிய கொடுமணல், கரூர்வஞ்சி, முட்டம் போன்றவையும் பல வணிக பெரு வழிகளும் தாவளங்களும் சிறந்து இயங்கின. இத்தகைய கொங்கு மண்ணில் புகழ் பூத்த காப்பியங்கள் பலவும் தோன்றின. அவற்றை சுருக்கமாக ஆய்வதே இக்கட்டுரை ஆகும்.

காப்பியம் – விளக்கம்:

சிலம்பும் மேகலையும் தமிழில் தோன்றிய தனித்தமிழ் முதற் காப்பியங்கள். இரண்டும் புகழ் மிக்க மகளிரைத் தலைவியராகக் கொண்டு விளங்கின. விசயமங்கலம் பகுதியை ஆண்ட கி.பி 6 ம் நூற்றாண்டைச் சார்ந்த கொங்கு வேளிர் படைத்த பெருங்கதை பெருங்காப்பியமாக தோன்றியது. அதுவே தமிழில் வந்த அயல் சமய முதல் மொழி மாற்றுக் காப்பியம் ஆகும். “பிருகத்கதா” என்ற பெயரில் பைசாச மொழியில் குணாட்டியர் எழுதியதை இவர் தமிழில் கொங்கு மண்ணின் மனம் கமழக் காப்பியமாக படைத்தார் என்பர். கொங்கு வேளிர் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட புலவர்.

பெருங்கதையின் காலத்தில் காப்பிய இலக்கணம் இல்லை என்றாலும் பின் வந்த இலக்கணத்திற்குச் சிறந்த காட்டாகத் தன்னேரில்லாத தலைவன், மலை கடல், நாடு, நகர், வருணனை, மணம், முடிசூடல், மங்கல நிகழ்வுகள், படையெழுச்சி, அரசவை போன்றவை யாவும் இடம்பெற்றுள்ளன. சங்க காலத்தில் தோன்றிய தகடூர் யாத்திரையில் 44 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. பின்னர் தோன்றிய அண்ணன்மார் கதை (காவியம்) இக்காலத்துத் தோன்றிய தக்கை இராமயணம், திருவள்ளுவர் காப்பியம், பக்த மான்மியம், ராவணக் காவியம் போன்றவையும் குறிக்கத்தக்கன. சில கொங்கு புராணங்கள் காப்பியக் கூறுகளுடன் தோன்றினாலும் அவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.


விசய மங்கலம் நெட்டை கோபுரக் கோயில் என்னும் சமணக் கோயிலில் இருந்த பாலி மொழிக் கல்வெட்டு “பெருங்கதையின் அழகியலில் மனம் பறி கொடுத்து மூழ்கினோம்” என்று கூறக் காணலாம். இக்கதையின் முன்பகுதி பின் பகுதி கிடைக்கவில்லை. இக்காப்பியச் சிறப்பே கொங்கு பண்பாட்டை மகத நாட்டில் காண்பது ஆகும். மகத மண்ணில் வேளிர் தமிழ்ச் சேரி, வேளாளர் சேரி போன்றவற்றை படைத்துள்ளார். இதனைச்

“சிறந்த சீர்த்திக்குறிஞ்சிக் கோலக்

கல்லென் சும்மையொடு கார்தலை மணந்த
முல்லை முதுதிணைச் செல்வ மெய்திய
பாலையு நெய்தலும் வேலியாகக்
கோல மெய்திக்குறையா வுணவொடு”
என்றும்
“சால்பெனக்கிடந்த கோலப் பெரு நுகம்
பொறைக்கழி கோத்துப் பூண்;டனராகி
மறத்துறைப் பேரியாற்று மறுகரை போகி
அறத்துறைப் பண்டி யசைவிலர் வாங்கி”

என்றைக்கும் அரசுக்கு அணியமாக விளங்கும் பெருங்குடி மக்களாகிய வேளாளர்கள் அறச்சோறு அட்டியும் அம்பலசாலை அமர்ந்து அறம்பல புரப்பதையும் போற்றிக்கூறக் காண்க.

கொங்குமண் தந்த பிற காப்பியங்கள்:

சங்ககாலத்தில் புகழ் பெற்ற அதியமான்கள் ஆண்ட பகுதி தகடூர் பகுதியாகும். பங்காளிகளாகிய அதியமான் மீது சேரன் பெருஞ்சேரலிரும்பொறை (தகடூர்) மீது படையெடுத்து தகடூரை அழித்து அதியமானை கொன்ற செய்தியை கூறுவதே தகடூர் யாத்திரை ஆகும். உரையாசிரியர் நச்சினார்க்கு இனியர் தொன்மை என்பதற்குச் சான்றாக இதனை காட்டுவார். இப்போது புறத்திரட்டில் 44 பாடல்களே பதியப்பட்டுள்ளன. சங்கப் பாடல்களின் சாயல் கொண்ட இந்நூலின் பாடல் ஒன்றினைச் சான்றாக பார்க்கலாம்.

எற்கண்டறிகோ? எற்கண்டறிகோ?

என்மகனாதல் எற்கண்டறிகோ
கண்ணே கணைமூழ்கினவே தலையே
வண்ண மாலை வாளிவிடக் குறைந்தன
வாய பொரு நுனைப் பகழிமூழ்கலிற் புலால்வழிந்து
ஆவ நாழிகை அம்பு செறித் தற்றே”

என்னும் போர்க்கள வருணனைப் பகுதியால் அறியலாம்.

அண்ணன்மார் சாமி கதை (காப்பியம்):


Vanavil New1
நாட்டுப் புறப்பாடல் யாப்பில் உடுக்கடிப் பாடலாகத் தோன்றிப் புகழ் பெற்றது இக்காவியம். மெக்கன்சி வீரப்பூர் பகுதி கொங்குக் கோனாட்டில் உள்ளது என்பார். இதனைக் “கோனாட்டுக் கொற்றவனே குன்றுடையான் மைந்தனே” என்ற அடியால் அறியலாம். இதனைப் பொன்னர் சங்கர் கதை, குன்னுடையான் கதை என்றெல்லாம் கூறுவர். பாளையப்பட்டு வம்சாவழி தொகுதி மூன்றில் வேட்டுவப் பட்டக்காரர் கைபீதில் பாண்டி மன்னர்கள் சோழர்களை ஆதரிக்கும் கொங்கு வேளாளர்களை எதிர்க்கத் தங்களைக் காளகத்தியிலிருந்து அழைத்து வந்ததாகக் கூறக் காண்க. இதனைப் பட்டயக் காளிபாளையம் காளகத்தி ஈசுவரர் கோயில் கல்வெட்டும் உறுதிசெய்யும். இக்கதையில் வெல்ல முடியாத பொன்னர் சங்கரைத் தந்திரத்தால் கொன்ற செய்தி கூறப்பட்டுள்ளதைக் காண்க. மூன்று வகையான கதைப் பாடல்கள் வழக்கில் உள்ளன.

தக்கை இராமாயணம்:

தக்கை என்பது உடுக்கை போன்றது என்பர். அண்ணன்மார்சாமி கதை உடுக்கடிப்பாடலாக புகழ் பெற்று உலாவரக் கண்ட எம்பெருமான் கவிராயர் இராம கதையை உடுக்கடிப் பாடலாக, நாட்டுப்புற இசையில் பாடியுள்ளார். சான்றாக,

“நற்பொருளைச் செழுந்திருவை நாரியர்க்கெல்லாம் அரசைப்
பொற்பொலிவை இன்னமுதப் புலன் சுவையைப் பூமணத்தைச்
சொற்பொருளை அயன்முதலோர் துதித்து நல்லோர்க்கு வமை சொல்லும்
இற்பொலிவைப் புகழவென்றால் யாரை வேறுஉவமை சொல்வேன்”4

என்று சீதையின் அழகை வருணிக்கக் காணலாம்.

பக்த மான்மியம்:

பக்தர்களது பெருமை என்ற பெயர் கொண்ட இந்தக் காப்பியத்தை இராமானந்த சுவாமிகளைக் குருவாக ஏற்றுக் கொண்டு ‘இராமானந்தப் பெயர்கொடு எனது இதயத்திலங்கும் பெருமாளே”5 என்று பாடிய கந்தசாமி சாமிகள் பத்தி மணம்கமழப் பாடிய காப்பியமாகும். “பக்தமாலா” இதன் முதல் நூல் என்பர். சேக்கிழாரைப் பின்பற்றி இவரும் ஒவ்வொரு “கதி” யிலும் (உட்பிரிவு) முதற்பாடலில் சென்ற கதியில் இவரைப் பாடினேன். இக்கதியில் இவரைப் பாடப் போகின்றேன் என்பார். 98 கதிகள் கொண்ட இந்நூல் 7367 பாடல்களைக் கொண்டுள்ளது.

இராவண காவியம்:

புலவர் குழந்தை அவர்களால் புராண மறுதலைக் கோட்பாட்டின் வழி நின்று பாடியது இக்காவியம். இதன் சிறப்பினைப்,

“பாவண மல்கு மிராவண காவியம்

நாவண மல்கிய நல்லாசிரியனும்
செப்பினான் அறிவுல கொப்புமாறே”

என்ற பாவேந்தர் சிறப்புப் பாயிரத்தாலும், “இந்நூல் பழமைக்குப் பயணச்சீட்டு புதுமைக்கு நுழைவுச்சீட்டு ……. தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக்கீதம்” என்னும் அறிஞர் அண்ணாவின் உரையாலும் அறியலாம்.

முடிவுரை:

சங்க காலத்திலேயே கொங்கு மண்ணில் முப்பதிற்கும் மேற்பட்ட புகழ்மிக்க புலவர் பெருமக்கள் வாழ்ந்துள்ளனர். இடைக்காலத்தும் இக்காலத்தும் காப்பியம் படைக்கும் பாவலர் பலர் வாழ்ந்துள்ளனர். இவ்வாறு தமிழ் இலக்கியத்திற்குக் கொங்கின் மணம்கழும் வண்ணம் காப்பியம் படைத்தவர்களைப் பற்றிச் சிலவற்றைக் கண்டோம். இம்மண்ணில் பேரரசுகள் நிலைக்காவிடினும் பெருங்காப்பியம் படைத்த பெரும்புலவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது பெருமை தரும் செய்தியேயாம்.

சான்றெண் விளக்கம்:

பெருங்கதை (கொங்கு வேளிர்) பக்.496
பெருங்கதை (கொங்கு வேளிர்) பக்.500-501
கொங்கு கட்டுரை மணிகள் பக். 33-40
கொங்கு கட்டுரை மணிகள் பக். 39
கொங்கு கட்டுரை மணிகள் பக். 40
இராவண காவியம் சிறப்புப் பாயிரம்
இராவண காவியம் ஆராய்ச்சி முன்னுரை பக்.21– முனைவர் கா. அரங்கசாமி,கோபி


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2