அலைகடலென திரண்டு வரும் மக்கள் கூட்டம் - இப்போ காலம் மாறிப்போச்சு

 Tuesday, March 12, 2019  12:30 PM

திருப்பூர் மாவட்டம், பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் உள்ள, சின்ன கிராமம். பஸ் ஸ்டாப்பில், மக்கள் எதிர்பார்ப்புடன் குவிந்திருந்தனர். பிரசார கூட்டத்துக்கு, அந்த வழியாக, 'எம்.ஜி.ஆர்., வருகிறார்; வந்து கொண்டிருக்கிறார்' என, ஒலிபெருக்கியில் அறிவிப்பு, தொடர்ந்து ஒலிக்கிறது.இரவு, 10:00 மணியைக் கடந்து விட்டது. பஸ் ஸ்டாப் அருகிலேயே பெரிய திரை கட்டி, நம்நாடு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது; விசில் சத்தம். 'எம்.ஜி.ஆர்., வர, இன்னும் நீண்ட நேரமாகும்' என, தகவல் வந்தது.அப்போதும், யாரிடமும் உற்சாகம் குறையவில்லை. எம்.ஜி.ஆர்., வந்தது, நள்ளிரவை தாண்டி. அங்கே பெரும் கரகோஷம், ஆரவாரம். சிறுவர் --- சிறுமியர் சிலர், சாலையிலேயே உறங்கி விட்டனர். அவர்களை எழுப்பி, 'எம்.ஜி.ஆர்., வந்துட்டார் பாரு...' என பெற்றோர் ஆரவாரித்தனர். ஆனால், அதற்குள் எம்.ஜி.ஆர்., காரில் பறந்து விட்டார். சில வினாடிகள் தான் என்றாலும், எம்.ஜி.ஆரின் முகத்தை பார்த்த உற்சாகம், மக்களிடத்தில்.சிலர், எம்.ஜி.ஆர்., வந்த காரை தொட்டுப் பார்த்ததாக பெருமை பேசி கொண்டனர். எம்.ஜி.ஆரின் வசீகரத்துக்கு இணை சொல்வது கடினம் என்றாலும், அன்றைக்கு அரசியல் தலைவர்களை காண்பதற்கு, திரளானோர் காத்துக் கிடப்பது வழக்கமான ஒன்று.

மெல்ல மெல்ல, இந்த நிலை மாறி வந்திருக்கிறது. எப்பேர்ப்பட்ட தலைவர் என்றாலும் சரி, அவரை காண்பதற்கு ஆவலுடன் காத்து கிடப்பது என்பது, மாறி விட்டது.அரசியல் கட்சிகளின் விசுவாசத் தொண்டர்கள் வேண்டுமானால், மணிக்கணக்கில், தங்கள் தலைவர்களின் முகங்களைக் காண்பதற்காகவும், பேச்சைக் கேட்பதற்காகவும் தவம் கிடக்கலாம். ஆனால், மற்றவர்கள் அவ்வாறு காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இல்லையே!குவார்ட்டர், பிரியாணி, பணம், வேட்டி, சேலை என எல்லாம் கொடுத்தால் தான், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் திரளானோரை காண முடிகிறது.

மக்கள் வெள்ளத்தை காட்டுவதற்காக, லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய கட்டாயம்.கோவை உள்ளிட்ட இடங்களில், பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்க, ஒருவருக்கு, 500 - 750 ரூபாய் வரை செலவாகிறது என்கின்றனர், இதற்கென்றே உள்ள கான்ட்ராக்டர்கள். பிரதான கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும், பொதுக்கூட்டம் எனினும், செலவு செய்யாமல், கூட்டத்தை திரட்டி காட்ட முடியாது என்பதே, இன்றைய யதார்த்தம்.ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள், வசீகரம் மிக்கவர்களாக இருந்தும்கூட, தமிழகத்தில் அவர்களது பொதுக்கூட்டங்களுக்கே கூட, இப்படி எல்லாம் ஆள் சேர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

Vanavil New1

அப்படியிருக்க, வசீகரம் இல்லாத தலைவர்கள் உள்ள அரசியல் கட்சிகளின் நிலைமை திண்டாட்டம் தான்!ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. ஊடக வெளிச்சத்தில், தலைவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், முழுமையாக மக்களிடம் குறைந்து விட்டது. பொதுக்கூட்டம் என்பவை, இன்றும் ஆரவாரத்துடன் நடத்தப்பட்டாலும், இவையெல்லாம், எதிர்காலத்தில் சடங்குகளாகத் தான் இருக்க போகின்றன.சமீபத்தில் கட்சி துவங்கிய பிரபல நடிகர்,

கோவை மாவட்டம், ஆனைமலைக்கு வந்திருந்தபோது, அவரது பேச்சை கேட்க, 50 பேர் கூட இல்லை. இதனால், 'அப்செட்' ஆன அந்த நடிகர், 30 வினாடி பேசி, விருட்டென சென்று விட்டார்.அந்த நடிகரின் சுற்றுப்பயணத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னவோ, அவரது திரைப்படங்கள் குறித்தும், அவர் நடத்திய, 'டிவி' நிகழ்ச்சி பற்றியதுமாகவே இருந்தன.

இதுதான் இன்றைய யதார்த்தம்.பொதுக் கூட்டத்துக்காக, பணத்தை தண்ணீராக வாரிஇறைக்க வேண்டியிருப்பதால், பெரிய கட்சிகளோடு சிறிய கட்சிகள், கூட்டம் சேர்ப்பதற்காக மல்லுக்கட்ட முடியாது.எதிர்காலத்தில் பொதுக்கூட்டங்கள் என்ற மாயை காணாமல் போகக்கூடும். அரசியல் தலைவர் டில்லியில் இருந்தே, நாட்டின் எந்த மூலைக்கும் பேசலாம். பிரதமர் மோடி கூட, சமீபகாலமாக, இந்த பிரசார யுத்தியை பயன்படுத்த துவங்கி விட்டார். இதனால், வீண் செலவும் மிச்சம்; மக்களுக்கும் சிரமங்கள் குறைவு!


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2