பலா மரத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்....

 Monday, June 26, 2017  06:57 AM

மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே. மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் ஆரோக்கியத்தோடு வாழ வைக்கும் தன்வந்திரியாகவும் திகழ்கிறது.

பலா இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மரமாகும். இதில் ஆசினிப்பலா, கூழைப்பலா, வருக்கைப்பலா என பல வகைகள் உண்டு. பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதனை சக்கை பலவு, பலாசம், வருக்கை, ஏகாரவல்லி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

பலா இலை:

பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும். வாயுத் தொல்லைகள் நீங்கும். பலா இலைகளை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் அருந்திவந்தால் வாய்ப்புண் வயிற்றுப்புண், குடற்புண் ஆறும். பல்வலி நீங்கும். பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.

பலா பிஞ்சு:பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும். நீர்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும். உடலுக்கு வலு கொடுக்கும். வாத பித்த கபத்தை சீராக வைத்திருக்கும். நரம்புத் தளர்வைப் போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும் எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

பலாப்பழம்:

முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது. இரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு ஊக்கமளிக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும். மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும். பழுத்த நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. பலாப்பழத்தில் உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது.

பலாக் கொட்டை:

பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும். பலாக் கொட்டைகளை சுட்டும். அவித்தும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். வாயுத் தொல்லைகளை நீக்கும் பலாமரத்தின் பயன்களை முழுமையாகப் பெற்று நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup